பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவில் சுகுணா ஃபுட்ஸ்: ஆன்லைன், ஆஃப்லைன் விற்பனை பிராண்ட் Delfrez அறிமுகம்!
சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம், Delfraz எனும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனைக்கான பிராண்டை அறிமுகம் செய்துள்ளதோடு, குழும அளவிலான பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது.
கோழி பண்ணைத் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ள ’சுகுணா ஃபுட்ஸ்’ குழுமம், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனைக்கான ’டெல்பிரஸ்’ (Delfrez) பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவு மூலமான வருவாயை அடுத்த 5 ஆண்டுகளில் 20 சதவீதமாக உயர்த்திக்கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுகுணா ஃபுட்ஸ் குழும அளவில் மேற்கொண்டுள்ள பிராண்ட் சீரமைப்பு நடவடிக்கையின் அங்கமாக ’டெல்பிரஸ்’ பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. சுகுணா ஃபுட்ஸ் உணவுப் பொருட்களை இந்த பிராண்ட் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கும்.
இந்த புதிய பிராண்டில் குழுமம் ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளதாகவும். 2025ம் ஆண்டு வாக்கில் ஆயிரம் விற்பனை நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான சுகுணா ஃபுட்ஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
குழுமத்தின் இரண்டாம் தலைமைத் தலைவரான செயல் இயக்குனர் விக்னேஷ் செளந்திரராஜனின் யோசனையில் இந்த ’கிளிக் அன்ட் மோர்டார்’ பிராண்ட் உருவாகியுள்ளது. உடனடியாக சமைத்து மற்றும் உடனடியாக உண்ணக்கூடிய பலவகையான உணவு வகைகளை டெல்பிரஸ் பிராண்ட் கொண்டிருக்கும்.
ஆன்லைனில் பிக்பாஸ்கெட், க்ரோபர்ஸ், ஜியோமார்ட், ஸ்விக்கி உள்ளிட்ட இணையதளங்கள் வாயிலாக இந்த உணவு பொருட்களை வாங்கலாம். ஆப்லைனில் காற்றோட்டமான இடவசதி கொண்டு விற்பனை மையங்களில் வாங்கலாம்.
“ஒவ்வொரு துறைக்கும் பெருந்தொற்று கற்றல் அனுபவமாக அமைந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் எங்களுக்குக் கிடைத்த கற்றலின் பயனாக இந்த புதுமையான அணுகுமுறை அமைகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் பொருத்தமாக திகழ மேற்கொண்டுள்ள முயற்சியாக இந்த பிராண்ட் சீரமைப்பு அமைகிறது,” என்று சுகுணா குழுமத் தலைவர் செளந்திரராஜன் கூறியுள்ளார்.
சுகுணா குழுமத்தில் ஏற்படும் மாற்றம் இந்திய கோழி பண்ணைத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்த பிராண்ட் சீரமைப்பு மூலம், இந்தியாவில் எங்கள் வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், சர்வதேச சந்தை பங்கை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறோம், என்றும் அவர் கூறியுள்ளார்.
“டெல்பிரஸ் அறிமுகத்தில் உற்சாகம் கொள்கிறோம். எங்கள் பொருட்கள் அனைத்தும் ரீடைல் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் கிடைப்பது இதன் மூலம் சாத்தியமாகும். வாடிக்கையாளர்கள் தேவையை புரிந்து கொண்டு அவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் சரியான டிஜிட்டல், இ-காமர்ஸ் உத்தியை வகுத்துள்ளோம்” என்று சுகுணா ஃபுட்ஸ் செயல் இயக்குனர் விக்னேஷ் செளந்திரராஜன் கூறியுள்ளார்.
Delfrez அறிமுகம் தவிர, புதிய குழும லோகோ உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய லோகோ, நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையிலான வலுவான தொடர்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
சுகுணா ஃபுட்ஸ் கீழ் செயல்படும் சில்லறை விற்பனை மையங்களாக டெல்பிரஸ் அமைந்துள்ளது. அனைத்து வகையான சிக்கன், மதிப்பு கூட்டப்பட்ட முட்டைகள், மட்டன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இது வழங்கும்.
தற்போது, டெல்பிரஸ்; பெங்களூரு, சென்னை, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வருகிறது. வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பதப்படுத்தும் உணவு மூலமான வருவாயை அடுத்த ஐந்தாண்டுகளில் 20 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக விக்னேஷ் செளந்திரராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவில் வேகமான வளர்ச்சியை காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர் சிம்மன்