20000 முதலீடு; 3 ஆண்டுகளில் 50 கோடி டர்ன்ஓவர்: இயற்கை ஆயுர்வேத பியூட்டி பிராண்டின் வெற்றிக்கதை!
90 நாட்களில் மாயாஜாலத்தை ஏற்படுத்தும் ஹேர் ஆயில் தயாரிப்பை முதலில் சந்தையில் அறிமுகப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்த அம்ரிதா கத்தம், தற்போது 14 தயாரிப்புகளுடன் 50 கோடி ரூபாய் விற்றுமுதல் எட்ட திட்டமிட்டுள்ளார்.
அம்ரிதா கட்டம் பெங்களூருவில் படித்துக் கொண்டிருந்தார். வேறு ஊரிலிருந்து மாற்றலானவருக்கு புதிய வாழ்க்கைமுறை காரணமாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தன்னுடைய உடல்நிலை பற்றி அம்ரிதா வருத்தப்பட்டார்.
இவரது சொந்த ஊர் ஆந்திராவிற்கு அருகிலிருக்கும் ராஜமுந்திரி. இந்தப் பகுதியில் இருந்து பெங்களூரு வந்தவர் பல விதமான உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்தார். இந்தப் போராட்டங்களின் விளைவாக உருவானதுதான் The Tribe Concepts. இது தாவரம் சார்ந்த, ஆயுர்வேத சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு பிராண்ட்.
அம்மாவுடன் இருந்தபோது எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் உடனே அம்மா ஏதாவது ஒரு கலவையைத் தயாரித்து எங்கள் கையில் கொடுத்துவிடுவார். முடி உதிர்தல், முகப்பரு இப்படி எந்த ஒரு பிரச்சனைக்கும் அம்மாவின் வீட்டு வைத்தியம் மட்டுமே கைகொடுக்கும்.
”ஆனால், பெங்களூருவில் தனித்து விடப்பட்டேன். என்னுடைய வாழ்க்கை முறை மாறியது. உணவு மாறியது. ஜங்க் ஃபுட் சாப்பிட்டேன். விளைவு ஏராளமான உடல் உபாதைகள். இன்று இதுதான் நம் வாழ்க்கைமுறையாகவே மாறிவிட்டது,” என்று வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார் அம்ரிதா.
அம்ரிதா குறிப்பிடுவதுபோல் இன்று நாம் அனைவருமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். நீண்ட நேரம் பணிபுரிகிறோம். சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. இதுபோன்ற செயல்களால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
அம்ரிதா தன் அம்மாவிடம் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எண்ணெய், மாஸ்க் போன்றவற்றை கூரியரில் அனுப்ப சொல்லி கேட்டிருந்தார். இவரது நண்பர்கள் இந்தத் தயாரிப்புகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
இதுபோன்ற தேவை பலருக்கு இருப்பது அவருக்குப் புரிந்தது. பிரச்சனை பலருக்கு இருக்கிறது. தீர்வை பலர் எதிர்நோக்குகின்றனர். ஆனால் அத்தனை எளிதில் தீர்வு கிடைக்கவில்லை என்பதே உண்மை.
”முடி உதிர்வு, முகப்பரு, உடல் பருமன், நோய் எதிர்பாற்றல் குறைவு, இப்படி மக்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க நம்மிடம் தீர்வு இருக்கிறது. இதை ஏன் நாம் தேவையிருப்போருக்கு கொடுக்கக்கூடாது என்று யோசித்தேன். இந்த யோசனையில் 2019-ம் ஆண்டு உருவானதுதான் Tribe Concepts,” என்கிறார் அம்ரிதா.
தொடக்கம்
அம்ரிதாவின் அப்பா ஆயுர்வேத மருத்துவர். அம்ரிதா இதுபற்றி ஆய்வு செய்தார். அப்பாவின் உதவியுடன் பிராடக்ட்ஸ் தயாரிக்கத் தொடங்கினார். முதலில் 90 நாட்களில் மேஜிக் செய்யக்கூடிய ஹேர் ஆயில் தயாரித்தார்.
”என் அப்பாவிற்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் வேலையைத் தொடங்கினோம். தேவையான பொருட்கள் அனைத்தையும் உள்ளூரிலேயே வாங்கினோம். என் சொந்த சேமிப்பிலிருந்து 20,000 ரூபாய் எடுத்து முதலீடு செய்தோம். பெரும்பாலான தொகை சமூக ஊடகங்களில் மார்க்கெட்டிங் செய்ய பயன்படுத்தப்பட்டது,” என்கிறார்.
Tribal Concepts முக்கியமாக இன்ஸ்டாகிராமில் மார்க்கெட் செய்யப்படுகிறது. பிராண்டின் வளர்ச்சியில் ஆன்லைன் மதிப்பீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று அமெரிக்கா, கனடா, யூகே, ஐக்கிய அரபு நாடுகள் என உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் ஆர்டர்கள் பெறப்படுகின்றன.
இந்த பிராண்ட் தயாரிப்புகளில் ரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படுவதில்லை. 14 தயாரிப்புகளை வழங்குகிறது. முதல் 9 மாதங்களில் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. அடுத்த 3 மாதங்களில் 1.25 கோடி ரூபாய் ஈட்டியது. இந்த முயற்சி தொடங்கப்பட்டு இன்னமும் மூன்றாண்டுகள் முடிவடையாத நிலையில், 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 50 கோடி ரூபாய் விற்றுமுதல் அளவை எட்ட திட்டமிட்டிருக்கிறது. தற்சமயம் இதன் தலைமையகம் பெங்களூருவில் செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
100% இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கவேண்டும் என்கிற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பத்திலிருந்து செயல்பட்டு வருகிறது Tribal Concepts.
”எங்கள் பேக்கிங் பொருட்கள்கூட இயற்கையானவை. டின் பாக்ஸ், கண்ணாடி பாட்டில்கள் போன்றவற்றிலேயே தயாரிப்புகளை வழங்கி வருகிறோம். பேப்பர் டேப்களையே பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதே இல்லை,” என்று அம்ரிதா விவரிக்கிறார்.
இந்தத் துறையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமிருப்பது மிகப்பெரிய பிரச்சனை என்கிறார்.
“நாங்கள் முழுமையாக இயற்கையுடன் ஒன்றி செயல்பட விரும்புகிறோம்,” என்கிறார்.
சந்தை நிலவரம் மற்றும் வருங்காலத் திட்டங்கள்
சந்தையில் நிலவும் போட்டி குறித்து அம்ரிதா விளக்கும்போது ஒவ்வொரு பிராண்டும் தனித்துவமான வகையில், வெவ்வேறு மக்களை இலக்காகக் கொண்டு செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
வரும் நாட்களில் ஆஃப்லைன் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் அமேசான் போன்ற சந்தைப்பகுதிகளில் செயல்படவும் திட்டமிட்டுள்ளார்.
Tribe Veda என்கிற மற்றொரு பிராண்டை அறிமுகப்படுத்தி ஹெல்த் சப்ளிமெண்ட் பிரிவில் செயல்படவும் திட்டமிட்டிருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா