'ஒரு குறும்பதிவு தொலைவில் தான் உதவி’ என உணர்த்தியவர்- சுஷ்மாவுக்கு குவியும் டிவிட்டராஞ்சலி...
சமூக ஊடக யுகத்தில், தலைவர்களுக்கு வாழ்த்து கூறவும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்துவது இயல்பானது தான். ஆனால், மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பொறுத்தவரை, டிவிட்டரில் அஞ்சலி செலுத்துவது என்பது இன்னும் பொருத்தமானது.
சுஷ்மா ஸ்வராஜ் தீவிர டிவிட்டர் பயனாளியாக இருந்தார் என்பது மட்டும் அல்ல இதற்குக் காரணம், டிவிட்டரை அதன் தன்மை உணர்ந்து சரியாக பயன்படுத்திய நட்சத்திரப் பயனாளியாக இருந்தார். அது மட்டும் அல்ல, ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, மக்களை தொடர்பு கொள்ள அவர் டிவிட்டரை கையாண்ட விதமும், அதிலும் குறிப்பாக உதவி கோரியவர்களுக்கும், சிக்கலில் தவித்தவர்களுக்கும் டிவிட்டரில் அவர் நேசக்கரம் நீட்டிய விதமும், சமூக ஊடக பயன்பாட்டிற்கான மாஸ்டர் கிளாஸ் எனலாம்.
அரசியல் தலைவர்களும், பதவியில் இருப்பவர்களும் டிவிட்டரை பயன்படுத்துவது புதிதல்ல தான். ஆனால், டிவிட்டரில் இயங்கிய மற்ற தலைவர்களுக்கும், சுஷ்மா போன்ற டிவிட்டராளர்களுக்கும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், அவர் டிவிட்டரை தன் புகழ் பாட அல்லது விளம்பரம் தேடிக்கொள்ள பயன்படுத்தாமல், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான வழியாக அதை கையாண்டது தான்.
லட்சக்கணக்கான ஃபாலோயர்களுடன் தீவிர டிவிட்டர் பயனாளியாக இருந்த சுஷ்மா, டிவிட்டரை என்றும் தனக்கான புள்ளிகளை ஸ்கோர் செய்ய பயன்படுத்தியதில்லை. முக்கியப் பிரச்சனைகளில் தனது நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் தெரிவிக்க டிவிட்டரை கருத்து மேடையாக பயன்படுத்தியவர், மத்திய அமைச்சர் என்ற முறையில், உதவி தேவைப்பட்ட இந்தியர்களுக்கு நேசக்கரம் நீட்ட டிவிட்டரை ஒரு கருவியாக அவர் பயன்படுத்தினார்.
சுஷ்மா, டிவிட்டரை எந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் பல செய்திகளை ஒரு கூகுள் தேடலில் கண்டுபிடித்துவிடலாம். அதில் பல செய்திகள், அவர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களுக்கு டிவிட்டர் மூலம் அவர் எப்படி உதவி கிடைக்கச் செய்துள்ளார் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
பொதுவாக அரசியல்வாதிகளையும், அமைச்சர்களையும் அத்தனை எளிதில் சாமானியர்கள் எளிதில் அணுகிவிட முடியாது எனும் கருத்து இருக்கிறது. இதற்கு விதிவிலக்கான தலைவர்கள் இருக்கலாம். ஆனால், டிவிட்டர் இருக்க கவலை எதற்கு என தைரியம் அளிக்கும் வகையில் சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் எவரும் தன்னை எளிதில் தொடர்பு கொள்ளலாம் எனும் நிலையை உருவாக்கியிருந்தார்.
டிவிட்டர் மூலம் உதவி கோருபவர்களுக்கு அவர் தேவையான உதவிகளை வழங்கிய சம்பங்களுக்கு எண்ணற்ற உதாரணங்களும் இருக்கின்றன. சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் மக்களுக்கு உதவிய சம்பவங்களின் தொகுப்பை யூத்கிஆவாஸ் இணைய இதழ் பட்டியலிட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஈராக்கில் சிக்கிக் கொண்ட 168 இந்தியர்களை மீட்க உதவியது, அதன் பிறகு பெர்லினில் பாஸ்போர்ட்டையும் பணத்தையும் இழந்து தவித்த இந்தியருக்கு உதவியது, 2016 ல் பிரஷுன் சிங் என்பவர் சகோதரர் தோஹாவில் இருந்து மீட்க உதவியது உள்ளிட்ட நிகழ்வுகளை இந்த கட்டுரை பட்டியலிடுகிறது.
சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் மனங்களை வென்ற ஐந்து தருணங்கள் என டைம்ஸ் நவ் இதழும் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. இது போன்ற நேரங்களில் உதவி பெற்றவர்கள் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ள விதமே, சுஷ்மாவின் உதவி எப்படி நேரத்திற்கு கிடைத்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் உதவியதற்கு இன்னும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.
விசா அல்லது பாஸ்போர்ட் பிரச்சனை இருந்தால், இந்தியர்கள் டிவிட்டரில் தன்னை தொடர்பு கொள்ளாம் என அவர் அறிவித்திருந்ததை மேற்கோள் காட்டி, ’நேட்ஜியோ’ இணைய இதழ், பாஸ்போர்ட் பிரச்சனையா சுஷ்மாவுக்கு டிவீட் செய்யவும் எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.
அதே போல, டிவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதில் அளிப்பதிலும் சுஷ்மா எப்போதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கிறார். டிவிட்டரில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு நெத்தியடியாக பதில் அளிக்கவும் அவர் தயங்கியதில்லை. சில மாதங்களுக்கு முன்னர் கூட, டிவிட்டரில் அவர் சவுகிதார் எனும் ஷாஷ்டேகை பயன்படுத்தியது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பிய போது, தான் இந்தியர்கள் நலனின் காவலாளி தான் என கூறியிருந்தார்.
உடனே, வேறு ஒருவர், டிவிட்டரில் சுஷ்மா சார்பாக யாரோ ஒரு அதிகாரி பதில் அளிப்பதாக கருத்து தெரிவிக்க, அதற்கும் சுஷ்மா உடனடியாக பதில் அளித்து தனது டிவிட்டர் கணக்கை பரமாரிப்பது தானே என்று தெளிவுபடுத்தினார்.
காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான குறும்பதிவே டிவிட்டரில் அவரது கடைசி குறும்பதிவாக அறியப்படுகிறது.
சுஷ்மாவின் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல்கள் குவிந்து வருகின்றன. ஒரு பயனாளி குறிப்பிட்டுள்ளது போல, உதவி என்பது ஒரு குறும்பதிவு தொலைவில் தான் உள்ளது என உணர்த்தியதே மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் தனிச்சிறப்பாக இருக்கிறது.
வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி என்பது ஒரு குறும்பதில் இருக்கிறது என சுஷ்மா ஸ்வாராஜே ஒரு முறை குறிப்பிட்டுள்ளதால், இந்த கருத்தே அவருக்கு மிகச்சிறந்த அஞ்சலியாக அமைகிறது.
போய் வாருங்கள். சுஷ்மா டிவிட்டராளர்கள் என்றும் உங்களை நினைவில் வைத்திருப்பார்கள்!
-