தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை: 1,200 கோடி மதிப்பு Syska நிறுவனக் கதை!
வலுவான டீலர் நெட்வொர்க் மற்றும் ஆன்லைன் உத்திகளுடன் 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக உருவெடுத்துள்ளது சிஸ்கா குழுமம்.
Syska நிறுவனம் 1989ம் ஆண்டு Shree Sant Kripa Appliances Pvt Ltd (SSK Group) என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. டி-சீரிஸ் ஆடியோ கேசட், சிடி, ஆடியோ வீடியோ சிஸ்டம் போன்றவற்றின் விநியோகம் தொடர்பாக இந்நிறுவனம் செயல்பட்டது.
ராஜேஷ் மற்றும் கோவிந்த் உத்தம்சந்தனி தொடங்கிய இந்த Syska Group இன்று 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் 70 சதவீத வணிகம் Syska LED பிரிவும் 20 சதவீத வணிகம் Syska Accessories பிரிவும் 10 சதவீதம் இதன் மற்ற பிரிவுகளும் பங்களிக்கின்றன.
Syska குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் உத்தம்சந்தனி எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் கூறும்போது,
“நாங்கள் எலக்ட்ரிக் நிறுவனம் அல்ல. இன்றைய நிலையை எட்ட பல ஏற்ற இறக்கங்களையும் சவால்களையும் சந்தித்துள்ளோம்,” என்றார். இன்று Syska LED, Syska personal care, Syska mobile accessories, Syska Wires என பல்வேறு பிரிவுகளுடன் வளர்ச்சியடைந்துள்ளது.
அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் பொது நிறுவனமாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக ராஜேஷ் தெரிவிக்கிறார்.
இரண்டாம் தலைமுறையினரான குருமுக் உத்தம்சந்தனி மற்றும் கீதிகா உத்தம்சந்தனி, ராஜேஷ் உத்தம்சந்தனியின் குழந்தைகள் ஆகியோர் குடும்பத் தொழிலில் இணைந்து கொண்டனர். இவர்கள் சிஸ்கா தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், சிஸ்கா மொபைல் ஆக்சசரீஸ் போன்ற தயாரிப்பு தொகுப்புகளை கையாள்கின்றனர்.
இந்நிறுவனத்தின் LED பிரிவிற்கு பிரபலங்கள் கொண்டு ஊடகங்களில் செய்யப்பட்ட பிரச்சாரம் சிறப்பாக பலனளித்தது. இக்குழு மக்களின் கவனத்தைப் பெற்றது. பாலிவுட் நடிகர்கள் இர்ஃபான் கான், அமிதாப் பச்சன் ஆகியோர் மட்டுமல்லாது தொலைக்காட்சி நடிகர்களையும் இந்தக் குழுமம் இணைத்துக்கொண்டு அனைவருக்கும் பரிச்சயமான பிராண்டாக உருவானது.
இவற்றை எல்லாம் தாண்டி நம்பகத்தன்மை, வளர்ச்சி நோக்கிய செயல்பாடுகள், மிகச்சிறந்த விநியோக நெட்வொர்க் போன்றவையே வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. நுகர்வோர் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்திற்கு சிக்கலான விநியோகச் சானலை அமைப்பது மிகவும் கடினமான செயலாகவே இருக்கும். ஆனால் சிஸ்கா நிறுவனம் இதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது என்கிறார் ராஜேஷ்.
குழுமத்தின் ஆரம்பகால செயல்பாடுகள், குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்தத் தொடங்கி மெல்ல வெவ்வேறு பிரிவுகளுடன் விரிவடைந்த விதம், சொந்தமாக தொழிற்சாலை அமைத்த விதம் என நிறுவனத்தின் பல்வேறு மைல்கற்களை எஸ்எம்பிஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார் ராஜேஷ் உத்தம்சந்தனி.
அந்த உரையாடலின் தொகுப்பு இதோ:
எஸ்எம்பிஸ்டோரி: சிஸ்கா குழுமத்தின் ஆரம்ப நாட்கள் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
ராஜேஷ் உத்தம்சந்தனி: 1989ம் ஆண்டு டி-சீரிஸ் விநியோகத்துடன் செயல்பாடுகளைத் தொடங்கினோம். பிறகு Kelvinator-க்கு மாறினோம். இந்நிறுவனத்தை பின்னர் Whirlpool வாங்கியது. Whirlpool பிராண்டில் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக்ஸ் வகைகளும் இல்லை.
