‘தினமும் 8 மணி நேரம் படிப்பேன்’- முதல் முயற்சியிலே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் மகள்!

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற கிராமத்து மாணவி ஒருவர், விடாமுயற்சி செய்து தன்னம்பிக்கையுடன் குரூப் ஒன் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக தேர்ச்சி அடைந்திருப்பது அனைவரும் மத்தியிலும் பாராட்டை குவித்து வருகிறத

‘தினமும் 8 மணி நேரம் படிப்பேன்’- முதல் முயற்சியிலே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் மகள்!

Monday August 08, 2022,

3 min Read

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற கிராமத்து மாணவி ஒருவர், விடாமுயற்சி செய்து தன்னம்பிக்கையுடன் குரூப் ஒன் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக தேர்ச்சி அடைந்திருப்பது அனைவரும் மத்தியிலும் பாராட்டை குவித்து வருகிறது.

ஏழ்மையான சூழ்நிலையில் படித்த பல மாணவ, மாணவிகள் பொதுத்தேர்விலும், வேலை வாய்ப்பிலும், அரசு தேர்வுகளிலும் சாதனை படைத்ததை பார்த்திருப்போம். தற்போது அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவி எந்த பயிற்சி வகுப்பிலும் பங்கேற்காமல் தனது முதல் முயற்சியிலேயே குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று அசத்திய பவானியாவை பற்றி பார்க்கலாம்...

Bhavaniya

பவானியா

தமிழ் வழிக்கல்வியில் சாதித்த பவானியா:

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு செட்டியாப் பட்டி கிராமம் முழுவதும் இன்று எதிரொளித்து வரும் ஒரே பெயர் பவானியா. அந்த கிராமத்தில் டீக்கடை நடத்தி வரும் வீரமுத்து மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளியான வீரம்மாளின் 3வது மகள்.

இவருக்கு ரேவதி, வனிதா என்ற இரண்டு அக்காக்களும், திலகா என்ற தங்கையும் உள்ளனர். இதில் ரேவதி, வனிதா இருவருக்கும் திருமணமாகிவிட்டது, கடைசி பிள்ளையான திலகா கல்லூரியில் படித்து வருகிறார்.

பொருளாதார ரீதியாக வசதியில்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் 4 பிள்ளைகளையும் இந்த தம்பதி எந்த வித குறையும் இல்லாமல் வளர்ந்துள்ளனர். குறிப்பாக தங்களால் முடிந்த அளவு மகள்களை படிக்க வைத்து, ஆளாகியுள்ளனர். குறைந்த வருமானத்தில், 4 பெண் குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்ந்த பெற்றோரை பவானியா இன்று தலைநிமிர வைத்துள்ளார்.

DSP

ஏ.மாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பவானியா தொடக்கக் கல்வி முதலே படிப்பில் படு சுட்டியாக இருந்தவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1057 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

இதனையடுத்து, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில், கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் கிடைத்த வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல் சின்ன வயதில் இருந்தே தான் கண்டு வந்த கலெக்டர் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற கனவு துளிர் விட்டது எப்படி என்பது குறித்து பவானியா கூறுகையில்,

“எங்கள் ஊரில் சாலை, பேருந்து உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதியும் சரியாகக் கிடையாது. பள்ளிக்கூடத்துக்கு பல கிலோமீட்டர்கள் நடந்து தான் செல்ல வேண்டும். என் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்றால், மக்களுக்கு சேவையாற்ற கூடிய மாவட்ட ஆட்சியர் போன்ற பொறுப்பான பதவியில் இருக்க வேண்டும். அப்போது தான் என் ஆழ்மனதில் ஆட்சியராக வேண்டும் என்ற கனவு வேறுரூன்ற ஆரம்பித்தது,” என்கிறார்.

கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு வேறு எங்கும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பாடப் புத்தகத்தை படித்து அத்தேர்வை எழுதிய பவானியா முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.‌

அதன் பிறகு, தேர்ச்சி அடைந்தோருக்கான அடுத்த தேர்வை எதிர்கொள்ள சென்னையில் உள்ள ஒரு மையத்தில் சிறப்பு வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் எல்லார் வாழ்க்கையும் புரட்டிப் போட்ட கொரோனா பரவல் பவானியா வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக இரண்டு மாதத்திலேயே சென்னைஊருக்கு திரும்பினார். அதன் பிறகு எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் மீண்டும் வீட்டிலிருந்தே படிக்க ஆரம்பித்துள்ளார்.

பயிற்சிக்கு வகுப்பிற்கே செல்லாமல் தேர்ச்சி பெற்றது எப்படி என்பது குறித்து பவானியா கூறுகையில்,

”பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே பாடப்புத்தகத்தை தவிர வரலாறு, பொது அறிவு, புராணம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிப்பேன். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கிடைக்கும் புத்தகங்களையும் தேர்வுக்கு தயாராவதற்காக பயன்படுத்திக் கொண்டேன். தினமும் 8 மணி நேரம் படிப்பேன். அதிகபட்சம் பாடப் புத்தகங்கள் மற்றும் பொது அறிவு சம்பந்தமாக நான் படித்த புத்தகங்கள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற எனக்கு மிகவும் உதவியது,” என்றார்.
DSP

அதன் பிறகு, எழுத்து தேர்விலும் நேர்முகத் தேர்விலும் துணை ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு அந்த தேர்வை எழுதிய இவர், சற்று மதிப்பெண் குறைந்ததால் தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் காவல் துணை கண்காணிப்பாளர் பணிக்குத் தேர்வாகியுள்ளார். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் துணை காவல் கண்காணிப்பாளர் பயிற்சிக்கு செல்லத் தயாராகி வருகிறார்.

விடாமுயற்சியுடன் படித்தும் துணை ஆட்சியராகும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என சோர்த்துவிடாமல் தனது கனவை நோக்கி தொடர்ந்து முன்னேறுவேன் என்கிறார் பவானியா. ஆம், காவல்துறை துணை கண்காணிப்பாளராக தேர்வானாலும் மீண்டும் குரூப் 1 தேர்வு எழுதி துணை ஆட்சியராக முயற்சிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பிம்னும் தற்போது கிடைத்துள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொறுப்பில் முழு கவனத்துடன் பணியாற்றி, மக்களுக்கு சேவையாற்றுவேன் எனக்கூறியுள்ள பவானியா, போட்டித் தேர்வு எதிர்கொள்பவர்கள் தன்னம்பிக்கையடனும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும் நமக்கான மதிப்பெண்களை குறைந்த அளவில் தான் எடுப்போம் என்று நினைக்காமல் முழு மதிப்பெண்ணையும் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழு கவனம் செலுத்தி படித்தால் கட்டாயம் என்னை போல் தேர்ச்சி அடையலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.