100 சதுர அடியில் தொடங்கி; இன்று 10,000 சதுர அடி கடை - ரூ.750 கோடி டர்ன்ஓவர் செய்யும் நகைக்கடையின் வெற்றிக்கதை!
உத்திரப்பிரதேசத்தில் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Aisshpra Gems and Jewels வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என தரமான நகைகளை விற்பனை செய்து வருகிறது.
நகைகள் இந்தியர்களுக்கு எப்போதும் மிகவும் நெருக்கமானவை. தங்கம், வைரம் என அனைத்து வகையான நகைகளையும் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
தனிஷ்க், மலமார், ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் போன்ற பல்வேறு பிராண்டுகளைப் போன்றே பிரபலமானது உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த Aisshpra Gems and Jewels பிராண்ட்.
ஹரி பிரசாத் கோபி கிருஷ்ணா சரஃப் குரூப்பின் Aisshpra Gems and Jewels 1940ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் குழுமத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர் இந்த பிராண்ட் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர்.
இந்த பிராண்ட் 82 ஆண்டுகளுக்கு முன்பு 100 சதுர அடி அளவு கொண்ட வாடகை இடத்தில் தொடங்கப்பட்டது. இன்று உத்திரப்பிரதேசத்தின் நம்பகமான நகை பிராண்டாக உருவாகியுள்ளது. இன்று இந்த பிராண்டின் வருடாந்திர டர்ன்ஓவர் 750 கோடி ரூபாய். இதன் நிறுவனர் அனூப் சரஃப்.
அனூப்பின் அப்பா பாலகிருஷ்ணாவும் அவரது அண்ணன் கோபி கிருஷ்ணாவும் இணைந்து ஹரி பிரசாத் கோபி கிருஷ்ணா சரஃப் குரூப் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஜரி, கோட்டா ஆகியவற்றை விற்பனை செய்த இவர்கள் பின்னர் கொலுசு, மெட்டி உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களையும் விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற இவர்கள் படிப்படியாக தங்கத்தையும் விற்பனை செய்யத் தொடங்கினார்கள். இன்று அனூப் சரஃப் மட்டுமல்லாது அவரது அண்ணன், இவர்கள் இருவரின் குழந்தைகள் என இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர் வணிகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
வைர நகைகள்
1990-ம் ஆண்டு இந்த பிராண்ட் வைர நகைகளை விற்பனை செய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் கோரக்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைரம் என்பது அத்தனை பரிச்சயமில்லாத ஒன்று. திரும்பப்பெற்றுக்கொள்ளும் உத்தரவாதத்துடனும் சான்றிதழுடனும் வைர நகைகளை இந்த பிராண்ட் புரொமோட் செய்தது. வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து வணிகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. 1995ம் ஆண்டு இந்த பிராண்ட் செயல்பட்ட அந்த 100 சதுர அடி வாடகை இடம் மட்டுமல்லாது அந்த ஒட்டுமொத்த கட்டிடத்தையும் Aisshpra வாங்கிக்கொண்டது. தற்போது இந்த பிராண்ட் 10000 சதுர அடி ஷோரூமில் இயங்கி வருகிறது. பழைய மார்க்கெட்டில் இந்த பிராண்ட் செயல்படத் தொடங்கியது. தற்போது கோல்கர் என்றழைக்கப்படும் புதிய மார்க்கெட்டிலும் இந்த பிராண்டின் ஜுவல்லரி ஷோரூம் செயல்படுகிறது.
பிராண்டிங்
Aisshpra Gems 2002ம் ஆண்டு பிராண்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் வெறும் வைர நகை பிராண்டாகவே அறிமுகமானது. வட இந்தியாவில் வைர நகையை முதல் முறையாக பிராண்ட் செய்தது Aisshpra Gems.
