26ஆண்டுகள்; 17 மாநிலங்கள்; 36 கோடி விற்றுமுதல்: ஆயுர்வேத பரப்பில் வளர்ச்சி கண்ட ஆயுர்வேதா நிறுவனம்!
ஆயுர்வேத பரப்பில் வளர்ச்சி கண்டு வரும் மகேஸ்வர் பார்மசூட்டிகல்ஸ்.
டாபர் நிறுவனத்தில், ஆர்.பி.மல்லேஸ்வரி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த தர நிர்ணய மேலாளராக பணியாற்றிய நிலையில் தொழில்முனைவில் ஈடுபட விரும்பினார். ஆயுர்வேத துறையில் அனுபவம் இருந்ததால், இந்தத் துறை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள விரும்பி, 1995ல், மகேஸ்வரி பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தை காசியாபாத்தில் துவக்கினார்.
“ஆயுர்வேதத் துறையில் பணியாற்றியதால், இந்த சந்தை அதிகம் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை என்பதை தாத்தா அறிந்திருந்தார். குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இந்த இடைவெளியை நிரப்ப விரும்பினார்,” என்கிறார் மகேஸ்வரி பார்மசூட்டிகல்ஸ் இயக்குனரும், மூன்றாம் தலைமுறை தொழில் முனைவோருமான நிகில் மகேஸ்வரி.
25 ஆண்டுகளில் இந்த நிறுவனம், இந்தியாவின் 17 மாநிலங்களில் செயல்பாடுகளை விரிவாக்கி, இரண்டு லட்சம் மருத்துவர்களை இணைத்துக்கொண்டு, ரூ.36 கோடி விற்றுமுதலை எட்டியுள்ளது.
எஸ்.எம்.பி ஸ்டோரியுடனான உரையாடலில், நிகில் மகேஸ்வரி, தங்கள் வர்த்தகம் வளர்ந்த விதம் பற்றி மற்றும் இந்தியாவில் ஆயுர்வேதத்தின் எதிர்காலம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
துவக்கம்
ஆயுர்வேத பரப்பில் தனது பிராண்டை பெயரை நிலை நிறுத்துவது மகேஸ்வர் நிறுவனத்திற்கு எளிதாக இல்லை. ஏனெனில் இந்தப் பிரிவில் டாபர், மற்றும் வைத்தியநாத் ஆகிய பிராண்ட்கள் புகழ் பெற்று விளங்கியதோடு, விசுவாசமான வாடிக்கையாளர் பரப்பையும் கொண்டிருந்தன.
“நன்கறியப்பட்ட பிராண்டை நிறுவுவதற்கு ஒரு செயல்முறை இருக்கிறது. துவக்கத்திலேயே வாடிக்கையாளர்களைக் குறி வைப்பது சரியல்ல என நினைத்த என் தாத்தா, நிறுவனம் சார்ந்த விற்பனையில் ஈடுபட்டார்,” என்கிறார் நிகில்.
ஒவ்வொரு மாநிலமும், மருந்துகளை வாங்குவதற்கான தொகையை ஒதுக்கீடு செய்வதை, இலக்காகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டது. 1990’களில், அரசாங்கத்தால் வாங்கப்பட்ட மருந்துகளில், 90 சதவீதம் ஆங்கில மருந்துகளுக்காகவும், 10 சதவீதம் ஆயுர்வேத மருந்துகளாகவும் இருந்தது.
ஆர்பி.மகேஸ்வரி, தில்லி அரசை மையமாகக் கொண்டு வர்த்தகத்தை துவக்கியவர் பின்னர் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகடளுடன் இணைந்து செயல்பட்டார்.
1996ல், இரண்டாம் தலைமுறையைச்சேர்ந்த தருண் மகேஸ்வரி வர்த்தகத்தில் இணைந்தார்.
“பிராண்ட் துவங்கிய ஓராண்டுக்கு பிறகு வர்த்தகத்தில் இணைந்த என் தந்தை, நேரடி வர்த்தக மாதிரியை பின்பற்றினார். இந்த காலத்தில் தான், மருத்துவர்களை நாடிச்சென்று, மருந்துகளை விற்பனை செய்தோம்,” என்கிறார் நிகில்.
தருண் அறம் சார்ந்த மாதிரியை பின்பற்றினார், விற்பனை பிரதிநிதிகள் மருத்துவர்களை சந்தித்து பிராண்டை பிரபலமாக்கினர். மாநில அளவிலான விநியோகக் குழுக்களும் நியமிக்கப்பட்டன.
