துபாயில் மின்சார வாகன உற்பத்தி; $15 மில்லியன் முதலீடு திரட்டிய E Daddy நிறுவனம்!
துபாயில் எலெக்ட்ரிக் வாகனங்களை எண்ட் டு எண்ட் உற்பத்தி செய்யவிருக்கும் முதல் நிறுவனம் E Daddy. அங்குள்ள அதிவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, வெப்ப விகிதத்தை சுயமாகக் கண்டறியும் அமைப்புகள், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் இரட்டை அடுக்கு குளிரூட்டும் அமைப்பு ஆகியவற்றை இ-டாடி ஒருங்கிணைக்கவுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீடித்த நகர்ப்புற இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற சென்னையில் தொடங்கப்பட்ட E Daddy நிறுவனம் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மின்சார வாகனத் துறையை மாற்றத் தயாராக சுமார் 15 மில்லியன் டாலர்கள் முதலீடு திரட்டியது. இந்த முதலீடு திரட்டலில் சென்னையைச் சேர்ந்த உதவ் ஃபர்ம் என்ற முதலிட்டு நிறுவனத்தில் தலைமை வகிக்கும் ஆனந்த் மூர்த்தி முக்கியப்பங்கு வகித்துள்ளார்.
நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் துபாய் தொழில் நகரம் மற்றும் தேசிய தொழில் பூங்காவில் அமைந்துள்ளன. E Daddy தனது முதல் முழு மின்சார மோட்டார் சைக்கிளை 2025ம் ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றிய இந்த மோட்டார் சைக்கிள், ஆண்டுக்கு 0.6 மில்லியன் டன் கார்பன் உமிழ்வு வான்வெளியில் வெளியேறுதைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"துபாயில் வாகனங்களை எண்ட் டு எண்ட் உற்பத்தி செய்யும் முதல் நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆட்டோமொபைல்களின் வளர்ச்சியில் வெற்றிபெற உறுதிபூண்டுள்ளோம். எங்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், வெப்பநிலை கட்டுப்பாடு, கரியமில வாயு உமிழ்வுக் குறைப்பு மற்றும் கடைசி மைல் டெலிவரி டிரைவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று E Daddy இன் நிறுவனர் மற்றும் CEO மன்சூர் அலி கான் அப்துல் புஹாரி கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, வாகனங்களில் வெப்ப விகிதத்தை சுயமாகக் கண்டறியும் அமைப்புகள், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் இரட்டை அடுக்கு குளிரூட்டும் அமைப்பு ஆகியவற்றை இ-டாடி ஒருங்கிணைக்கவுள்ளது. 50 டிகிரி செல்சியஸ் என்று வெயில் பொளந்து கட்டினாலும் உகந்த பேட்டரி செயல்திறனை உறுதி செய்வதன் மூலம் இந்த வாகன உற்பத்தித் துறையில் மற்ற நிறுவனங்களை விட தனித்து நிற்கிறது.
E Daddy நிறுவனம் UAE-ஐ தளமாகக் கொண்ட வசதிகளிலிருந்து GCC நாடுகளுக்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் சேவை செய்ய அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.