5000 ரூபாயில் துவங்கி, ரூ.8,700 கோடி மதிப்பு நிறுவனமாக வளர்ந்த ‘சுகுணா ஃபுட்ஸ்’
கோவையைச் சேர்ந்த சுகுணா ஃபுட்ஸ் ஒப்பந்த முறையிலான கோழி வளர்ப்பில் துவங்கியது. இன்று, இந்தியாவின் 20 மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் விரிந்த நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
சீனாவின் இறைச்சி சந்தையில், கொரோனா வைரஸ் உருவானது, இறைச்சி உணவு சாப்பிடுபவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவத்துவங்கிய காலத்தில் பலரும், இந்த வைரஸ் இறைச்சி, குறிப்பாக கோழி இறைச்சி வழியே பரவும் என அஞ்சினர்.
இதனால் தேவை குறைந்தது, இறைச்சி கடை உரிமையாளர்களை மட்டும் அல்ல, கோழி பண்ணை விவசாயிகளையும் பெரிதும் பாதிதத்து. அதோடு, கோவையைச் சேர்ந்த கோழிப்பண்ணை நிறுவனமான 'சுகுணா ஃபுட்ஸ்' நிறுவனத்திற்கு இன்னும் சவாலாக அமைந்தது.
சுகுனா குழுமத்தில் தலைவரான, பி. செளந்திரராஜன், தனது தொழில்முனைவு பாதையில் இது மிகப்பெரிய சவால் என்கிறார்.
“கடந்த 25- 30 ஆண்டுகளில் இதைப்போல எதையும் நாங்கள் கண்டதில்லை. உற்பத்தி செய்தவற்றை அழித்து விடுமாறு விவசாயிகள் கூறும் அளவுக்கு நிலைமை மோசமானது,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசும் போது அவர் தெரிவித்தார்.
தொற்றுக்கு முன், கோழி இறைச்சி கிலோ ரூ.80 என விற்பனையானது. ஆனால் பொது முடக்கத்தின் போது, கிலோர் பத்து ரூபாய்க்கு விற்பதும் சவாலானது. இருப்பினும், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ( ஐ.சி.எம்.ஆர்) இது குறித்து தெளிவுபடுத்தியது.
“எந்த குறிப்பிட்ட உணவு வாயிலாகவும் கொரோனா வைரஸ் பரவுவதாக நாங்கள் அறியவில்லை. வைரசை தவிர்க்க நாம் உணவை சமைத்து சாப்படுகிறோம். கொரோனா வைரஸ் உணவுடன் தொடர்புடையது அல்ல. கோழிக்கறி, அசைவ உணவை சாப்பிடலாம்,” என கவுன்சில் தெரிவித்தது. இது மிகப்பெரிய ஆசுவாசம் அளித்தது,
“இந்த அறிக்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் மீண்டும் இறைச்சி உணவு வாங்கத் துவங்கினர்,” என்கிறார் செளந்திரராஜன்.
கடந்த ஆண்டு ரூ.8,700 கோடி விற்றுமுதல் பெற்ற நிலையில் நிறுவனத்தின் பண இருப்பு நிலைமையை சமாளிக்க உதவியது என்கிறார் அவர்.
5 ஆயிரம் ரூபாயில் துவங்கிய ‘சுகுணா ஃபுட்ஸ்’ 34 ஆண்டுகளில் பெரிய அளவிலான நிறுவனமாக வளர்ச்சி பெற்றது எப்படி?
வேளாண் வேர்
ஜி.பி.சுந்திரராஜன் மற்றும் செளந்திரராஜன் கல்லூரிக்குச் சென்று படிக்கவில்லை, பள்ளிப்படிப்பை முடித்ததும் தந்தை பங்காருசாமி, சொந்தமாக ஏதாவது செய்யுமாறு செளந்தரராஜனிடம் கூறினார்.
அவர்கள் குடும்பத்திற்கு 20 ஏக்கர் பரம்பரை நிலம் இருந்ததால், செளந்திரராஜன், அந்த பகுதியின் மற்ற விவசாயிகள் போல பருத்தி பயிரிடுவதற்கு பதிலாக காய்கறிகளை பயிரிடத்துவங்கினார். குடும்பத்தின் உதவியோடு மூன்று ஆண்டுகள் இதை மேற்கொண்டாலும் லாபம் ஈட்ட முடியவில்லை.
கடன் சுமை அதிகரித்த நிலையில், ஐதராபாத்தில் சகோதரர் நடத்தி வந்த விவசாய மோட்டார் உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். எனினும், சொந்தமாக தொழில் துவக்க வேண்டும் எனும் ஆர்வம் குறையவில்லை.
சுகுணா ஃபுட்ஸ் துவக்கம்
1986ல் சகோதரர்கள் சுகுணா ஃபுட்ஸ் பிரைவெட் லிட் நிறுவனத்தை கோவையில் சிறிய அளவில் துவக்கினர். கோழிப் பண்ணை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
மூன்று ஆண்டுகள் வர்த்தகம் செய்த நிலையில், பல விவசாயிகள் கடன் கிடைப்பதில் இருந்த சிக்கல் காரணமாக தொழிலை கைவிடுவதை கவனித்தனர். வங்கிக் கடன் கிடைக்காத நிலையில் இவர்கள் தனியாரிடம் கடன் வாங்கினர்.
