'நினைவுகளுடன் இறக்கவும், கனவுகளுடன் அல்ல’ - தொழில்முனைவு கனவை நினைவாக்கிய சென்னை பொறியாளர்!
SuperOps.ai சி.இ.ஓ அரவிந்த் பார்த்திபன் தனது வாழ்க்கை, தலைமை பண்பு, தனிமையான ஸ்டார்ட் அப் நிறுவனர் அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
2017ல் தனது முதல் நிறுவனம் ஜார்கெட்டை (Zarget), ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த உடன், அரவிந்த் பார்த்திபன் டாட்டூ பார்லருக்கு சென்று, ’நினைவுகளுடன் இறக்கவும், கனவுகளுடன் அல்ல’ எனும் வாசகத்தை பச்சை குத்திக்கொண்டார்.
வாழ்க்கையில் தனக்கான லட்சியம், சொகுசான பணி வாழ்க்கை இடர்களை எதிர்கொள்ள தடையாக அமையாமல், மீண்டும் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கி, மேலும் நிறைவு தரக்கூடிய தொழில்முனைவு பாதையில் ஈடுபட வேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு பச்சை குத்திக்கொண்டார்.
இந்த வாசகம் அவருக்கு நினைவூட்டலாக அமைந்தது. தனது புதிய நிறுவனம் ஃப்ரெஷ்வொர்க்சில் சிறந்த குழுவுடன் அவருக்கு அலுவலக மூளையில் ஒரு இடம் கிடைத்த போதும், நிறுவனம் இலக்குகளை அடைய உதவிய திட்டங்களை செயல்படுத்திய போதும், முக்கிய போட்டியாளரான சேல்ஸ்போர்ஸ் நிறுவன நிகழ்வின் போது கொரில்லா மார்க்கெட்டிங் உத்தியை செயல்படுத்தி பாராட்டுதல்களை பெற்ற போதும் அவருக்கு நினைவூட்டல் இருந்து கொண்டே இருந்தது.
“நிலையான வேலை, நிதிநிலை பாதுகாப்பு ஆகியவற்றால், குறிப்பாக சிறந்த அணியுடன் பணியாற்றும் போது, மிகவும் வசதியாக உணர்வது எளிதானது,” என்று செல்சியா நட்சத்திரம் ஜான் டெரி ஜெர்சியுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கையெழுத்திட்ட புகைப்படம் இருக்கும் சென்னை அலுவலகத்தில் அமர்ந்து பேசியபடி அரவிந்த் குறிப்பிடுகிறார்.
இருப்பினும், புதிதாக துவக்கும் எண்ணத்தை கைவிட்டுவிடவில்லை, என்கிறார் கையில் பச்சைக்குத்திய வாசகத்தை பார்த்தபடி.
இந்த உத்வேகம் காரணமாகவே, அவர் ஃப்ரெஷ்வொர்க்ஸ் பொறுப்பில் இருந்து விலகி, 2020ல் ஜெயகுமார் கரும்பாசலத்துடன் இணைந்து
எனும் நிறுவனத்தை துவக்கினார். இந்த ஸ்டார்ட் அப், எம்.எஸ்.பி சேவையாளர்களுக்கு ஏஐ சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிர்வாக சாஸ் மேடையை அளிக்கிறது. மூன்றாம் தரப்பு ஐடி சேவை நிறுவனங்கள் தங்கள் வளங்களை செயல்திறன் வாய்ந்த வகையில் பயன்படுத்த உதவுகிறது.கடந்த ஆண்டில், இந்நிறுவனம் வாடிக்கையாளர்களில் 300 சதவீத வளர்ச்சி கண்டு, அண்மை நிதிச் சுற்றில் 12.4 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இதுவரை 29.4 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
வாடிக்கையாளர் பிரிவில் வளர்ச்சி மற்றும் நிதி சுற்று ஆகியவை அரவிந்தின் தொழில்முனைவு தேடலை ஊக்குவித்துள்ளது. எனினும், ஸ்டார்ட் அப் நிறுவனராக தனது பயணம் இப்போது தான் துவங்கியிருப்பதை அவர் அறியாமல் இல்லை.
“இந்த பயணம் தனிமையானது” என ஸ்டார்ட் அப் நிறுவனர் அனுபவம் பற்றி குறிப்பிடுபவர், ஃபிட்னஸ், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு மீதான ஆர்வம் தனக்கு உதவுகிறது என்கிறார்.
