மாறுவேடம் தரித்து இதுவரை 72லட்ச ரூபாய் ஈட்டி 33 ஏழைக் குழந்தைகளைக் காப்பாற்றிய கூலித் தொழிலாளி!
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது ரவி காட்பாடி ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று வேடமணிந்து மக்களிடம் பணம் திரட்டி ஏழைக் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த பண்டிகை சமயத்தில் பலர் பல்வேறு வேடங்கள் அணிந்துகொண்டு மக்களிடம் யாசகம் கேட்டு நகரை வலம் வருவதைப் பார்க்கலாம்.
சிலர் தனிநபர்களாகவும் சிலர் குழுவாகவும் வேடம் தரித்து மக்களிடம் பணம் கேட்பது வழக்கம். இப்படிப் பணம் வாங்கி தங்கள் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி வருவோர் மத்தியில் ஒரு குழுவில் இணைந்து இதுபோல் வேடம் தரித்து, யாசகம் பெற்று நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவுகிறார் ரவி.
ரவி காட்பாடிக்கு 36 வயதாகிறது. கட்டுமான வேலை செய்து வருகிறார். உடுப்பியில் உள்ள காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரவி. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதன் பிறகு கட்டுமான வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். பெற்றோர் இருவரும் உயிரிழந்துவிட்டனர். சகோதரரும் சகோதரரின் மனைவியும் வசிக்கும் வீட்டிலேயே ரவியும் தங்கியிருந்தார்.
”நான் சிறு வயதில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்த வேதனையைக் கடந்து வந்திருக்கிறேன். குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மனதில் வலி ஏற்படுகிறது. என்னால் முடிந்தவரை தொடர்ந்து உதவி செய்துகொண்டே இருப்பேன்,” என்கிறார் ரவி.
மாறுவேடத்தில் உதவும் காப்பாளன்
2013-ம் ஆண்டு ரவி டிவியில் ஒரு செய்தியைப் பார்த்துள்ளார். கைகள் செயல்படாமல் இருந்த ஒரு குழந்தையைப் பற்றிய செய்தி அது. அதைப் பார்த்ததும் ரவி கண் கலங்கியுள்ளார். அந்தக் குழந்தையின் பெயர் அன்விதா. அவர் பிறந்தபோது வலது கை செயலிழந்து போயிருக்கிறது. இதற்கு மருத்துவரின் கவனக்குறைவே காரணம் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆனால், குழந்தையின் பெற்றோரின் கையில் கொடுக்க பணம் இல்லை. இதை நினைத்து ரவி பெரிதும் வருத்தப்பட்டுள்ளார். அந்த ஆண்டு வேஷம் போட்டு திரட்டப்படும் தொகையை அந்தக் குழந்தையின் சிகிச்சைக்கு கொடுக்க முடிவு செய்தார்.
நண்பர்களுடன் கலந்து பேசினார். குழந்தைகளைக் கவரும் வகையில் வேடம் போட நினைத்தவர் எந்தக் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்யலாம் என யோசித்தார். இறுதியாக Labyrinth திரைப்படத்தில் வரும் Faun கதாப்பத்திரத்தைத் தேர்வு செய்தார்.
ரவியின் முயற்சியில் அவரது நண்பர்கள் 15 பேர் தன்னார்வலர்களாக இணைந்து கொண்டார்கள். குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவுவதாக அவர்களும் கைகோர்த்துள்ளனர்.
காஸ்ட்யூம் தயாராக ஒரு மாதம் ஆனது. அந்த வேடத்தைப் போட்டுக்கொள்ள 12 மணி நேரம் எடுத்துக்கொண்டது. ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று கொண்டாட்டத்தின்போது அதே வேடத்தை கிட்டத்தட்ட 36 மணி நேரம் அணிந்திருந்தார் ரவி. நண்பர்களின் உதவியுடன் உடுப்பி முழுவதும் சுற்றி வந்து பணம் திரட்டினார்.