மேலும் நிலையில்லா வருமானமும் ஒரு சிக்கலாக இருந்தது. அப்போது தான் சகோதரர்கள் ஒப்பந்த முறையிலான கோழி வளர்ப்பு பற்றி யோசித்தனர். இந்த முறையில் விவசாய உற்பத்தி, நிறுவன உரிமையாளர் மற்றும் விவசாயி இடையிலான ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
1990ல், சுகுணா ஃபுட்ஸ் மூன்று பண்ணைகளுடன், ஒப்பந்த முறை கோழிப்பண்ணையை துவக்கியது. இதன்படி, கோழித்தீவனம் முதல் மருந்துகள் வரை எல்லாவற்றையும் நிறுவனம் வழங்கியது. உற்பத்தியாகும் கோழிகளை விவசாயிகள் நிறுவனத்திற்கு வழங்கினர்.
“இந்த முறையில் நாங்கள் ஒரு போதும் வெற்றி பெறப்போவதில்லை என்று சொல்லி துவக்கத்தில் எல்லோரும் சிரித்தனர்,” என்கிறார் செளந்திரராஜன்.
ஆனால் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில், நிறுவனம் 1997ல் ரூ. 7 கோடி விற்றுமுதல் எட்டியது. இந்த முறைக்கு மாறிய மூன்று ஆண்டுகளில் விவசாயிகள் தங்கள் கடனை அடைக்க முடிந்தது. தற்போது இந்தியாவில் 80 சதவீத கோழி உற்பத்தி இந்த முறையில் நடைபெறுகிறது.
இந்த முறை மூலம் சுகுணா நிறுவனம், 40,000 விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான வருமானம் அளிக்கிறது. தரமான கோழி இறைச்சிக்காக அறியப்படும் சுகுணா, நாடு முழுவதும் 66 தீவண ஆலைகளை நடத்துகிறது.
வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பாதை
இதன் பிறகு சகோதரர்கள் நிறுவனத்தை மேலும் விரிவாக்க விரும்பினர். இருப்பினும் இதில் தடைகளை எதிர்கொண்டனர்.
“புரட்டாசி மாதம் மற்றும் ஒரு சில பண்டிகை நாட்களில், இறைச்சி உணவை மக்கள் உண்பதில்லை என்பதால் தேவை குறைகிறது. ஆனால் அதற்காக கடையை மூடிவிட முடியாது”.
1997ல், நிறுவனத்தை தொழில்முறையாக்கி, தொழில்நுட்பம் மூலம் வர்த்தகத்தை மறுசீரமைத்தனர்.
நிறுவனம் ஆரக்கிள் ஈஆர்பி உருவாக்கி, கோவையில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தது. டிஜிட்டல்மயமாக்கல் வர்த்தகத்தை சீராக்க உதவியது. நிறுவனம், விவசாயிகளுக்கு உதவக்கூடிய செயலிகளையும் உருவாக்கியுள்ளது. நிறுவனம் மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்துள்ளது. பால் பொருட்களுக்கான சுகுணா டைரி பிராடக்ட்ஸ், சுகுணா பின் கார்ப், மருந்துகளுக்கான Globion India Pvt. Ltd ஆகிய நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் 97 சதவீத வர்த்தகம் சுகுணா புட்ஸ் மூலம் வருகிறது. கென்யா, வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறது.
சர்வதேச கவனம்
நிறுவனத்தின் தனித்தன்மையான வர்த்தக முறை மற்றும் அதன் வெற்றி சர்வதேச நிதி கழகம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2007ல், ஐ.எப்.சி நிறுவனத்தில் முன்னுரிமை பங்குகள் அடிப்படையில் முதலீடு செய்துள்ளது. மேலும் முதலீடுகள் வருவதாக செளந்திரராஜன் கூறுகிறார்.
இந்த ஆண்டு, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, கடன் பத்திரங்கள் மூலம், 15 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது.
எதிர்காலத் திட்டம்
இந்தியா உலக அளவில் கோழி உற்பத்தி மற்றும் நுகர்வில் முன்னிலை வகிக்கிறது.
“30 ஆண்டுகளுக்கு முன் தனிநபர் கோழி இறைச்சி நுகர்வு 150 கிராமாக இருந்தது. இன்று 4.5 கிலோவாக மாறியிருக்கிறது. ஆனால் உலக அளவான 18 கிலோவை விட குறைவாக உள்ளது,” என்கிறார்.
இந்திய கோழி வளர்ப்பு துறை 2024ல் ரூ.4,340 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக வளரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வர இத்துறைக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என செளந்திரராஜன் கருதுகிறார். மேலும், சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்திற்காக அவர் மிகப்பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுக்காப்பை வர்த்தகத்திற்கான அனைவரையும் உள்ளடக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறார்.
“அந்த காலத்தில் உணவுப் பாதுகாப்பை முக்கியமாக பேசினோம். இனி உணவு பாதுகாப்பை விட ஊட்டச்சத்து பாதுகாப்பு முக்கியமாக அமையும்,” என்கிறார்.
இந்தியாவில் கோழி வளர்ப்பு 4 சதவீதம் மட்டுமே ஒருங்கிணைந்த தொழிலாக இருப்பதாகவும் கூறுகிறார்.
“வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கோழி இறைச்சி பதப்படுத்தப்பட்ட இறச்சியாகவே விற்கப்படுகிறது. இந்தியாவில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது என்பவர், நிறுவனத்திடம் பொது பங்கு வெளியிடும் திட்டம் இல்லை, குடும்ப வர்த்தகமாகவே தொடர்வோம் என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர்சிம்மன்