அன்று ரூ.400 சம்பளம், பஸ் நிலையத்தில் தூக்கம்: இன்று 45 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழில்முனைவர்!

214 CLAPS
0

அறை முழுவதும் விருதுகளுடனும் கேடயங்களுடம் அமர்ந்திருக்கிறார் செல்வகுமார். தமிழக அரசின் உயரிய விருதான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதினை தமிழக அரசு கடந்த ஆண்டு இவருக்கு வழங்கியது. ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளையின் செயல்பாட்டுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

'மாருதி பவர் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் கிரேட் வொர்க்ஸ்' என்னும் நிறுவனங்களை நடத்தி வருவது மட்டுமல்லாமல் ஆனந்தம் அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார் செல்வகுமார். ஆரம்பகாலம், தொழில், அதில் செய்த தவறுகள், தவறுகள் மூலம் உருவான நிறுவனம், அறக்கட்டளை என பல விஷயங்கள் குறித்தும் மூன்று மணி நேரத்துக்கு மேலாக பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலின் முழுமையான வடிவம் இதோ!

ஆரம்பகாலம்

நாகப்பட்டினம் அருகே உள்ள சிறிய ஊரில் பிறந்தவர் செல்வகுமார். 12 குடும்பங்கள் மட்டுமே உள்ள சிறிய ஊரில் இருந்துகொண்டே தொடக்கக் கல்வி முடித்தார். அதனைத் தொடர்ந்து உயர்நிலை பள்ளிக்கு அருகே உள்ள நகரத்துக்கு வந்தார். பத்தாம் வகுப்புக்கு பிறகு, மேல்நிலைகல்வி, கல்லூரி என செல்லாமல்,  டிப்ளமோ படிக்கச்சென்றார்.

படித்து முடித்தவுடன் சென்னைக்கு வந்து பணிபுரியவேண்டும் என முடிவுடன் வந்தார். தெரிந்தவர் மூலமாக ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை. 1994ம் ஆண்டு அம்பத்தூர் எஸ்டேடில் வேலை தேடி அலைந்துள்ளார். அப்போது டிப்ளமோ எலெக்ட்ரானிக்ஸ் படித்ததால் ரிச்சி சாலையில் வேலை கிடைக்கும் என யாரோ சொல்ல ரிச்சி சாலையில் உள்ள யுபிஎஸ் மற்றும் இன்வெர்டர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் செல்வகுமார்.

சேர்ந்த சில மாதங்களில் யூபிஎஸ் சர்வீஸ் வேலை பழகியதால் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் யூபிஎஸ் சர்வீஸுக்கு செல்லத் தொடங்கினார்.

“அப்போலாம் 400 ரூபாய் சம்பளம். வெளியூர்களுக்குச் சென்றால் ஒரு நாளைக்கு 75 ரூபாய் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் கொடுப்பார்கள். ஒரளவுக்கு நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பதற்காக அதிக செலவு செய்துவிடுவேன். அதனால் தங்குவதற்கு போதுமான பணம் இருக்காது. அதனால் பேருந்து நிலையங்களில் இரவுபொழுதில் தூங்கி கழித்துவிடுவேன்,” என கடந்த நாட்களை நினைவுகூர்ந்தார் செல்வகுமார்.

அடுத்த நாள் வேலைக்கு பேருந்து நிலையங்களில் எப்படி ரெடி ஆகமுடியும் என மேலும் கேட்டதற்கு, தமிழக பேருந்து நிலையங்களில் இன்றும் ஒரு விஷயம் கடைபிடிக்கப்படுகிறது. விடியற் காலையில் குளியல் அறை மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்வார்கள். அப்போது முதல் ஆளாக அங்கு சென்று குளித்து ரெடியாகிவிடுவேன், என்றார்.

அதுமட்டுமில்லாமல், அங்கு கிடைத்த அனுபவம்தான் பின்னாட்களில் ’ஆனந்தம் அறக்கட்டளை’ தொடங்கக் காரணமாக இருந்ததாகவும் சொன்னார்.

தொழில்முனைவில் காலடி

யுபிஎஸ் சர்வீஸில் தமிழகம் முழுக்க சென்ற அனுபவத்தில், அடுத்தகட்டமாக வேறு ஒரு டெல்லி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் செல்வகுமார். அதனைத் தொடர்ந்து 1996-ம் ஆண்டு ரூ.40,000 முதலீட்டில் குடியிருந்த அறையிலே அசெம்பிளி யூனிட் தொடங்கியுள்ளார்.

“முதலில் வீடுகளுக்குத் தேவையான இன்வெர்டரில் ஆரம்பித்தோம். அடுத்து நிறுவனங்களுக்கு தேவையான யுபிஎஸ் சேவையை தொடங்கினோம். அதன் பிறகு எக்ஸைட் உள்ளிட்ட சில பேட்டரி நிறுவனத்தின் டிஸ்ரிபியூட்டராக மாறினோம். இதனைத் தொடர்ந்து சோலார் பேனல் அமைத்துக்கொடுக்கும் சேவையில் இறங்கினோம். கடைசியாக சிசிடிவி என்பது வளர்ந்து வரும் துறை என்பதால் சிசிடிவி சேவையிலும் இறங்கி தொழிலை விரிவுப்படுத்தேன்,” என்றார்.

