1 ரூபாய் கட்டணம்; ஏழை மாணவர்கள் ஐஐடி-ல் சேர பயிற்சி தரும் ஆனந்த் குமார்!
பயிற்சி வகுப்புகளுக்காக செலவிட இயலாத கிராமப்புற மாணவர்களுக்காக சிஎஸ்சி உதவியுடன் ஆன்லைன் பாடத்திட்டங்களை நடத்த உள்ளார் ‘சூப்பர் 30’ புகழ் ஆனந்த் குமார்.
ஐஐடி-யில் படிக்கவேண்டும் என்பது பலரது கனவு. ஆன்ந்த் குமார் ஐஐடி-ல் சேர்வதற்கு நுழைவுத் தேர்வான ஐஐடி-ஜேஈஈ தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சியளிக்கிறார். இதற்காக இவர் நடத்தும் பயிற்சி மையத்தின் பெயர் 'சூப்பர் 30’.
இவரது பயிற்சி மையத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதே இந்த மையத்தின் சிறப்பம்சம்.
இந்த சூப்பர் 30 புகழ் ஆனந்த் குமார் தற்போது கிராமப்புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்விற்கான பயிற்சியளிக்க சிஎஸ்சி உடன் இணைந்துள்ளார். இதற்கான கட்டணம் ஒரு ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கணிதவியலாளரான ஆனந்த் குமார் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வெழுத பயிற்சியளிப்பதற்காக ஆன்லைன் பாடத்திட்டங்களை உருவாக்க உள்ளார்.
“மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கு இது மிகவும் அவசியம். சிஎஸ்சி உதவியுடன் IIT-JEE நுழைவுத் தேர்விற்கான பாடதிட்டங்கள் உருவாக்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு ரூபாய் செலவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்,” என்று ஆனந்த் குமார் கிராமப்புற மாணவர்களுக்கு பொதுச் சேவை மையம் வாயிலாக எடுக்கப்பட்ட ஆன்லைன் வகுப்பு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.
சிஎஸ்சி இ-கவர்னென்ஸ் இந்தியா சர்வீசஸ் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3 லட்சம் பொதுச் சேவை மையங்களை நிர்வகித்து வருகிறது. இந்த மையம் கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் சேவையளிக்கிறது.
“பயிற்சி வகுப்புகளுக்காக செலவிட இயலாத கிராமப்புற மாணவர்களுக்காக சிஎஸ்சி உதவியுடன் ஆன்லைன் பாடத்திட்டங்களை உருவாக்க இருக்கிறோம். நாங்கள் உருவாக்கும் பாடதிட்டம் கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் புதுமையாக அமைந்திருக்கும்,” என்றார் ஆனந்த் குமார்.
பீஹாரைச் சேர்ந்த ஆனந்த்குமார், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவரின் கணித அறிவாற்றலால் பேரும் புகழும் பெற்றார். அவர் தனது மாநில ஏழை மாணவர்களுக்கு ஐஐடி-யில் சேர பயிற்சி வகுப்புகளை நடத்தும் ‘சூப்பர் 30’ என்ற மையத்தை தொடங்கி பல ஆண்டுகளாக பலர் ஐஐடி-யில் சேர வழிகாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.