’சங்கீதம் கேட்கும் போது என்னையே மறக்கிறேன்’- கர்நாடக இசை புரவலர் தொழிலதிபர் நல்லி குப்புசாமி!
நல்லி குப்புசாமி கர்நாடக இசையை மிகவும் நேசிப்பவர். அதன் காரணமாகவே, சென்னையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைவிழா மற்றும் இந்த இசை வடிவத்தின் புரவலராக இருந்து வருகிறார்.
கர்நாடக இசை தீவிர பயிற்சி, நுணக்கங்கள், கற்பனைத்திறன் ஆகிய அம்சங்கள் தேவைப்பட்டும் கலைவடிவமாக இருக்கிறது. இந்த கலை வடிவத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் மனிதர் பற்றி பார்க்கலாம்.
இந்த ஆண்டுக்கான இசை விழா சென்னையில் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் பட்டுப்புடவை வர்த்தகத்தில் புகழ்பெற்று விளங்கும் 79 வயதான நல்லி குப்புசாமி, கர்நாடக இசைக் கலையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சபாக்களை ஆதரிப்பதில் செலுத்தி வரும் பங்களிப்பு குறித்து அறிவதற்காக அவரை சந்தித்து பேசியது யுவர்ஸ்டோரி.
அழகும் நேர்த்தியும்
எம்.எஸ் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் புகழ் பெற்ற கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, தான் அணிந்த விஷேச நீல நிற பட்டுச்சேலை மூலம் கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு போக்கை உருவாக்கியிருந்தார். நல்லி சில்க்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பட்டுப்புடவை எம்.எஸ்.நீலம் என்றே அழைக்கப்பட்டது.
எம்.எஸ். இந்த புடவையை அணிந்து கச்சேரிகளில் பங்கேற்ற போது, இந்த புடவையை வாங்குவதற்காக பெண்கள் நல்லி சில்க்சில் அலைமோதினர். பல ஆண்டுகளுக்கு ஆர்டர்கள் தொடர்ந்தன. நல்லி சில்க்சின் மூன்றாம் தலைமுறை உரிமையாளரான நல்லி குப்புசாமி, கர்நாடக இசையின் தீவிர ரசிகருமாக விளங்குகிறார்.
கர்நாடக இசை கொண்டாட்டம்
தமிழ் மாதமான மார்கழியின் போது ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் சென்னை இசை விழாவை கொண்டாடுகிறது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த இசை விழா காலத்தில் 2,500 கச்சேரிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இப்போது இசை விழா நவம்பர் மாதமே துவங்கி ஜனவரியில் முடிகிறது. இந்த 90 வருட பாரம்பரிய நிகழ்வில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லி குப்புசாமியின் ஆதரவு அமைந்துள்ளது.
கர்நாடக இசைக்கலையை பாதுகாக்கும் வகையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அளித்து வரும் ஆதரவு நிகரில்லாதது. எட்டு சபாக்களில் அவர் நிர்வாக குழுவில் அங்கம் வகிக்கிறார். நூற்றாண்டுக்கும் மேலான ஸ்ரீ பார்த்தசாரதி சபாவில் தலைவராக இருக்கிறார்.
”என்னால் இயன்ற அளவுக்கு அனைத்து 140 சபாக்களுக்கும் ஆதரவு அளிக்கிறேன்,’ என்கிறார் அவர்.
கலையின் ஆதரவாளர்
கர்நாடக இசை எப்போதுமே, மன்னர்கள், ஜமீன்தார்கள், துபாஷிகள் ஆகியோர் ஆதரவில் செழித்திருக்கிறது. இப்போது வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆதர்வால் தழைக்கிறது. தற்காலத்தில், குறிப்பாக நல்லி குப்புசாமி அளித்து வரும் ஆதரவு நிகரில்லாததாக இருக்கிறது.
50 ஆண்டுகளாக அவர் அளித்து வரும் ஆதரவு பலமடங்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில சபாக்கள் அவரது ஆதரவால் மட்டுமே செயல்படுகின்றன.
