பேக்கேஜிங் துறையில் ரூ.173 கோடி டர்ன் ஓவர் - ஏஜி பாலிபேக்ஸ் சக்சஸ் ஸ்டோரி!
அழகு சாதனப் பொருட்கள் அல்லது மருந்து பாட்டில்கள் ஷெல்பில் அடுக்கி வைக்கப்படுவதை பார்க்கும் போது, முதலில் வடிவமைப்பு மற்றும் தோற்றம் தான் கண்ணில் படும்.
பதஞ்சலி, மமாஎர்த், ஃபேப் இந்தியா, விஎல்சிசி, பொருட்களை நீங்கள் வாங்கியிருந்தீர்கள் என்றால், நீங்கள் ஏஜி பாலிபேக்ஸ் பொருட்களை வாங்கியிருக்கிறீர்கள் எனப் பொருள்.
1997ல், சட்டத்துறையில் தொழில் வாழ்க்கையான வாய்ப்பை விட்டு விட்டு கவுரவ் டாகா பாட்டில் தயாரிப்பில் ஈடுபட்ட போது மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பைக் கண்டார்.
“சட்டத்துறையில் தொழில் வாழ்க்கையை துவக்குவது கடினம் என சகோதரர் கூறினார். புதுயுக பேக்கேஜிங் பிரிவில் அதிக போட்டி இல்லை என்பதை உணர்ந்த போது, வர்த்தகம் துவக்க விரும்பினேன்,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் கவுரவ் டாகா கூறினார்.
அந்த காலகட்டத்தில் பேக்கேஜ் துறையில் கண்ணாடி பாட்டில்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், நிறைய பிரச்சனைகள் இருந்தன. பாட்டில்களிலும் பிரச்சனைகள் இருந்தன. அவை அடிக்கடி உடையும் தன்மை கொண்டிருந்ததால் இந்தப் பிரிவில் செலவு குறைந்த புதிய தீர்வுக்கான தேவை இருந்தது.
இந்த நிலையில் தான் டாகா, எஜி பாலிபேக்ஸ் நிறுவனத்தை துவக்கினார்.
“பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் பாட்டில்கள் விநியோகிஸ்தர்களாக துவங்கினோம். இவை செலவு குறைந்தவை என்பதோடு, அதிக எடை இல்லாதவை மற்றும் உடையாதவை,” என்கிறார் டாகா.
இந்த உத்தி நல்ல பலன் அளித்தது. இன்று அவரது நிறுவனம், மருந்தகம், அழகு சாதனம், உணவு உள்ளிட்ட துறைகளுக்கான பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது. 2022 நிதியாண்டில் நிறுவனம் ரூ.159 கோடி விற்றுமுதல் ஈட்டியது.
சரியான உத்தி
ஏஜி பாலி பேக்ஸ் நிறுவனம் துவக்கப்பட்ட போது, பியர்ல் பாலிமர்ஸ் எனும் நிறுவனம் முன்னணியில் இருந்தது. பியர்ல்பெட் வகை பாட்டில்களை வீட்டுத்தேவைகளுக்காக விற்பனை செய்து வந்தது.
“இந்நிறுவனம் சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருந்தது. வர்த்தக விற்பனையில் ஈடுபடவில்லை. சாக்லெட்கள், தேயிலை தூள் உள்ளிட்ட பொருட்களை பேக் செய்யக்கூடிய வகையில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் வகையில் வர்த்தகம் சார்ந்த வாய்ப்பு இருந்தது,” என்கிறார் டாகா.
இதனையடுத்து, உற்பத்தியாளர்களிடம் இருந்து பாட்டில்களை வாங்கி, மருந்தக மற்றும் உணவுத்துறைக்கு வழங்கத்துவங்கினார். பல்வேறு உற்பத்தியாளர்களை நாடாமல், ஒரே இடத்தில் எல்லாம் கிடைத்ததால் வாடிக்கையாளர்களும் இதை விரும்பினர் என்கிறார் டாகா. எனினும், பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதை சவாலாக உணர்ந்தார்.
“துவக்கத்தில் சொந்த உற்பத்தி ஆலை அமைப்பது பற்றி யோசிக்கவில்லை. நல்ல வர்த்தகம் இருந்தாலும் சொந்த உற்பத்தி வசதி இல்லை. பெரிய ஆர்டர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது,” என்கிறார்.
2012ல், காஸியாபாத்தில் முதல் உற்பத்தி ஆலையை நிறுவனம் அமைத்தது. 2800 டன் வருடாந்திர உற்பத்தித் திறன் கொண்டுள்ளது. 2019ல் 2200 டன் திறன் கொண்ட இரண்டாவது ஆலை அமைக்கப்பட்டது.
உற்பத்தி ஆலை அமைப்பதற்கான செலவு அதிகம் இருந்தது. ஏனெனில் வாடிக்கையாளர்கள், பலவகையான வடிவமைப்பு கொண்ட பாட்டில்களை எதிர்பார்த்தனர்.
இது சவாலாகவும், வாய்ப்பாகவும் அமைந்தது. இயந்திரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு செலவு அதிகமாக இருந்தது. இதனால் மற்ற நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை பற்றிக்கொள்வதும் குறைவாகவே இருந்தது என்கிறார் டாகா.
ஏஜி பாலிபேக்ஸ் நிறுவனம் இன்று, 70 சதவீத வர்த்தகத்தை அழகு சாதன பொருட்கள் நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது. எஞ்சியவை மருந்தகம் மற்றும் உணவு வாடிக்கையாளர்களிடம் இருந்து வருகின்றன.
முன்னிலை
“உற்பத்தி வசதி, எங்கள் சொந்த வடிவமைப்பை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு அவற்றை பரிந்துரைக்க வழி செய்தது,” என்கிறார்.
மற்ற பேக்கேஜிங் நிறுவனங்கள், குறைந்த எண்ணிக்கையிலான துறைகளுக்கு சப்ளை செய்கின்றன அல்லது குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன என்றால், ஏஜி பாலிபேக்ஸ் நிறுவனம், சொந்த உற்பத்தி வசதி கொண்டு விரைவாக புதிய வடிவமைப்புகளை வழங்குவதன் மூலம் போட்டியில் முன்னிலை பெறுகிறது, என்கிறார் டாகா.
தற்போது இமாச்சல பிரதேசத்தில் புதிய ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இ-காமர்ஸ் மற்றும் நேரடி விற்பனை ஆர்டர்களை மனதில் கொண்டு இந்த ஆலை அமைக்கபப்டுகிறது. இந்தியாவில் பேக்கேஜிங் துறை 2021ல் 81 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது.
இத்துறை 2027ல், 27 சதவீத வளர்ச்சியோடு 325 பில்லியன் டாலராக இருக்கும் என மேக்சிமைஸ் மார்க்கெட் ரிசர்ச் தெரிவிக்கிறது.
“2023 நிதியாண்டில் ரூ.173 கோடி விற்றுமுதலை எதிர்பார்க்கிறோம். இந்த அளவு பெரிதாக வளரும் என ஒருபோதும் நினைக்கவில்லை,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்
100 சதுர அடியில் தொடங்கி; இன்று 10,000 சதுர அடி கடை - ரூ.750 கோடி டர்ன்ஓவர் செய்யும் நகைக்கடையின் வெற்றிக்கதை!
Edited by Induja Raghunathan