'ஸ்விகி' -யின் முதல் திருநங்கை நிர்வாகி சம்யுக்தா விஜயன்!
‘திருநர்களுக்கு வேலை வழங்கினால் மட்டும் போதுமா..?' -சமூகப் புறக்கணிப்புகளை புறந்தள்ளிவிட்டு, தன் வெற்றிப் பயணத்தில் முதன்மை பொறுப்புவகிக்கும் திருநங்கை சம்யுக்தா விஜயனின் அனுபவப் பகிர்வுகள்.
உறவுகளின் புறக்கணிப்புகள், ஏளனப் பேச்சுகள், தரமான கல்வி கிடைத்திடாத நிலை, பணிபுரியும் இடத்தில் சிறுமைப்படுத்தப்படுதல் முதலான பல்வேறு காரணங்களால், இந்தியாவில் திருநர் சமூகத்தைச் சேர்ந்த திறமையாளர்கள் எந்த ஒரு நிறுவனத்திலும் முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய உயர் பதவிகளை வகிப்பது அரிதினும் அரிது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த சம்யுக்தா விஜயன், கடந்த ஏப்ரலில் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டபோது, 'ஸ்விகி' நிறுவனத்தின் முதல் திருநங்கை என்ற சிறப்பைப் பெற்றார். இவர் ஒரு தொழில்முனைவரும்கூட. பெங்களூருவில் இயங்கும் ஆடை சார்ந்த 'டூட்ஸ்டூடியோ' (TouteStudio) எனும் தனது ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் இதர திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறார்.
வெற்றிப் பாதையின் தொடக்கம்
சம்யுக்தாவின் பெற்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். அவரது அடையாளத்தை அப்படியே ஏற்று, அவரது எண்ணங்களுக்கு உறுதுணையாக உத்வேகம் தந்தார்கள். பெண்கள் விரும்பும் ஆடைகளை அணிவது முதல் பரதநாட்டியம் கற்றுக்கொள்வது வரையில், சம்யுக்தாவின் விருப்பங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தனர். சம்யுக்தா தனது பள்ளியில் சில ஏளனங்களுக்கு ஆளானலும், அவற்றைக் கண்டுகொள்ளாமல், தன் படிப்பின்மீதும், இலக்கின்மீதும் மட்டுமே முழு கவனம் செலுத்தினார்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடனே அமேசான் நிறுவனத்தில் சம்யுக்தாவுக்கு வேலை கிடைத்தது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்யுக்தாவுக்கு, அவர் உடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் வரவேற்றுத் தோள்கொடுத்து நெகிழச் செய்தனர்.
அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் உறுதுணை கிடைத்தாலும், தமது தாயகமான இந்தியாவில் நிலைமையே வேறாக இருக்கும் என்பதை சம்யுக்தா அறிந்து வைத்திருந்தார். எனினும், தன்னம்பிக்கையுடன் தன் வேலையை விட்டுவிட்ட அவர், இந்தியாவுக்குத் திரும்பினார். பெங்களூருவில் சொந்தமாக ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினார்.
வாடகைக்கு விடப்படும் விழாக்கால உடைகளைத் தயாரிக்கும் அந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், நகரிலுள்ள திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். இதன்மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தையும், சமூகப் பாதுகாப்பையும், சுதந்திர மனப்பான்மையையும் பெறுவதற்கு வழிவகை செய்தார். எனினும், தனது நேரத்தை மென்மேலும் பயனுள்ளதாக்க தீவிரமாக உழைக்க முடிவு செய்தார்.
"நான் வார நாட்களில் பெரிதாக எதுவும் செய்யாத நிலையில், மீண்டும் தீவிரப் பணியில் ஈடுபடுவதில் ஆர்வத்துடன் இருந்தேன். அமேசானில் பணிபுரிந்தபோது வெளிப்படுத்திய திறமைகளை, அதேபோன்ற புதிய நிறுவனத்துடன் இங்கு சீரிய முன்முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன்.”
'ஸ்விகி'யில் வாய்ப்பு கிடைத்தவுடன், மிகக் குறைந்த கால நேரத்துக்குள் மகத்தான வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மிதந்தேன். நேர்காணல் நடைமுறைகள், ஆஃபர் கடிதம், பணியில் சேர்வது என அனைத்தும் மிகக் குறுகிய காலத்துக்குள், அதுவும் வெறும் இரண்டு வாரங்களில் நடந்து முடிந்தது" என்று வியப்பு மேலிட பகிர்கிறார் சம்யுக்தா.
'ஸ்விகி'யில் எப்படி இருக்கிறது?
கடந்த ஏப்ரல் மாதம் 'ஸ்விகி'யில் முதன்மை திட்ட மேலாளராக இணைந்த சம்யுக்தா, போக்குவரத்து மற்றும் டெலிவரி செயல்பாடுகளை மேம்படுத்தும் திட்டமிடல் பணிகளைத் திறம்பட கையாளத் தொடங்கினார்.
'ஸ்விகி'யில் குறைந்த செலவினங்களைக் கொண்டு, ஆர்டர்களுக்கான மிகச் சிறந்த டெலிவரி சேவைகளை வழங்கும் வகையிலான 'டெலவரி இன்னொவேஷன் திட்டங்கள்' அனைத்துக்கும் திட்டங்களைத் தீட்டுதல், நிர்வகித்தல் போன்ற மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதுதான் சம்யுக்தா வகிக்கும் முக்கியப் பொறுப்பு.