இசையுடனான முதல் உறவு
1944 ல் இளைஞரான நல்லி குப்புசாமி, ரிக்ஷா ஒட்டுனர் ஒருவர் மன்மத லீலையை வென்றார் உண்டோ... எனும் பாடலை பாடிக்கொண்டிருப்பதை கேட்டார். அப்போதை தமிழ் திரைப்பட சூப்பர் ஸ்டாரார் எம்.கே.டி. பாகவதர் ஹரிதாஸ் படத்தில் பாடிய பாடல் இது.
ஆனால், 1954ல் நல்லி குப்புசாமி கர்நாடக இசையைக் கேட்டு பிரமித்தார். சென்னை பனகல் பூங்காவில் உள்ள தனது பட்டுப்புடவை கடைக்கு முன் நின்றிருந்த போது, அருகே இருந்த கிருஷ்ண கான சபையில் இருந்து வரும் இசையைக் கேட்டு மெய்மறந்து போவார். அதன் நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும், அந்த இசைக்கு மனதுக்கு அமைதி மற்றும் இதம் அளித்து, ஊக்கம் அளிக்கும் தன்மை இருப்பதை உணர்ந்தார்.
வானொலி இயக்குனராகவும் இருந்த, முன்னாள் தொலைக்காட்சி இயக்குனரான ஏ.நடராஜனின் நட்பு, அவரை கர்நாடக இசை வட்டத்தில் அறிமுகம் செய்தது. குப்புசாமி கச்சேரிகளுக்கு செல்லத்துவங்கினார்.
“கர்நாடக இசை எனக்கு மன அமைதி அளிக்கிறது. அதற்கு என்னால் இயன்ற அளவு என் நேரத்தைக் கொடுக்கிறேன்,” என்கிறார் நல்லி குப்புசாமி உற்சாகமாக.
வரலாற்றின் மீது ஆர்வம்
நல்லி குப்புசாமிக்கு வரலாறு மீதும் தனி ஆர்வம் உண்டு. வரலாறு தொடர்பான புத்தகங்களை, எஸ்.முத்தையாவின் சென்னையின் வரலாற்றை விவரிக்கும் மெட்ராஸ் ரீடிஸ்கவர்டு புத்தகத்தால் ஊக்கம் பெற்று குறிப்பாக சென்னை வரலாறு சார்ந்த புத்தகங்களை அதிகம் சேகரித்து வைத்திருக்கிறார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு வாசிப்பில் ஆர்வம் உண்டானது, மகாத்மா காந்தியின் சுயசரிதை மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள் ஆகிய இரண்டு புத்தகங்களை அவர் முதலில் படித்தார். மேலும் அவர் இது வரை 50 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
”மூன்று இடங்களை என்னை மறந்துவிடுகிறேன்: என்னுடைய கடையில், புத்தகம் படிக்கும் போது மற்றும் கர்நாடக இசையை கேட்கும் போது,” என்கிறார் அவர்.
நல்லி குப்புசாமி சென்னை திநகரில் வசித்து வருபவர் இந்த பகுதியுடன் நெருக்கமான பந்தம் கொண்டுள்ளார். 1960 களில் தூங்கி வழியும் கிராமமாக இருந்த இந்தப் பகுதி, காலப்போக்கில் துடிப்பான வர்த்தக மையமாக உருவானதை பார்த்திருக்கிறார். இந்த அனுபவத்தை அவர் தனது தி.நகர் அன்றும் இன்றும் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
பட்டின் மீது ஆர்வம்
1928 ல் சிறிய அளவில் துவங்கப்பட்ட குடும்பத் தொழிலில் 15 வயதில் அறிமுகம் செய்யப்பட்ட நல்லி குப்புசாமி, நல்லி சில்க்சை தென்னிந்தியாவில் மட்டும் அல்லாது நாடு முழுவதும் மற்றும் தென்னிந்தியர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் பிரபலமாக்கியிருக்கிறார். நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 37 விற்பனை நிலையங்கள் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளை உள்ளது.
“1954 ல் நான் பொறுப்பேற்றுக் கொண்ட போது, மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சையால் உந்துதல் பெற்று வர்த்தத்தை நேர்மை மற்றும் நாணயத்துடன் நடத்த தீர்மானித்தேன்,” என்கிறார்.