1996-ம் ஆண்டே 3 லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை இருந்தது.

2005ம் ஆண்டு 3 கோடி ரூபாய் விற்பனையை எட்டினோம். கடந்த நிதி ஆண்டில் 45 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டினோம்,” என்கிறார்.

பார்பதற்கு பெரிய வருமானம் போல தோன்றினாலும் நாங்கள் இன்னும் பெரிய அளவில் வளர்ந்திருக்க முடியும். நாங்கள் சரியான வழியில் முயற்சி செய்திருந்தால் 500 கோடி ரூபாய் நிறுவனமாக மாறி இருக்க முடியும். ஆனால் அதை விட பத்து மடங்கு குறைவாக இருக்கிறோம், என்றார் செல்வகுமார்.

தொழிலில் ஏன் தேக்கம் இருக்கிறது என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராயத் தொடங்கினோம். நாங்கள் பிஸினஸ் செய்கிறோம். வருமானம் ஈட்டுகிறோம். ஆனால் இதனை ஒரு யுத்தியாக வடிவமைத்து செய்யவில்லை. தொழிலில் தரம் மற்றும் சேவையை குறைத்துக் கொள்ளவில்லை என்பதால் மட்டுமே இந்த வருமானம் இருக்கிறது.

இவர்கள் மூன்று பிரிவுகளில் செயல்படுகிறார்கள். உதாரணத்துக்கு யுபிஎஸ் வைத்திருப்பவர்களுக்கு சிசிடிவி பிரிவில் இவர்கள் செயல்படுவது தெரியவில்லை. இது ஒரு பின்னடைவாக இருந்தது.

”எங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் கிராஸ் செல்லிங் செய்தாலே பெரும் வருமானம் ஈட்ட முடியும். ஆனால் இதை நாங்கள் செய்யவில்லை. தவிர சரியான யுத்தியோ அல்லது அடுத்த கட்டத்துக்கான திட்டம் என எதுவும் இல்லை. ஒரு வேளை எங்களிடம் இது குறித்து புரிதல் இருந்திருந்தால் இன்னும் பெரிய வளர்ச்சியை நாங்கள் அடைந்திருப்போம்,” என்கிறார்.

SME-களுக்கு வழிகாட்டும் ’கிரேட் வொர்க்ஸ்’

நாங்கள் இருப்பது போலவே மற்ற எஸ்.எம்.இ. நிறுவனங்களும் இருப்பார்கள் என்பது எங்களுக்கு புரிந்தது. அதனால் எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ’கிரோட் வொர்க்ஸ்’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

பெரும்பாலான சிறு நிறுவனங்களுக்கு பஞ்சாயத்துகளிலே நேரம் வீணாகிறது. சரியான நபர்களைத் தேர்வு செய்வதில் இருந்து தொடங்கி, ஒரு விற்பனையை முடித்து பணம் வாங்குவதிலே நேரம் வீணாகிறது. இதனை சரியான வழியில் செய்யும்போது நேரம் மீதமாகும். அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து சிந்திக்கலாம்.

’கிரேட் வொர்க்ஸ்’ மூலம் எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். மார்க்கெட்டிங் யுத்தியை எப்படி உருவாக்குவது, பணிகளிடத்தில் எப்படி ரிப்போர்ட் வாங்குவது, மனிதவளம் குறித்த கொள்கை, அடுத்த ஐந்தாண்டு திட்டம் என பல விஷயங்கள் குறித்து சிறு நிறுவனங்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.

இப்போதைக்கு 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப சேவைக் கட்டணம் வசூலிக்கிறோம். 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.5 லட்ச ரூபாய் வரை கூட மாதத்துக்கு சேவை கட்டணம் வாங்குகிறோம். இது நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு ஏற்ப இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்கிறோம். இந்த நிறுவனத்தின் நோக்கமே சிறு நிறுவனங்களை பெரிய நிறுவனமாக வளர்க்க வேண்டும் என்பதுதான்.

சிறிய நிறுவனங்களிடம் பெரிய வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. ஆனால், அவ்வளவு பெரிய சந்தையை எப்படி கைப்பற்றுவது என்பதற்கான திட்டம், அதற்கான வழிமுறையோ இல்லை. அதைவிட முக்கியம் பெரிய சந்தை நம் முன்னே இருக்கிறது என்பதே பல நிறுவனங்களுக்கு தெரியவில்லை.

ஆரம்பத்தில் பணியாளர்களுக்கு அதிக பயிற்சி கொடுக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால், பணியாளர்களை விட தலைமை செயல் அதிகார்களிடன் உரையாடி அவர்களை மாற்றினாலே போதும் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது புரிந்தது என்று செல்வகுமார் கூறினார்.

