கோடிகளில் விற்பனையான ‘பக்ரீத்’ ஆடுகள்’: சல்மான் ஆட்டின் விலை மட்டும் ரூ.5 லட்சம்!
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் லட்சக்கணக்கில் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரம் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாள் எனக் குறிப்பிடப்படும் இப்பண்டிகையின் முக்கிய நோக்கமே வறுமையில் வாடுபவர்களுக்கு இஸ்லாமியர்கள் இறைச்சியை தானமாக வழங்க வேண்டும் என்பது தான். எனவே, குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள், மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை இஸ்லாமியர்கள் பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வழங்குவது வழக்கம்.
நம் நாட்டைப் பொறுத்தவரை ஆடுகள் தான் அதிகளவில் குர்பானி கொடுக்கப் படுகின்றன. அவ்வாறு குர்பானி கொடுக்கப்படும் ஆட்டின் இறைச்சியை நண்பர்கள், உறவினர்கள், ஏழை எளியவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் பகிர்ந்து அளித்து வாழ்த்து பரிமாறிக் கொள்வர்.
ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்ப ஒன்று முதல் பல எண்ணிக்கையில் ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். எனவே ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆடு விற்பனை கோடிக்கணக்கில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஆடுகள் விற்பனை அமோகமாக உள்ளது.
எட்டயபுரம் சந்தை:
தென்மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் சராசரியாக 2,000 முதல் 3,000 ஆடுகள் வரை விற்பனையாவது வழக்கம். விரும்பும் இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் இங்கு ஆடுகள் கிடைக்கும். அதோடு, விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை எனச் சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொது மக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.
மேலப்பாளையம் சந்தை:
நெல்லை மேலப்பாளையம் சந்தையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இம்முறை ஆட்டுச்சந்தைக்கு 4,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகளின் வரத்தே அதிகம் காணப்பட்டது. அதுதவிர, குறும்பை, நாட்டு வகை வெள்ளாடுகளும், 6 ரகமான செம்மறி ஆடுகளும் விற்பனைக்காக வந்திருந்தன.
மேலப்பாளையம் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலும், வியாபாரிகளின் வருகையாலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் இந்த சந்தையில் விற்பனையாகின. இந்த சந்தையில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ஆடு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
குறைந்தபட்சமாக ஒரு ஆடு ரூ.7 ஆயிரத்தில் தொடங்கி, ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. குறைந்த எடை கொண்ட ஆடுகளைவிட, 10 கிலோவிற்கு அதிகமான எடை கொண்ட ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையாகின.
இது குறித்து மேலப்பாளையம் சந்தை வியாபாரிகள் கூறுகையில்,
‘இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் வறட்சி நிலவியதால் ஆடுகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனால் அது வியாபாரத்தை பாதிக்கவில்லை. வியாபாரிகள் கூட்டாக சேர்ந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வெள்ளாடு கறியை விட செம்மறியாட்டு கறியே பிரியாணிக்கு உகந்தது என்பதால், செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன,’’ என்றனர்.
தியாகதுருகம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கால்நடை வியாபாரிகள் கலந்து கொள்வார்கள். வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளும் இங்கு அதிகமாக விற்பனைக்கு வரும்.
இந்த வாரச்சந்தையில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும். அதன்படி, இம்முறை இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வழக்கத்தை விட நேற்று அதிகளவில் வாரச்சந்தைக்கு தியாகதுருகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சரக்கு வாகனங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஜமுனாபுரி என்ற உயர்ரக ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஜமுனாபுரி ஆடு ஒன்று அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனையானது. இம்முறை பக்ரீத் பண்டிகையையொட்டி, இந்த வாரச்சந்தையில் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
சங்கரன்கோவில்:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி அதிகமான ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாம்புகோவில் சந்தை பகுதியில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இங்கு சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் கடந்த செவ்வாயன்று பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை ஜோராக நடைபெற்றது. நாட்டுக் கோழிகளும் அதிகளவில் விற்பனை ஆனது.
மொத்தம் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
குந்தாரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது குந்தாரப்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெறும். இந்த சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள், கால் நடைகள் வளர்ப்பவர்கள் அதிகளவில் வருவார்கள்.
பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை கூடுதலாக இருந்தது. ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து அதிக எடைகள் கொண்ட ஆடுகள் விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர். கடந்த வாரத்தோடு ஒப்பிடும் போது விலையும் சற்று உயர்ந்திருந்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெங்களூருவில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் குறைவாகவே வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வார சந்தையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.3 கோடிக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது.
சமயபுரம்:
சமயபுரம் ஆட்டுச் சந்தையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆயின. சுமார் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி உள்ளன.
இப்படியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சந்தைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகை காரணமாக இவ்வளவு அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனையாகி இருப்பதாக கால்நடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘சல்மான் கான்’ ஆடு:
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைப்பெற்ற சந்தையில் ஆடு ஒன்று 5 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. அந்த ஆட்டின் பெயர் சல்மான் கான். பிரபல பாலிவுட் நடிகரின் பெயரை வைத்ததாலேயே அந்த ஆடு அவ்வளவு அதிகமான விலைக்கு விற்பனையாகியுள்ளது. இது வியாபாரிகளையும், பொதுமக்களையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.