Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

புளிச்சக் கீரையில் நாப்கின் - காலேஜ் ப்ராஜக்ட்டை தேசிய விருது பெற்ற தயாரிபாக்கிய மாணவர்கள்!

கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 0% கெமிக்கல், 0% பிளாஸ்டிக் என்ற முறையில் உடலுக்கும், சூழலுக்கும் எவ்வித கேடும் விளைவிக்காத நாப்கின்களை தயாரிக்கிறது.

புளிச்சக் கீரையில் நாப்கின் - காலேஜ் ப்ராஜக்ட்டை தேசிய விருது பெற்ற தயாரிபாக்கிய மாணவர்கள்!

Thursday October 17, 2019 , 4 min Read

ஒரு மாதத்திற்கு குறைந்தது ஐந்து நாட்கள் உபயோகிக்கப்படும் சானிட்டரி பேட்கள் தயாரிப்பில் பயன்படும் மூலங்கள் என்னவாகயிருக்கும்? பயன்படுத்திய பிறகு குப்பைக்குச் செல்லும் சானிட்டரி பேட்கள் மண்ணில் மக்குவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்? ஆண்டிற்கு எத்தனை டன் குப்பைகளாக சானிட்டரி பேட்கள் உருப்பெறுகின்றன?... என்பனவை பற்றி சில நிமிடங்கள் சிந்தித்துள்ளீர்களா?! இக்கேள்விகளுக்கு விடை தேட விரும்பினால், அதற்கான தீர்வாக இருக்கிறது ‘Bliss Naturals' எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம்.


ஆம், கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்ட ’ப்ளிஸ் நேச்சுரல்ஸ்’, 0% கெமிக்கல், 0% பிளாஸ்டிக் என்ற முறையில் உடலுக்கும், சூழலுக்கும் எவ்வித கேடும் விளைவிக்காத நாப்கின்களை தயாரிக்கும் ஓராண்டு வயதான ஸ்டார் அப்பாகும்.


பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ப்ளிஸ் நேச்சுரல்ஸ் இரு மாணவர்களது முயற்சியாகும். கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் படித்துவந்த மாணவி நிவேதாவும், மாணவர் கவுதமும் இறுதியாண்டு ப்ராஜக்ட்டிற்காக ‘ஆர்கானிக் சானிட்டரி பேட்’-களை உருவாக்கியுள்ளனர். காலேஜ் புரோஜெக்டாக தொடங்கப்பட்டதை தொழிலாக்கி கடந்தாண்டில் 2,00,000 சானிட்டரி பேட்களை விற்பனை செய்து, வெற்றிகர ஸ்டார்ட் நிறுவனமாக வளர்த்துள்ளனர்.

Bliss

ப்ளிஸ் நேச்சுரல்ஸ் நிறுவனர்கள் நிவேதா மற்றும்

“ஃபைனல் இயர் காலேஜ் ப்ராஜக்ட் செய்ய வேண்டிய சமயத்தில், கெனாஃப் எனப்படும் புளிச்சக்கீரையை வைத்து ஏதாவது தயாரிப்பை கண்டுபிடிக்க முடியுமானு ஆந்திராவில் உள்ள ஒரு என்.ஜி.ஓ ஒன்று இவர்களது கல்லூரியை அணுகினார்கள். ஆந்திராவில் அதிக விளையக்கூடிய புளிச்சக்கீரையை அம்மாநில மக்கள் அதிகளவில் உணவாக எடுத்து கொள்கின்றனர். இந்த புளிச்சக்கீரை காட்டுத்தனமாக வளரக்கூடிய செடி. தண்ணீர் நிறைய தேவைப்படாது. அதன் இலைகளை உணவாக எடுத்துக்கொண்டாலும், நார்சத்து நிறைந்த அதன் தண்டுப்பகுதியை கொண்டு ஏதாவது தயாரிக்கணும் என்கிற நோக்கில் தான் அந்த என்.ஜி.ஓ எங்களை அணுகினார்கள்.


நாங்க ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால், முதலில் பருத்தியுடன் சேர்த்து துணி நெய்தோம். அப்போ, அந்த துணியை ஆய்வு செய்யும் போது தான்,

புளிச்சக்கீரையின் நார் மற்ற நார்களைவிட சிறந்த நுண்ணுயிர்கொல்லி மற்றும் அதிகம் உறிஞ்சுத் தன்மை கொண்டது என்பது தெரிந்தது. சிறந்த நுண்ணுயிர்கொல்லியாக இருப்பதால், அதை வைத்து ஏன் சானிட்டரி பேட் செய்யக்கூடாது என்ற யோசனையில் ப்ராஜக்ட் செய்தோம்,” என்றார் நிவேதா.
organic napkin

இருவரும் இணைந்து புளிச்சக்கீரையின் நார்க்கொண்டு எந்தவொரு கெமிக்கலுமின்றி இயற்கையான முறையில் முதல் ப்ரோட்டோடைப்பை உருவாக்கியுள்ளனர். அவர்களுடைய தயாரிப்பிற்கு தென் இந்திய டெக்ஸ்டைல் ஆராய்ச்சி சங்கமும் ஒப்புதல் அளித்தது.


ஆனாலும், புளிச்சக்கீரையின் நார் பழுப்பு நிறத்தில் இருந்ததால், பெண்கள் அதை பயன்படுத்த தயக்கம் தெரிவித்துள்ளனர். அந்நிறத்தை மாற்றுவதே அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. இறுதி ப்ரோட்டோடைப்பை முடித்தவர்கள் கல்லூரி படிப்பையும் முடித்து, வெவ்வேறு பெரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய தேர்வாகினர். ஆனால், அப்பணியை உதறி காலேஜ் ப்ராஜக்ட்டையே தொழிலாக்க ஊக்கமூட்டியது அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள்.

“கிட்டத்தட்ட 60-70% பெண்களுக்கு சந்தைகளில் கிடைக்கும் வழக்கமான நாப்கின்களை பயன்படுத்துவதில் திருப்தியடைவில்லை. ஏனெனில், பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் சானிட்டரி பேட்களை பயன்படுத்துவதால் ரேஷஸ், அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். நார்மல் பேட்கள் 80% பிளாஸ்டிக் கொண்டு, நறுமணத்திற்காகவும், உறிஞ்சுத்தன்மைக்காகவும் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 1,13,000டன் சானிட்டரி பேட் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இதனால், பெருமளவில் நீர்நிலைகளே பாதிப்படைகின்றன. அது மட்டுமில்லாமல், தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாப்கின்கள் மண்ணில் மக்குவதற்கு 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும். எங்களுடைய நாப்கின்கள் எந்தவித கெமிக்கலும் இல்லாதது. ஆறு மாதத்திலே மக்கக்கூடியது,” என்றார் அவர்.

sanitary napkin 2

சூழலுக்கும், பெண்களுக்கும் நன்மை அளிக்கும் அவர்களது சானிட்டரி பேட்களை சந்தைப்படுத்தி தொழில் தொடங்கி எண்ணியுள்ளனர். அந்த சமயத்தில் புளிச்சக்கீரை சானிட்டரி பேட்களை அங்கீகரித்து விருதும் வழங்கப்பட்டுள்ளது.


2017ம் ஆண்டில்அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மற்றும் பொறியியல் கவுன்சில் ’விஸ்வகர்மா விருதை’ வழங்கியது. அதே ஆண்டு டிசம்பரில், ஏ.ஐ.சி.டி.இ-ன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து, நம்பிக்கைக்குரிய மாணவர் கண்டுபிடிப்பாளர் விருது, ஸ்ருஷ்டி மித்ரா விருது என மூன்று விருதுகளை வழங்கியது. மேலும், அகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவோர் சர்வதேச மையத்தில் 15 நாள்கள் தொழில்முனைவு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.


“ஒரு தொழிலை தொடங்கும் முன் அத்துறை சார்ந்து ஆராய்ச்சி செய்வதன் அவசியமென்ன, தயாரிப்பினை சந்தைப்படுத்துதல், நிதி மேலாண்மையை எவ்வாறு கையாள வேண்டும் என்று பயிற்சிகள் வழங்கப்பட்டது.

2018ம் ஆண்டு செப்டம்பரில் 30,000 ரூபாய் முதலீட்டுடன் 500 நாப்கின்களை தயாரித்து தொழிலை தொடங்கினோம். கடந்த ஒரு ஆண்டில் 2 லட்சம் நாப்கின்கள் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளோம். கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும், ஆர்கானிக் ஸ்டோர்களிலும் எங்களுடைய தயாரிப்புகள் கிடைக்கின்றன. xl மற்றும் xxl என இரண்டு அளவுகளில் நாப்கின்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விலை ரூ.59 மற்றும் ரூ 79 ஆகும்.

சந்தைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் நிறைந்த நாப்கின்களை காட்டிலும், அதை அடைத்துக் கொடுக்கப்படும் பேக்கிங் கவர்களே சூழலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கின்றன. அதனால், எங்களுடைய தயாரிப்பிற்கான பேக்கிங்கிலும் பிளாஸ்டிக் இல்லாமலிருக்க வேண்டும் என்று கவனமாக இருந்து, பேப்பரிலான பேக்கிங் பாக்ஸ்களே பயன்படுத்தியுள்ளோம்,” என்றார்.

sanitary napkin 3

மூலப்பொருட்கள் கோயம்புத்தூரிலிருந்து தயாரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஒரு உற்பத்தியாளருக்கு அனுப்பப்படுகின்றன, அங்கிருந்து ப்ளிஸ் நேச்சுரல்ஸுக்கு பிரத்யேகமாக சுகாதார நாப்கின்கள் உற்பத்தி செய்யப்பட்டு மீண்டும் கோவையை அடைகின்றது. இங்கிருந்து உள்ளூர் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.


“சந்தைப்படுத்துதலே எங்களுக்கிருக்கும் மிகப்பெரிய டாஸ்க். அதுவும், முதல் முறை ஒருவரை வாங்க வைப்பது வரை தான். அதற்கு பிறகு அவர்களே தேடி வருவார்கள். ஸ்டால்ஸ் அமைத்து சந்தைப்படுத்துகிறோம்.

எங்களிடம் தொடர்ந்து நாப்கின் வாங்கும் வாடிக்கையாளர்களே அவர்களது பகுதியில் விற்பனை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு சதவீத அடிப்படையில் லாபம் அளிக்கிறோம். அப்படி, வாரணாசி, டில்லி என வெளிமாநிலங்களிலும் விநியோகப் பணி மேற்கொள்கின்றனர் எங்களது வாடிக்கையாளர்கள்.


இனி வரும் காலங்களில் டயப்பர், பேன்டி லைனர் போன்ற அனைத்து சுகாதார தயாரிப்புகளிலும் புளிச்சக்கீரையை பயன்படுத்தி, பெண்களையும், சூழலையும் காப்பதே ப்ளிஸ் நேச்சுரல்சின் குறிக்கோள், என்கிறார் இந்த சமூக அக்கறைக் கொண்ட தொழில்முனைவர்.

வலைதள முகவரி; Bliss pads

facebook: bliss_pads