5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பலர் ரவிக்கு பணம் கொடுத்துள்ளனர். மொத்தமாக ரவியால் 1 லட்ச ரூபாய் வரை திரட்ட முடிந்தது. குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அந்தத் தொகை போதுமானதாக இருந்துள்ளது.
”இதனால் எனக்கு நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து இதுபோல் உதவவேண்டும் என்கிற ஊக்கமும் பிறந்தது. வேடமணிந்து பணத்தைத் திரட்டி எத்தனைக் குழந்தைகளுக்கு முடிகிறதோ அத்தனை குழந்தைகளுக்கு உதவலாம் என தீர்மானித்தேன்,” என்கிறார் ரவி.
உதவுவதற்காக வேடம் தரித்தார்
2013-ம் ஆண்டு முதல் ரவி விதவிதமாக வேடமணிந்து மக்களை மகிழ்வித்து பணம் சேகரித்து வருகிறார். இந்தத் தொகை ஏழை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ செலவுகளுக்கும் குழந்தைகளின் படிப்பிற்கும் சேகரிக்கும் தொகையைக் கொடுத்து உதவி வருகிறார்.
ரவி மற்றவர்களுக்கு நல்லது செய்கிறார் என்றாலும் இவரது முயற்சியில் சவால்கள் இல்லாமல் இல்லை. இத்தனை ஆண்டுகளாக சருமத்தில் பெயிண்ட் பூசி வேடமணிவதால் தீவிர சரும பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதிக நேரம் செலவிட்டு மேக் அப் செய்துகொள்ளவேண்டும். சில சமயங்களில் 20 மணி நேரம் வரைகூட ஆகும். எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ முடியாமல் போகும். ஆனால், நாம் ஆச்சரியப்படும் இவை எதுவுமே ரவியின் முயற்சிக்குத் தடையாக இருப்பதில்லை.
கட்டுமான வேலை செய்வதன் மூலம் ரவி ஒரு நாளைக்கு 450-500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். ஆனால், தினக்கூலியாக வேலை செய்யும் இவருக்கு பல நாட்கள் வேலையும் கூலியும் கிடைக்காமலும் போய்விடும்.
இப்படிப்பட்ட சூழலிலும் கடந்த இத்தனை ஆண்டுகளில் ஒரு லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் பணம் திரட்டி உதவி செய்துள்ளார். 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 72 லட்ச ரூபாய் வரை திரட்டி 33 குழந்தைகளுக்கு உதவியிருப்பதாகத் தெரிவிக்கிறார். புற்றுநோய், இதயநோய், கண் மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவியிருக்கிறார்.
2017-ம் ஆண்டு வரை உடுப்பி பகுதியில் வீடு வீடாகச் சென்று பணம் திரட்டி வந்தார். தேவை அதிகமிருப்பதைத் தெரிந்துகொண்டு பிற மாநிலங்களில் இருப்பவர்களிடமும் வெளிநாட்டவர்களிடமும் பணம் திரட்டத் தொடங்கினார். நண்பர்கள் உதவியுடன் சமூக வலைதளங்கள் மூலம் பலரிடம் பணம் திரட்டி மேலும் பலருக்கு உதவவேண்டும் என்பதே ரவியின் விருப்பம்.
ரவி கடந்த ஆண்டு ‘கவுன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 12.5 லட்ச ரூபாய் வென்றது குறிப்பிடத்தக்கது.
நல்ல வேலைக்கு சென்று நிறைய பணம் சேர்த்து ஆடம்பர வாழ்க்கையை மென்மேலும் பெருக்கிக்கொண்டே இருப்போர் மத்தியில் ஏழைக் குழந்தைகளுக்காகவே பாடுபடும் ரவி உண்மையில் ஒரு சாண்டா கிளாஸ் என்றால் அது மிகையல்ல.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா