தெரிந்த நிறுவனம் தெரியாத கதை: 'மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸ்'
நறுமணப் பொருட்கள் விற்று வந்த எம்பி அஹமத், 27000 கோடி ரூபாய் மதிப்புள்ள மலபார் கோல்ட் நிறுவனத்தை நிறுவிய கதை இது!
வெற்றிக்கான வழிகள் பல உண்டு. அதில் வழக்கமான விஷயங்களை வழக்கத்திற்கு மாறாக செய்து வெல்வதும் ஒன்று. அந்த வழிதான் 62 வயதான எம்பி அஹமத் தேர்வு செய்தது. அதன் மூலம் தான் 'மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்' நிறுவனத்தை அவர் வளர்த்தது.
வணிகர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அஹமத், 1979ல் தனது 20வது வயதில் தனது தொழில்முனைவு பயணத்தைத் துவங்கினார். முதலில் அவர் விற்றது நறுமணப்பொருட்கள்.
ஏலக்காய், மிளகு மற்றும் தேங்காய் ஆகியவற்றை கோழிக்கோட்டில் இருந்த சில்லறை வணிகர்களுக்கு விற்பனை செய்துவந்தார். ஆனால் அந்த தொழிலில் வளர்ச்சி அவ்வளவு இல்லை என்பதை விரைவாகப் புரிந்துகொண்டார்.
மலபார் கோல்டின் விளம்பரப் பிரிவின் தலைவர் கேபி நாராயணன் நம்முடன் பேசும் பொழுது கூறியது,
"இளவயதில் எந்த பெரிய கல்வி நிறுவனமும் கற்றுக்கொடுக்க முடியாத வணிக விதிகளை மற்றும் அனுபவங்களை எம்பி அஹமத் கற்றுக் கொண்டிருந்தார். இருந்தாலும் மேலும் பெரிதாக வணிகத்தில் வளரவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தீயாக எரிந்துவந்தது."
எதற்கு ஒரு வணிகத்திற்கு அடையாளம் (பிராண்ட்) தேவை என அஹமத் வாழ்வில் இருந்து, அவர் உணர்ந்து கொண்ட தருணம் பற்றி நாராயணன் குறிப்பிடுகிறார்.
மும்பையில் இருந்த ஒரு தொழில் அதிபர், அஹமத்திடம் அதிக அளவில் கடன் பாக்கி வைத்திருந்தார். சில காரணங்களால் அவரால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் தனது நிறுவனத்தை மூடுவதற்கு முயன்று வந்தார். அஹமத்திடம், தனது பிராண்டை விற்று அவரது கடனை செலுத்திவிடுவதாக, அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
அந்த தருணத்தில் ஒரு பிராண்டின் சக்தி என்ன என்பது அஹமத்தின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. தானும் ஒரு பிராண்டினை உருவாக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார். ஆனால் தற்பொழுது உள்ள நறுமணப் பொருட்கள் வணிகத்தில் அல்லாது, ஒட்டுமொத்தமாக துறையை மாற்ற முடிவு செய்தார்.
மலபார் கோல்ட் பிறந்த கதை
அந்நாட்களில் நகைகள் என்றால், எந்தவித கட்டுப்பாடும் இல்லை, எந்த வித தணிக்கை முறையும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சந்தையை தெளிவாக ஆய்வு செய்து, அதன் நுணுக்கங்கள் என்ன என்று அறிந்த பிறகு, தனது சொந்த ஊரான மலபாரை முன்னிறுத்தி தங்க ஆபரணத் துறையில் தொழில் துவங்க முடிவெடுத்தார் அஹமத். ஆனால் முதல் சவாலாக தொழில் துவங்கத் தேவையான முதலீடு வந்து நின்றது.
"இந்த யோசனை பற்றி எனது உறவினர்களிடம் கூறினேன். அதில் 7 பேர் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களிடமும் பணம் அவ்வளவாக இல்லை. எனவே தொழில் துவங்க சொத்து ஒன்றை விற்று 50 லட்சம் முதலீடு செய்தோம். அவ்வாறு மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸின் முதல் முதலீட்டாளர்கள் ஆனோம்," என்கிறார் எம்பி.அஹமத்.
1993 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் 400 சதுரஅடியில் துவங்கியது இந்நிறுவனம். முதலில் தங்கக்கட்டிகளை வாங்கி, அதைத் தங்கள் ஆசாரியிடம் கொடுத்து நகைகளை செய்யச் சொன்னார்.
அந்த நகையின் வடிவம் மக்களுக்கு பிடித்துப்போனது. இதனால் மிகவிரைவிலேயே மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸ் கேரளாவில் மேலும் இரு ஊர்களில் தங்கள் கடைகளைத் திறந்தது - அவை திரூர் மற்றும் தெளிச்சேரி.
1995ல் வணிகம் சரியான வேகத்தில் செல்வதைப் பார்த்த எம்பி அஹமத், 400 சதுர அடி கடையை மூடிவிட்டு 4000 சதுர அடியில் புதிய கடை ஒன்றை திறந்தார்.
1999ல் வணிகத்தில் ஒரு முக்கிய விஷயமாக, தங்கத்தின் தரத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என உணர்ந்தார் அஹமத். எனவே கேரளாவில் பிஐஎஸ் முத்திரை கொண்ட நகைகளை அறிமுகம் செய்ததில் இவரது பங்கு மிகவும் முக்கியம். 916 காரட் மீட்டர், தங்க விற்பனையில் ஒரு தனி இடத்தை இந்நிறுவனத்திற்குக் கொடுக்க, அன்றில் இருந்து வளர்ச்சிப்பாதையில் மட்டுமே பயணிக்கிறது இந்நிறுவனம்.