'ஸ்விகி'யில் பணிபுரியும்போது, தன்னுடன் பணிபுரிபவர்களால் எவ்வித முன்முடிவுகளையோ, கணிப்புகளுகளையோ சந்திக்க நேர்ந்திடவில்லை என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் சம்யுக்தா.
"நான் 'ஸ்விகி'யில் சேர்ந்த பின்னர் தொழில்நுட்பக் குழு பெண்களுடன் செயலாற்றத் தொடங்கினேன். பன்முகத்தன்மையுடன் அனைவரையும் உள்ளடக்கிய குழு அது. நாங்கள் சமீபத்தில் ப்ரைட் நெட்வொர்க் எனும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். அதன்மூலம் நிறுவனத்துக்குள் வாய்ப்புகளை வழங்கி எல்.ஜி.பி.டி சமூகத்துக்கு உகந்ததும் பன்முகத்தன்மை நிறைந்ததுமான செயல்பாடுகளை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறோம்."
தங்களது புதிய கட்டடத்தின் ஒவ்வொரு மாடியிலும் பாலின-சமத்துவ வாஷ்ரூம்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் சம்யுக்தா, "இது எங்கள் பணிச்சூழலின் தரத்தை மேம்படுத்தும் அற்புதமான முயற்சி," என்று சிலாக்கிறார்.
திருநர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல்
இங்கே ஒன்றை மட்டும் கவனிக்க வேண்டும். சம்யுக்தாவுக்கு தனது பெற்றோரின் முழுமையான உறுதுணை கிடைத்தது. இதுதான் மிக மிக அடிப்படையானது. ஆனால், இந்தியாவில் பெரும்பாலும் திருநர் சமூகத்தினருக்கு இத்தகைய உறுதுணை கிடைப்பதில்லை என்பதே மறுக்க முடியாது யதார்த்த உண்மை.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கு குறித்து சம்யுக்தா கூறியது:
"பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகர்ப்புறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் திருநர் குழந்தைகளை மற்ற அனைவரையும்போல வெற்றியாளராக உருவாக்க முடியும். எல்லோருக்கும் கிடைப்பதைப் போலவே அதே அளவிலான உறுதுணையும், கல்வியும், இதர வசதி வாய்ப்புகளும் கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம்."
திருநர்களுக்கு பணிச்சூழல் எப்படி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உகந்ததாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விவரித்தது:
"ஒவ்வொரு நிறுவனத்திலும் உயர் பதவிகள் முதல் அடிப்படை பணியாளர்கள் வரையிலான எல்லா மட்டத்திலும் திருநர்களை ஏற்க வேண்டியதுதான் முதல் படிநிலை. திருநர்களை எப்படி அணுகுவது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் முன்னுதாரணமாக நடந்துகொள்ளத் தொடங்கினால், மற்ற அனைவருமே அவர்களை எளிதாகப் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். இதற்காக, சமபாலின ஈர்ப்பார்கள் மீதும், திருநர்கள் மீதுமான அர்த்தமற்ற வெறுப்புணர்வை ஒரு நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும் அகற்றுவதற்கான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்த வேண்டும்."
சட்ட நடைமுறைகள் குறித்து சம்யுக்தா கூறும்போது, "பாலின அடிப்படையிலோ அல்லது திருநர்களுக்காகவோ பணியிடங்களில் சிறுமைப்படுத்துதலைத் தடுக்கும் அரசின் கொள்கைகளோ அல்லது சட்டங்களோ தற்போது இல்லை. அதேவேளையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கக் கூடிய BOSH சட்டம் என்பது ஐ.சி.சி எனப்படும் தனிப் புகார் கமிட்டியைக் கொண்டிருக்கிறது. அதில், எல்.ஜி.பி.டி சமூகத்தையும் உள்ளடக்க வேண்டும்," என்று வலியுறுத்துகிறார்.
முன்னேற்றப் பாதைக்கு...
திருநர் சமூகத்தினரை மெயின்ஸ்ட்ரீம் பணிகளில் அமர்த்த வேண்டும் என்ற புரிதலையும் தெளிவையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறத் தொடங்கியிருக்கிறது. ஆனால், அவர்களைப் பணியில் சேர்க்கும்போது, தங்கள் நிறுவனங்களின் ஏற்ற மாதிரியும், தங்களுக்குத் தேவையான திறமைகளின் அடிப்படையிலும் மட்டுமே செயல்படக் கூடாது. மாறாக, தங்கள் நிறுவனங்களில் இணையும் திருநர்களை வேலையைத் திறம்பட செய்வதற்குத் தயார்ப்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும்.
குறிப்பாக, திருநர் பணியாளர்களுக்கு வீடு - இருப்பிடம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை அளித்து, அவர்களுக்குக் கூடுதலாக உறுதுணைபுரிய வேண்டும்," என்கிறார்.
"நமது திறன்களையும் ஆற்றலையும் மென்மேலும் வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில், நிச்சயம் பெரும்பான்மை சமூகம் நம்மை மதிக்கத் தொடங்கும் என்பதை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இதன் தொடர்ச்சியாக, கார்ப்பரேட் துறையில் தானாகவே நமக்கான கதவுகள் திறக்கும். சிறப்பான செயல்பாடுகள்தான் சிறுமைப்படுத்தலைத் தோற்கடித்து, வெற்றிக்குப் பாதை வகுக்கும்."
சம்யுக்தா பகிரும் இந்த அனுபவங்கள், திருநர் சமூகத்துக்கானது மட்டுமல்ல... அந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய அனைவருக்குமானதே!
ஆங்கிலத்தில் சாஷா.ஆர் | தமிழில்: ப்ரியன்