இளம் தலைமுறை
அவருக்கு பின் இரண்டு தலைமுறை நல்லி சில்க்சில் செயல்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி மற்றும் கோவையில் அவர் வர்த்தகத்தை கவனித்து வரும் நிலையில், மற்ற நிலையங்களை மகன் ராமநாதன் நல்லி கவனித்து வருகிறார்.
அவரது பேத்தி லாவன்யா, ஹார்வர்டில் எம்பிஏ பட்டம் பெற்றவர், கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட புடவைகள் கொண்ட நல்லி நெக்ஸ்ட் விற்பனை நிலையங்கள் மூலம் வர்த்தகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். நல்லி பிராண்டை ஆன்லைனுக்கும் கொண்டு சென்றுளார். குடும்ப வர்த்தகத்தில் ஈடுபடும் முன் மிந்த்ராவில் பணியாற்றிய லாவன்யா, பெங்களூருவில் இருந்து செயல்பட்டு வருகிறார்.
அவரது மூத்த மகள் ஜெயஸ்ரீ ரவி (குமரன் சில்க்ஸ் குடும்ப மருமகள்) பாலம் சில்க்ஸ் எனும் பெயரில் பட்டு புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பட்டு மற்றும் இதர புடவைகள் உள்ளிட்டவற்றுக்கான பொருட்களை சேவையாளர்களிடம் இருந்து, நல்லி தானே நேரடியாக கொள்முதல் செய்கிறார். 1980 களில் ஒரு முறை நல்லி பிராண்ட் பிரான்சின் பாரிசில் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் உற்சாகம் கொள்கிறார். சென்னையில் சிறிது காலம் படித்த அந்த பிரான்ஸ் இளம் பெண் பாரிசில் நல்லி பட்டுச்சேலையை அணிந்த படி காட்சி அளித்தார். நல்லி குப்புசாமியின் அனுமதி பெற்ற பின்னே எந்த புடவையும் விற்பனை நிலையத்தில் இடம்பெறுகிறது.
”பட்டுப்புடவையை பார்த்தே அதன் தரத்தை சொல்லிவிடுவேன். சந்தேகம் எனில் தொட்டுப்பார்த்தால் போதும்...” என்கிறார் அவர்.
நட்சத்திர வாடிக்கையாளர்கள்
1911 ல் நல்லி குப்புசாமியின் தாத்தா, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒரு பட்டு சேலையை பரிசளித்தார்.
அதன் பிறகு, நல்லி சில்கிற்கு எண்ணற்ற நட்சத்திர வாடிக்கையாளர்கள் உருவாகியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தமிழக முதல்வர் ராஜாஜி, முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நல்லி சில்க்சின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
தென்னிந்தியாவில் இருந்து செல்லும் பலர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எண்ணற்ற பட்டுப்புடவைகளை பரிசளித்துள்ளனர். மறைந்த நட்சத்திரம் சாவித்ரி, உகாதி அன்று முதல் புடவையை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவாஜி கணேசன் நல்லி சில்க்சின் நட்சத்திர வாடிக்கையாளர்.
”என் திரைப்பட சம்பளத்தில் பாதி நல்லி சில்க்சிற்கு சென்று விடுகிறது,” என்று கூட அவர் நகைச்சுவையாக ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியர்கள் அனைவரும் நன்கறிந்த நடிகர் ரஜினிகாந்தும் நல்லியின் நீண்ட நாள் வாடிக்கையாளர் ஆவார்.
”தனது குடும்பத்திற்காக வாங்குவதோடு, ரஜினி தன் திரைப்படங்களுக்கான ஆடைகளையும் நல்லி சில்க்சில் இருந்து வாங்குகிறார்,” என்கிறார் நல்லி குப்புசாமி.
கலைகளின் புரவலரான நல்லி குப்புசாமிக்கு, பட்டு புடவைகளுடன் அடையாளம் காணப்படும் நல்லி பிராண்ட் என்பது வர்த்தகம் அல்ல, அது அவரது ஈடுபாடாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் புதிய சவால்களை அவர் ரசித்து எதிர்கொள்கிறார்.
தமிழில் ; சைபர்சிம்மன்