உண்மையில், அலுவலக சூழல் மற்றும் விவாத பொருள் ஆகியவை இல்லாமல் பார்த்தால் அவரை விளையாட்டு வீரர் என நினைக்கத்தோன்றும். அவரது சமூக ஊடக பதிவுகளும் இதற்கு வலு சேர்க்கின்றன. அந்த பதிவுகளில் சிக்கலான யோகாசன படங்களையும், இதர உடல் வலு படங்களையும் பார்க்கமுடிகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் சர்க்கரையை கைவிட்ட அரவிந்த், உடல் தகுதியுடன் இருப்பது மேம்பட்ட தலைமைக்கு உதவுகிறது என்கிறார். தலைமை பண்பு பற்றி பேசும் போது கூட அவர் விளையாட்டுத் துறை உதாரணங்களையே கூறுகிறார்:
“கிரிக்கெட்டில் தோனி உள்ளே நுழைந்து மேட்சை முடித்து தருவார் என எதிர்பார்க்கிறோம். என்னிடமும் குழுவினர் இதே நம்பிக்கை கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன். உண்மையான தலைமை பண்பு என்பது இது தான்,” என்கிறார்.
இரண்டாவதாக, அவர் தன்னிடம் இருந்து மாறுபட்டவர்களை தன்னைச்சுற்றி வைத்திருப்பது, வாழ்க்கை மற்றும் தலைமைக்கான வேறு பார்வையை அளிப்பதாகக் கூறுகிறார்.
“நான் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளை அதிகம் எடுப்பவன். கேப்டன் ஸ்போக்கின் அலசல் அணுகுமுறைக்கு மாறாக கேப்டன் கிர்கின் முடிவெடுத்தல் என அடிக்கடி சொல்வேன்,” என்கிறார்.
முடிவெடுக்கும் போது தனிப்பட்ட அணுகுமுறையை விட ஒரு சி.இ.ஓ அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்பவர், உங்கள் சொந்த எண்ணங்களில் சிக்கி, அவை தான் சரி என நினைப்பது இயல்பு, நீங்களும் மனிதர் தான், நீங்களும் தவறு செய்யலாம் என்கிறார்.
மூன்றாவதாக, அவர் தனக்கு நெருக்கமான ஆதரவு குழுவிடம் ஆலோசனை கேட்கிறார். அவர் சிறந்த நண்பராக கருதும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர், சி.இ.ஓ. கிரிஷ் மாத்ருபூதம் உள்ளிட்டவர்கள் இதில் அடக்கம்.
“சவாலான நேரங்களில் ஆதரவு அளிக்கக் கூடிய நெருக்கமான வழிகாட்டிகள், நண்பர்களை சிறந்த நிறுவனர்கள் பெற்றுள்ளனர் என்று கூறும் அரவிந்த் தன்னை நாடி வருபவர்களுக்கும் இந்த வழிகாட்டுதலை வழங்குகிறார்.”
அபூர்வ நட்பு
கிரிஷ் மாத்ருபூதத்துடனான அவரது நட்பு ஒரு வேலை நேர்காணலில் இருந்து துவங்கியது. அப்போது கிரிஷ் ஜோஹோவில் (அட்வெண்ட்நெட்) பாணியாற்றிக்கொண்டிருந்தார். அரவிந்த் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். இருவரும் ரவுட்டர்கள் பற்றி பேசத்துவங்னர். அப்போது, அரவிந்திற்கு கோடிங் திறன் குறைவாக இருந்தாலும் தொழில்நுட்ப அறிவு இருப்பதை கிரிஷ் புரிந்து கொண்டார். இந்த பரஸ்பர புரிதல் நல்ல நட்பாக மாறியது. இன்றளவும் அரவிந்த பிரச்சனை என்றால் ஆலோசனைக்காக முதலில் கிரிஷை அழைக்கிறார்.
கிரிஷும் செல்சியா கால்பந்து அணியின் ரசிகர் என்பது கூடுதல் பொருத்தம். 2008ல் அரவிந்த், கிரிஷ் மற்றும் ராஜவேல் சுப்பிரமணியத்துடன் லண்டனில் செல்சியா போட்டியை காணச்சென்றனர். அந்த போட்டியில் செல்சியா 7-0 என வென்ற போது கிரிஷ் அந்த அணியின் ரசிகராக மாறினார்.