ஆனந்தம் அறக்கட்டளை

1994ம் ஆண்டு வேலைக்கு சென்ற போது ஓவ்வொரு ஊர்களிலும் உள்ள பேருந்து நிலையத்தில் தங்குவேன். எனக்கு அந்த ஒரு நாள்தான். ஆனால், அதே பேருந்து நிலையத்தில் தினமும் ரெகுலாக தங்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அதிகம் யோசித்தேன்.

“ஏன் அப்படி தங்குகிறார்கள் என யோசித்தால் அவர்களுக்கு கல்வி இல்லை என நாம் நினைப்போம். ஆனால் கல்வி அவர்களுக்கு பிரச்சினை இல்லை, படித்தவர்கள் கூட இதுபோல தங்குகிறார்கள். மனரீதியான, பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள் என நான் புரிந்துகொண்டேன்.”

இந்தப் பிரச்சினையை தீர்க்க நம்மால் முடிந்த அளவுக்கு உதவலாம் என பள்ளி, கல்லூரிகளில் உரையாடலாம் என முடிவெடுத்து மாணவர்களிடம் உரையாடத் தொடங்கினேன். 380க்கும் மேற்பட்ட கூட்டங்களில் நான் பேசி இருக்கிறோம். ஒரு கட்டத்தில் இதனால் என்ன பயன் கிடைத்தது என்று பார்த்தால் tangible ஆக ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இதுபோல பேசத் தொடங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

இனி நேரடியாக என்ன மாற்றத்தை உருவாக்க முடியும் என யோசித்து மாணவர்களை படிக்க வைக்க ‘ஆனந்தம் அறக்கட்டளை’ தொடங்கினோம். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நன்றாக படிக்கும் குழந்தைகளின் மேற்படிப்பை ஏற்று நடத்தலாம் என முடிவெடுத்தோம்.

ஒவ்வொரு ஆண்டும் +2-க்கு பிறகு 2 லட்சம் மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லவதிலை. படிப்பு ஏறவில்லை என்பதல்ல பிரச்சினை, மேற்கொண்டு படிப்பதற்கு வசதியில்லை. இதுபோன்ற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் கல்லூரியில் சேருவதில் இருந்து வேலைக்கு செல்லும் வரை உடன் இருக்கிறோம்.”

குடிசை அல்லது ஓட்டு வீடுகளில் இருக்கும் மூன்று வேளை உணவு சாப்பிடாத  மாணவர்கள் பலர் எங்கள் மூலமாக படிக்கிறார்கள். மருத்துவம், இன்ஜினீயரிங், அக்ரி உள்ளிட்ட பல பாடங்களை படித்திருக்கிறார்கள். இதுவரை 620-க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆனந்தம் அறக்கட்டளை மூலமாக படித்திருக்கிறார்கள். இதில் 240 மாணவர்கள் படித்து முடித்து வேலைக்குச் செல்லத் தொடங்கிவீட்டார்கள். 30 லட்சம் கூட சம்பளம் வாங்குபவர்கள் இருக்கிறார், என்கிறார் செல்வகுமார் மனநிறைவோடு.

பெயர் சொல்லும் அனைத்து ஐடி நிறுவனங்கள், டெக்னால்ஜி நிறுவனங்கள், அரசுப் பணி என அனைத்து இடங்களிலும் எங்களது மாணவர்கள் இருக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்து பலர் வாழ்க்கையில் ஏற்றத்தை எங்களால் பார்க்க முடிகிறது என்றவர் இதற்கு நான் மட்டுமே காரணமல்ல, ஒரு பெரிய குழு இதற்காக உழைக்கிறது, என்றார்.

”ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கு மேல் செலவாகிறது. எங்கள் நிறுவனம் மூலமாக சில லட்சம் மட்டுமே கொடுக்கிறோம். மீதமுள்ள அனைத்தும் பல நல்ல உள்ளங்கள் எங்கள் அறக்கட்டளைக்குக் கொடுத்து உதவுகிறார்கள்.”

இதைதவிர, ஒவ்வொரு மாணவருக்கும் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களை வழி நடத்துகிறார்கள். தற்போது எங்களிடம் படித்த மாணவர்கள் வேலைக்குச் சென்று அவர்கள் நிதி உதவி செய்வது, ஆலோசனை வழங்குவது என வளர்ந்துவிட்டார்கள் என்பதுதான் எங்களின் தற்போதைய சந்தோஷம் என்றவர் தொழில் குறித்து திட்டத்தை கேட்டதற்கு,

“அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் விற்பனையை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகக் கூறினார்.”

தொழிலில் கிடைக்கும் பெரும் வெற்றியை விட தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மாற்றியதை சாதனையாக நினைக்கிறார் செல்வகுமார். ஆனால், இவரது தொழில் சார்ந்த இலக்கை எட்டும்போது சமூகம் சார்ந்த இலக்கும் தானாக உயரும் என்பதே உண்மை. அந்த சமூக நலனுக்காக இவர் மென்மேலும் தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்திவிட்டு விடைபெற்றேன்.

Latest

Updates from around the world