வணிக வளர்ச்சியில் முக்கிய மைல்கற்கள்
2001 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வெளியே தன் முதல் கிளையை திறந்தது மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸ் நிறுவனம். அப்பொழுது நிறுவனத்தின் இயக்குனர்களாக 10 பேர் இருந்தனர்.
2011ம் ஆண்டு ரியாத்தில் தனது 50வது கிளையை திறந்தது மலபார். அதுவரை 12000 கோடிகள் மதிப்புள்ள நகைகள் இந்நிறுவனம் விற்றிருந்தது. 2013ம் ஆண்டில் 7 நாடுகளில் 103 கிளைகள், 10 மொத விற்பனை நிலையங்கள், வடிவமைப்பு நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் கொண்ட ஒரு மாபெரும் வணிக நிறுவனமாக வளர்ந்தது. அத்தோடு நில்லாமல் உலகில் வணிகத்தின் அடிப்படையில் 3வது பெரிய நகை உற்பத்தியாளராக, உலகம் முழுவதும் 80 கிளைகள் கொண்டும், இந்தியா மற்றும் மத்திய கிழக்கில் தங்கவணிகத்தில் இரும்புப்பிடி கொண்டும் உருவாகியுள்ளது.
2016ம் ஆண்டு பெல்காமில் தனது 150 கிளையை திறந்தது இந்நிறுவனம். மேலும் தங்க ஆபரண விற்பனைத்துறையில் 22 வருடங்கள் கடந்திருந்தது. 2017ல் உலகத்தில் முன்னணி தங்க ஆபரண விற்பனையாளராக தங்களை நிலைநிறுத்த துபாயில் தங்கள் 200வது கிளையைத் திறந்தது.
2018 ஆம் ஆண்டு ஒரே நாளில் 6 நாடுகளில் 11 புதிய கிளைகளைத் திறந்தது. அந்நேரத்தில் தங்க ஆபரண சந்தையில் முதல் 5 இடங்களில் இருந்தது மலபார்.
ஷார்ஜாவில் லூலூ ஹசானாவில் உள்ள கிளையை பாலிவுட் நக்ஷத்திரம் அணில் கபூர் திறந்து வைத்தார். 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க மண்ணில் கால்பதித்தது மலபார். தங்கள் 250வது கிளையை சிகாகோ நகரத்தில் திறந்தனர்.
1993 ஆம் ஆண்டு 7 முதலீட்டாளர்களோடு துவங்கிய நிறுவனம் இன்று 4600 முதலீட்டாளர்கள் உள்ளனர். சென்ற நிதியாண்டில் மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸின் விற்பனை 27000 கோடிகள் ஆகும்.
கோழிக்கோடு, திருச்சூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இதன் நகைகள் உற்பத்தியாகின்றன. துபாயிலும் ஒரு உற்பத்திச்சாலை உள்ளது இவர்களுக்கு.
நாராயணன் கூறுவது,
"60% பொருட்கள் எங்கள் விற்பனையாளர்களிடம் இருந்து பெறுகின்றோம். மேலும் வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவு செய்ய சமயத்தில் நகைகள் இறக்குமதியும் நடக்கிறது," என்று.
சவால்கள் மற்றும் IPO ஏன் இல்லை
ஒரு வணிக நிறுவனத்தின் வளர்ச்சி என்பது, அதன் இயக்கம், கட்டுப்பாடு, சந்தை நிலவரம், வாடிக்கையாளர் நம்பிக்கை இவை அனைத்தும் சார்ந்தது என்கிறார் நாராயணன். இப்பொழுது நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக வாடிக்கையாளர் எண்ணம் சிறிது மாறுபட்டுள்ளது. தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்தில் உள்ளது. ஆனால் இவை அனைத்தும் விரைவில் மாறும் என்ற நம்பிக்கையுள்ளது என்கிறார் அவர்.
கட்டுப்பாடுகள் பொறுத்தவரை அதிகமாக உள்ள இறக்குமதி வரி தன்னைப்போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என நினைக்கிறது மலபார்.
மேலும் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் கடன் கொடுக்கும் சூழலை மேலும் கடினமாக்குவதும் சவாலாக உள்ளது இவர்களுக்கு. இதனால், தொழில் நடத்த முதலீடு செய்வது சிக்கலாக மாறுகிறது.
IPO பற்றி பேசுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதற்கான ஆயுதங்களில் தாங்கள் இருந்ததாகவும், பொருளாதார நிலைமை மற்றும் பண மதிப்பிழப்புக் காரணமாக அது நடை பெறவில்லை எனவும் கூறுகிறார். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் சந்தை நிலவரம் சரியாக இருக்கும் பொழுது, மீண்டும் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம் எனவும் கூறுகிறார்.
எதிர்காலத் திட்டங்கள்
அடுத்த 5 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா, மலேசியா, பாங்காக் போன்ற நாடுகளில் வளருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மலபார். மேலும் உலகமெங்கும் 750 கிளைகள் திறக்கும் எண்ணமும் உள்ளது இவர்களுக்கு.
இவ்வாறு வளருவதற்கு 7000 கோடி செலவாகும் என்றும் அந்த அளவு நிதி திரட்ட தங்கள் முதலீட்டாளர் எண்ணிக்கையையும் அதிகரிப்பதாக மலபார் கூறுகிறது. தற்பொழுது வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களை இதற்காக அணுகியுள்ளது மலபார்.
மொத்த மற்றும் சில்லறை தங்க ஆபரண வணிகம், உற்பத்தி, உட்புற அலங்காரம், வீட்டு சாமான்கள், ஐடி சேவைகள், வணிகத் தீர்வுகள் என பல துறைகளிலும் கால் பதித்துள்ளது மலபார்.
எழுதியவர் : பலக் அகர்வால் | தமிழில் : கெளதம் தவமணி