இன்று நிறுவனம், 17 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. வட இந்தியாவில் வலுவாக உள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பி.எம்.எஸ் மருத்துவர்களை இணைத்துக்கொண்டுள்ளது.
2019ல் நிறுவனத்தில் இணைந்த நிகில், டிஜிட்டல் விற்பனை முறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
கோவிட் -19 தாக்கம்
ஆயுர்வேதம் இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. எனினும் அதன் தாக்கம் நவீன மருத்துவம் முன் குறைவாக உள்ளது. மகேஸ்வரி நிறுவனம் துவங்கிய போது ஆயுர்வேத மருத்துவம் வளர்ச்சி அடைந்தாலும் மக்களிடையே நம்பிக்கை குறைவாகவே இருந்தது.
“மாநில அரசுகள் 10 சதவீத ஆயுர்வேத மருந்துகளையே வாங்குகின்றன. 2014ல் ஆயுஷ் அமைச்சகம் அமைக்கப்பட்ட பிறகே, ஆயுர்வதேம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்தது,” என்கிறார் நிகில்.
ஆங்கில மருத்துவ அளவிற்கு இல்லை என்றாலும் ஆயுர்வேத மருத்துவம் 15 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாக நிகில் சொல்கிறார். ஆங்கில மருத்துவத்திற்கான தேவை குறையாது என்றும் அவர் சொல்கிறார்.
கோவிட்-19 க்கு பிறகு நிறைய மாறியிருக்கிறது. ஆயுர்வேதம் கவனத்தை ஈர்க்கிறது.
“நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக மக்கள் இந்த மருத்துவம் பக்கம் வருவதால் தேவை அதிகரித்துள்ளது. எங்களிடம் 300 பொருட்கள் உள்ளன. கடந்த ஆண்டு முதல் சுவாச சிகிச்சை மருந்தான அம்ஸ்தா அவேலஹா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,” என்கிறார் நிகில்.
இதன் காரணமாக, அமேசான் இணையதளத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மகேஸ்வர் பார்மசூட்டிகல்ஸ் நிறுவன மருந்து விற்பதாகவும் கூறுகிறார். 1mg , Netmeds உள்ளிட்ட இணைய மேடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.
வளர்ச்சி
இந்தியாவில் ஆயுர்வேத மருந்துகளுக்கான சந்தை 2021 முதல் 2026ல் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக நிறுவனங்கள் புதுமையான மருந்துகளை உருவாக்கி சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து போட்டி அதிகரித்துள்ளதோடு, டாபர், வைத்தியநாத், பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியும் இருக்கிறது என்றாலும் ஒவ்வொரு பிராண்டிற்கும் ஒரு தனித்தன்மை இருப்பதாக நிகில் கூறுகிறார்.
“டாபர் தன்னிடம் ஹாஜ்மோலா கொண்டிருக்கிறது. எந்த பிராண்டும் இந்தப் பிரிவில் போட்டி போட முடியாது. ஒரு ரூபாய்க்கு, நான்கு மாத்திரைகள் நல்ல பாக்கில் அளிக்கப்படுகிறது. அது அவர்களின் தனித்தன்மை. இது போலவே மற்ற பிராண்ட்களுக்கும் ஒரு அம்சம் இருக்கிறது,” என்கிறார்.
வாங்கக்கூடிய விலையில் தரமான மருந்துகளை அளிப்பது தங்கள் நிறுவனத்திற்கான அடையாளமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
நிறுவனம், மூலப்பொருட்களை உள்ளூரில் கொள்முதல் செய்கிறது. சாஹியாபாத் மற்றும் சித்குலில் நவீன ஆலைகள் கொண்டுள்ளது.
நிறுவனம் தற்போது சந்தைப்படுத்தலில் மட்டுமே பின் தங்கியிருப்பதாகவும், எதிர்காலத்தில் இது மேம்படுத்தப்படும் என்றும் நிகல் நம்பிக்கையாகக் கூறுகிறார்.
“வலுவான ஐடி அமைப்பை கொண்டிருப்பது மற்றும் டிஜிட்டல் யுகத்திள் வலுவான இருப்பை கொண்டிருப்பதன் மூலம் இந்தியாவில் ஆயுர்வேத பரப்பை மாற்ற திட்டமிட்டிருப்பதாக நிகில் கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்