பொறியாளர் ஆன விதம்
அரவிந்த் பெங்களூருவில் வளர்ந்தார். இருப்பினும், தந்தையின் வர்த்தகம் காரணமாக அவரது குடும்பம் ஓசூருக்கு வந்தது. சென்னை அண்ணா பல்கலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தார்.
”நான் பொறியாளரானது விபத்து. ஏனெனில் அமெரிக்காவுக்கு சென்றுவிடலாம் எனும் எண்ணம் இருந்தது. மூன்று மாத விடுமுறையில் பகுதிநேர பணிக்கு விண்ணப்பித்தேன். இப்படி தான் ஜோஹோவில் சேர்ந்து சென்னைக்கு குடிபெயர்ந்தேன்,” என்கிறார் அரவிந்த்.
அரவிந்திற்கு ஜோஹோ கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான பிரதான இடமாக அமைந்தது. இதனால் அமெரிக்க எண்ணத்தை மறுபரிசீலனை செய்தார். பிராடக்ட் மார்க்கெட்டிங் ஆர்வம் காரணமாக அந்த பிரிவில் செயல்படும் வாய்ப்பு பெற்றார். எனினும், போதுமான பிராடகட் மார்க்கெட்டிங் வளங்கள் இருக்கவில்லை.
“செயல் மூலம் கற்றல் அணுகுமுறையை கையாண்டேன். தோல்வி கூட கற்றல் அனுபவமாக அமைந்தது. இப்படித் தான் திறன் வளர்ந்தது என்கிறார். 2015ல் அவர், எஸ்.எம்.பி நிறுவனங்களுக்காக சாஸ் சேவையான Zarget-டை உருவாக்கத்துவங்கினார்.
எனினும், இந்த சேவை பயன்படுத்திய பின் தூக்கி வீசக்கூடிய மென்பொருள் என உணர்ந்தார். எனவே, புதிய சேவையை உருவாக்குவது அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்துவது எனும் இரண்டு வாய்ப்புகளில் இருந்து தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
“இப்படி தான் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டோம்” என்கிறார். இப்போது திரும்பி பார்க்கும் போது 2017ல் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு சிறந்ததாக தோன்றுகிறது. ஃப்ரெஷ்வொர்க்சில் புதிய பொறுப்பு பெற்று கற்றல், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் பெற்றார்.
ஆனால், பச்சைக்குத்திய வாசகம் அவருக்கு இலக்கை நினைவூட்டிக்கொண்டே இருந்தது. இன்று அவரது தொழில்முனைவுப் பயணம் சரியானதாக அமைந்துள்ளது. போட்டி சூழலில் தங்கள் நிறுவனத்தை சரியாக பொருத்தி கொள்வது இளம் நிறுவனர்களுக்கு அவசியம் என்றும் ஆலோசனை சொல்கிறார்.
“இந்தியாவில் மார்க்கெட்டிங் என்பது வலுவானதாக இல்லை. எனவே, இரண்டு பொறியாளர்கள் சேர்ந்து நிறுவனம் துவங்கினால் போதாது என்பதே தொழில்முனைவோருக்கான எனது அறிவுரை என்கிறார். மாறுபட்ட திறமைகள் இணைந்திருக்க வேண்டும்,” என்கிறார்.
நிறுவனருக்கு அதிக நம்பிக்கை இருப்பதோடு, வளைந்து கொடுக்கும் உறுதியும் தேவை. மலை உச்சியை அடைய வேண்டும் என்பது நம்பிக்கை. ஆனால், தவறான வழியில் சென்றால், அதை தொடர்வது உறுதியாக அமையாது. பிரச்சனையாக மாறிவிடும், என்கிறார் அரவிந்த்.
அரவிந்த தனது இரண்டாவது தொழில்முனைவு பயணம் நீண்ட காலத்திற்கானது என நம்புகிறார்.
“என் கனவு எளிமையானது. புதிய நிறுவனத்தை துவக்கி இரண்டு ஆண்டுகளில் விற்பனை செய்ய விரும்பவில்லை. நீடித்த வர்த்தகத்தை உருவாக்க விரும்புகிறேன்.” என்கிறார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத் | தமிழில்: சைபர் சிம்மன்
வங்கிகள் தனிநபருக்கு 10 நிமிடத்தில் கடன் கொடுக்க உதவும் சென்னை ஃபின்டெக் ஸ்டார்ட்-அப் ‘Cloudbankin’
Edited by Induja Raghunathan