வாடிக்கையாளர்களின் தேவை வைரம் மட்டுமல்ல என்பதையும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற நகைகளுக்கும் மக்களிடையே அதிகத் தேவை இருப்பதை இந்த பிராண்ட் உணர்ந்தது. அதன் பிறகு, இந்த நகை வகைகளும் விற்பனை செய்யப்பட்டன. இன்று சிறிய மூக்குத்தி முதல் பெரிய வைர நெக்லஸ் வரை Aisshpra Gems விற்பனை செய்கிறது.
பட்ஜெட் நகைகள் முதல் விலையுயர்ந்த நகைகள் வரை….
Aisshpra Gems அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் நகைகள் முதல் டிசைனர் மற்றும் அதிக பட்ஜெட் நகைகள் வரை தயாரிக்கிறது. வெவ்வேறு நகைப் பிரிவுகளில் இந்த பிராண்ட் 21 விருதுகள் பெற்றுள்ளது.
Aisshpra Gems தென்னிந்திய நகைகளையும் தயாரிக்கிறது. ஆண்டிக் நகைகள், தென்னிந்திய கோயில் வடிவங்கள் போன்றவை தனிச்சிறப்பு கொண்டவை. குந்தன், போல்கி போன்றவை சார்ந்த ராஜஸ்தானி நகைகளையும் இந்த பிராண்ட் தயாரிக்கிறது. அதேபோல், வங்காளத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் மூலம் தயாரிக்கப்படும் நகைகள், ராஜ்கோட் நகைகள் போன்றவையும் இங்கு உள்ளன. இப்படி Aisshpra Gems ஸ்டோர் இந்தியா முழுவதும் உள்ள நகை கலெக்ஷன்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இன்றளவும் பெரும்பாலான நகைகள் ஒழுங்குபடுத்தப்படாத துறையைச் சேர்ந்ததாகவே உள்ளன என அனூப் சரஃப் சுட்டிக்காட்டினான்.
அங்குள்ள வாடிக்கையாளார்களுக்கு நகைகள் வாங்க அதிக ஆப்ஷன் இல்லாததால் உள்ளூர் நகை விற்பனையாளர்களையே சார்ந்துள்ளனர். இந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைய அளிப்பதற்காகவே Aisshpra Gems விரிவாக்கப் பணிகளில் மூன்றாம் நிலை நகரங்களில் அதிக கவனம் செலுத்தியது.
விரிவாக்கம்
Aisshpra Gems தற்போது 400 ஊழியர்களை பணியமர்த்தியிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் கோரக்பூர், பலியா, அசம்கர், தேவ்ரியா, பஸ்தி, படரவுனா, லக்னோ ஆகிய இடங்களில் 8 சில்லறை வரத்தக அவுட்லெட்கள் செயல்படுகின்றன.
இந்த பிராண்ட் பலியா, அசம்கர், தேவ்ரியா, பஸ்தி, படரவுனா, லகோ ஆகிய இடங்களில் ஃப்ரான்சைஸ் முறையில் செயல்படுகிறது.
இவை தவிர விரைவில் இந்நிறுவனம் அயோத்தியாவில் ஒரு ஸ்டோர் திறக்க உள்ளது. தற்போது உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹாரில் விரிவடைவதையே இந்த பிராண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. 3-4 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப்பிரதேசத்தில் அதன் செயல்பாடுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் பாலிவுட் நகை யாமி கௌதம் தர் விளம்பரத்திற்காக இந்த பிராண்டுடன் இணைந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா, பிரகதி இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்தே Aisshpra என்கிற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஃபேஷன் நகைகளை இந்த பிராண்ட் அறிமுகப்படுத்த உள்ளது.
வெளிப்படைத்தன்மையுடன் சுத்தமான, தரமான நகைகளை வழங்கவேண்டும் என்கிற நோக்கத்தை முன்னிறுத்தியே இந்த பிராண்ட் செயல்பட்டு வருகிறது.
தமிழில்: ஸ்ரீவித்யா
சிஏ கனவை கைவிட்டு நகை பிராண்ட் தொடங்கிய பெண்: 2 வருடத்தில் ரூ.2 கோடிக்கு விற்பனை!