அதேபோல் டிவியும் இல்லை. எனவே சாம்சங்கிற்கு மாறினோம். 2002ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நோக்கியாவின் விநியோகத்திற்கு பொறுப்பேற்றோம். 2008ம் ஆண்டு நோக்கியாவின் சந்தை பங்களிப்பு 91 சதவீதமாக இருந்தபோது நோக்கியாவை விட்டு விலகி சாம்சங்கில் இணைந்தோம்.
பெரும்பாலான எங்கள் விநியோக நெட்வொர்க்கும் சாம்சங்கிற்கு மாறியது. இதுவே எங்கள் மீதிருந்த நம்பகத்தன்மைக்கு அத்தாட்சி. சாம்சங் எங்களுக்கு ஐந்து மாநிலங்களுக்கான டிஸ்டிரிபியூஷனை வழங்கியது. சாம்சங் உடனான செயல்பாடுகளில் மொபைல் பிரிவில் மட்டும் இது மிகப்பெரிய வணிக வாய்ப்பாக அமைந்தது (10 கோடி ரூபாய்க்கு மேல்).
மும்பை, புனே, கோவா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக சாதனங்களுக்கான டீலர்ஷிப்பில் இணைந்தோம். அந்நிறுவனம் 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் புரிகிறது. Syska சில்லறை வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனங்களின்கீழ் மும்பையில் 30 Samsung Cafe அமைத்தோம்.
அந்த சமயத்தில் சொந்தமாக பிராண்ட அறிமுகப்படுத்தும் யோசனை தோன்றியது. சாம்சங் நிறுவனத்துடன் நேரடியாக போட்டியிடாத வகையில் கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த எண்ணினோம். சோலார் அல்லது எல்ஈடி விளக்குகள் பிரிவில் செயல்படுவது குறித்து சிந்தித்தோம்.
நாங்கள் அதுவரை பி2சி நிறுவனமாகவே செயல்பட்டு வந்தோம். சோலார் பிரிவில் செயல்பட பி2பி வணிகப் பிரிவில் செயல்படவேண்டியிருந்தது. எல்ஈடி விளக்குகளுடன் 2012-ம் ஆண்டு Syska LED திறந்தோம்.
Syska LED பரவலான விநியோக நெட்வொர்க் மூலம் இந்தியா முழுவதும் செயல்படத் தொடங்கியது. இந்தக் குழுமம் தற்போது இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகள், வணிக ரீதியான இடங்கள், தொழிற்சாலை மற்றும் அலங்காரப் பிரிவு என மேம்பட்ட எல்ஈடி லைட்டிங் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் விநியோக நெட்வொர்க் மற்றவர்களும் பின்பற்ற விரும்பும் வகையில் அமைந்துள்ளது. இந்த சானலை உருவாக்குவது எத்தகைய சவால் நிறைந்ததாக இருந்தது?
ராஜேஷ் உத்தம்சந்தனி: எந்த ஒரு நிறுவனத்திற்கும் உறுதியான விநியோக நெட்வொர்க்கை அமைப்பது கடினமான செயலாகவே இருக்கும். கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இதை உருவாக்கி வருவதால் இது எளிதாகவே உள்ளது.
எஸ்எம்பிஸ்டோரி: இந்த நெட்வொர்க்கை எப்படி உருவாக்கினீர்கள்?
ராஜேஷ் உத்தம்சந்தனி: ஆரம்பத்தில் நாங்கள் களப்பணியாளர்களை நியமித்தோம். செயல்முறைகளை சீரமைக்க கிட்டத்தட்ட 1,800 பேர் விநியோகஸ்தர்களுடன் பணியாற்றினார்கள். வழக்கமாக நிறுவனங்கள் ஒன்றிரண்டு பேரை பணியமர்த்தி விநியோகஸ்தர்களையே சார்ந்திருக்கும். இதனால் கட்டுப்பாடு இல்லாமல் போவதுண்டு.
எங்களது உத்தியின்படி ஆரம்பத்தில் மூலதன வருவாய் இருப்பது தெரியாது. ஆனால் தேவையான உந்துதலை அளிக்க எங்கள் ஊழியரை நியமிக்கிறோம். இது அவசியமாகிறது.
இதன் காரணமாக இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு முன்பு 10 லட்ச ரூபாய் வரை வர்த்தகம் புரிந்து வந்த டீலர் இன்று 3 முதல் 4 கோடி ரூபாய் வரை வணிகம் புரிகிறார். அவர்கள் சொந்தமாக ஊழியர்களை நியமித்து செயல்பாடுகளை நிர்வகிக்க அறிவுறுத்துகிறோம்.
எங்கள் விநியோகஸ்தர்களுக்கு மூலதன உதவி வழங்க பல்வேறு வங்கிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். இதன் மூலம் எங்கள் சானல் சீரமைக்கப்பட்டு வலுவடைகிறது.
எஸ்எம்பிஸ்டோரி: பிரபலங்களைக் கொண்டு ஊக்குவிக்கப்படும் உங்களது மார்க்கெட்டிங் உத்தி எப்படி பலனளித்தது?
ராஜேஷ் உத்தம்சந்தனி: Whirlpool, எல்ஜி, நோக்கியா, சாம்சங் போன்ற பல்வேறு பிராண்டுகள் தனித்துவமான மார்க்கெட்டிங் உத்திகள் பயன்படுத்தி வளர்ச்சியடைவதைப் பார்த்திருக்கிறோம். இது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. அந்த கற்றல் அனுபவங்களை செயல்படுத்த மார்க்கெட்டிங் பார்ட்னரை நியமித்தோம்.
எஸ்எம்பிஸ்டோரி: மற்ற பிராண்டுகளை விற்பனை செய்யத் தொடங்கி இன்று சொந்தமான உற்பத்தி தொழிற்சாலை நிர்வகித்து வருகிறீர்கள்?
ராஜேஷ் உத்தம்சந்தனி: வலுவான விநியோக நெட்வொர்க்கை அமைத்த பின்னரே சொந்த தொழிற்சாலையை அமைத்தோம். எங்களது ஆர்வம் குறித்து நன்கு புரிந்துகொண்ட பின்னரே தொழிற்சாலைகளை அமைத்தோம்.
நாடு முழுவதும் நவீன தொழிற்சாலைகளை அமைக்க மொத்தமாக 350 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். இந்த முதலீடு மிகப்பெரிய வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
ஷிர்வால், ரபாலே, சக்கன், ரெவாரி ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவைதவிர கேமரா மாட்யூல்களுக்காக நொய்டாவில் நவீன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. ஷிர்வால், ரபாலே, சக்கன் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ட்யூப் லைட், பேனல் லைட், தொழிற்சலை லைட் போன்ற பல வகையான லைட்டிங் தயாரிப்புப் பணிகள் நடைபெறும்.
அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் ரெவாரி பகுதியில் நான்காவது தொழிற்சாலை அமைக்கக் கூடுதலாக 75 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். தாருஹேரா-ரெவாரி பகுதியில் மொத்தமுள்ள 19 ஏக்கரில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு பல வகையான வயர்கள் மற்றும் கேபிள்கள் தயாரிக்கப்படும்.
இந்தத் தொழிற்சாலையில் முதல் கட்டமாக 300 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
முழுமையான உற்பத்தி திறனுடன் இந்தத் தொழிற்சாலையில் ஒரு மாதத்திற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான காயில்கள் தயாரிக்கமுடியும்.
இந்தியாவில் வயர் மற்றும் கேபிள்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் குவிந்துள்ளன. வீட்டு உபயோக வயர் பிரிவு 12,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புடையது. இந்தப் பிரிவு மேலும் சிறப்பாக வளர்ச்சிடையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் மிகக்குறையாகவே செயல்படுவதால் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
எஸ்எம்பிஸ்டோரி: டிஜிட்டலில் செயல்பட நீங்கள் தயக்கம் காட்டவில்லை. உங்களது டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகள் என்ன?
ராஜேஷ் உத்தம்சந்தனி: அமேசான் இந்தியாவில் ஆன்லைனில் எங்களது தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் வழங்கும் யோசனை தோன்றியது. அந்த சமயத்தில் பிலிப்ஸ் நிறுவனம் பெரும்பாலான சந்தையை ஆக்கிரமித்திருந்தது. தற்போது அமேசானில் எங்களது ஹேர் டிரையர் விற்பனையில் முன்னணியில் உள்ளது. ஒன்பிளஸ் போன் போன்றே அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தினோம். முதல் ஆண்டு விற்பனை 50 கோடி ரூபாயாகவும் இந்த ஆண்டு 150 கோடி ரூபாயாகவும் இருந்தன. தற்போது ஆஃப்லைனிலும் செயல்படத் தொடங்கியுள்ளோம்.
விநியோக நெட்வொர்க்குடன் இணைந்திருக்க டிஜிட்டலையும் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் மேம்படுத்தப்பட்ட CMS மூலம் விநியோகஸ்தர்களிடம் உள்ள பொருட்களின் இருப்பு நிலையைத் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் குறித்த தகவல்களைப் பெற்று அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்கிறோம்.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: ஸ்ரீவித்யா