Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அம்மாவின் 40 வருட டெய்லரிங் அனுபவத்தை நவீனமயமாக்கி ‘Stitchcart' ஆப் தொடங்கிய மகன்!

பள்ளி விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொண்ட தையல்கலையை, திருமணத்திற்குப் பிறகு தனது தொழிலாக்கி, இன்று அதிலும் புதுமையான ஒரு ஸ்டார்ட் அப்பை ஆரம்பித்து 25 பேருக்கு வேலை அளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 67 வயது உமா.

அம்மாவின் 40 வருட டெய்லரிங் அனுபவத்தை நவீனமயமாக்கி ‘Stitchcart' ஆப் தொடங்கிய மகன்!

Monday September 11, 2023 , 5 min Read

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அதனால்தான் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் சரியான டெய்லர் கிடைப்பதையே தங்களுக்குக் கிடைத்த பெரும் வரமாக கருதுவார்கள். மக்களின் வாழ்க்கை முறை எவ்வளவு மாறினாலும், இன்னமும் நல்ல திறமையான டெய்லர்கள் நஷ்டமில்லாமல் தங்களது வேலையைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், காலத்தின் கட்டாயத்தால் எல்லோரும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த இயந்திர வாழ்க்கை முறையில், யாருக்கும் நிதானமாக டெய்லரிங் ஷாப்பைத் தேடிச் சென்று, துணி தைக்கக் கொடுக்க நேரமில்லை.

சாப்பாடு, பலசரக்கு, டாக்ஸி மாதிரி டெய்லரிங்கும் தங்களது வீடு தேடி வந்தால் நன்றாக இருக்குமே என்ற பலரது ஆசையை நிறைவேற்றும் விதமாக Stitchcart என்ற ஆப்பை தொடங்கியுள்ளார் தையல்கலையில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த 67 வயதாகும் உமா.

uma

பொழுதுபோக்கிற்காக கற்ற கலை

சென்னை தாம்பரம் மற்றும் குரோம்பேட்டையில் உள்ளது இவர்களது உமா தையலகம். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, வாடிக்கையாளர் விரும்பியபடி இவர்களது கடையில் துணி தைத்துக் கொடுப்பதோடு, ஆரி வேலை மற்றும் தையல் வகுப்புகளையும் எடுத்து வருகின்றனர்.

“நான் பிளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் சேர இருந்த விடுமுறையில் பொழுதுபோக்கிற்காகத்தான் டெய்லரிங் கற்றுக் கொண்டேன். அப்போது இதுவே எதிர்காலத்தில் எனது தொழில் ஆகும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கல்லூரி முடிந்து, திருமணம் ஆன போதுகூட, பிறந்த வீட்டு சீதனமாக எனக்கு பீரோவுக்கு பதில் ஒரு தையல் மிஷின் வாங்கிக் கொடுங்கள் என என் அப்பாவிடம் கேட்டேன். அந்த தையல் மிஷினில் ஆரம்பத்தில் வீட்டிற்குத் தேவையான பழைய துணிகளைத் தைப்பது, என் ஜாக்கெட்டுகளைத் தைப்பது என்று மட்டும் செய்து வந்தேன்,” என்றார் உமா.

நான் தைத்துப் போட்ட பிளவுஸ்களைப் பார்த்து, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்கும் அதே மாதிரி தைத்துத் தரும்படிக் கேட்டனர். கணவர் வேலைக்குச் சென்று விட, கிடைத்த ஓய்வு நேரத்தில் எதையாவது உபயோகமாக, வருமானம் வரும்படி செய்யலாமே என நான் யோசித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே, எனக்கு கை வந்த கலையாக இருந்த டெய்லரிங்கையே என் தொழிலாக மாற்றுவது என முடிவு செய்தேன்.

”எனது முயற்சிக்கு எனது கணவர் பெரும் உறுதுணையாக இருந்தார். அவரது ஒத்துழைப்புடன் அரசு தையல்கலைத் தேர்வை எழுதினேன். சிறந்த முறையில் தைத்துக் கொடுத்ததால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது,” என உமா டெய்லரிங் ஷாப் உருவான கதை பற்றிக் கூறுகிறார் உமா.

வாடிக்கையாளர்களின் வரவேற்பு

வீட்டில் ஒரே ஒரு மிஷினை வைத்துக் கொண்டு சிறிய அளவில், மற்றவர்களுக்குத் தைத்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார் உமா. அவர் தைத்துக் கொடுத்த ஜாக்கெட்டுகள் கஸ்டமர்களுக்குப் பிடித்துப் போக, வாய் வழி விளம்பரம் மூலமாகவே அப்பகுதியில் பிரபலமாகியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் அதிகமாகவே, இனி வீட்டில் வைத்து தைத்துக் கொடுப்பதைவிட, சிறிய கடை ஒன்றை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்துள்ளார். அப்படி உருவானதுதான் ’உமா தையலகம்’ மற்றும் தையல் பயிற்சிப் பள்ளி. தொழிலை விரிவாகக் வேண்டும் என முடிவு செய்ததும் 1988-களிலேயே தனது கடையை முறைப்படி ரிஜிஸ்டர் செய்துள்ளார்.

uma

“டெய்லரிங் ஷாப் வைப்பதற்கு என தனியாக இடம் பிடித்து, அதற்கு வாடகை கொடுக்கும் அளவிற்கு அப்போது கையில் பணமில்லை. எனவே, எங்கள் வீட்டின் மாடியிலேயே சிறிய கடை ஒன்றை ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகினர். கூடவே, நான் டெய்லரிங் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்ததால், அந்த இடம் போதுமானதாக இல்லை. எனவே, வீட்டின் கீழ்தளத்தையே எனது கடை மற்றும் டெய்லரிங் அகாடமியாக மாற்றினேன்.”

”இந்த 40 வருடத்தில் என்னிடம் சுமார் 1200 பேர் டெய்லரிங் கற்றுள்ளனர். அவர்கள் தனியாக கடை வைத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். கடை வைக்க முடியாத திறமையான மாணவிகளுக்கு எங்களது கடையில் நாங்களே வேலை கொடுக்கிறோம்,” என்கிறார் உமா.

STITCHCART ஆப் தொடங்கியது ஏன்?

பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொண்ட கலையை வெற்றிகரமான ஒரு தொழிலாக்கி, இன்று 25 பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளார். மாதம் சுமார் நான்கு முதல் ஐந்து லட்சம் வரை டர்ன் ஓவர் வரும் தனது கடையை, காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் புகுத்தி, அதனை தனது வாரிசுகளின் வசம் ஒப்படைத்துள்ளார் உமா.

தற்போது நேரடி டெய்லரிங் கடைகளாக மட்டுமல்லாமல், ’ஸ்டிச் கார்ட்’ (STITCHCART) என்ற ஆப் ஒன்றை ஆரம்பித்துள்ளார் இவரது மகன் சுந்தரராஜன்.

Uma with her son

“சிறுவயதில் இருந்தே அம்மாவின் தையல் தொழிலைப் பார்த்து வளர்ந்தவன் நான். 2012ம் ஆண்டு கல்லூரி காலத்தில் கூட, ஆன்லைனில் டெய்லரிங்கை எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றித் தான் புராஜெக்ட்டே செய்தேன். அப்போது எனது புராஜெக்ட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

”சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்ததால், அம்மாவின் தொழிலில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது அந்த வேலைகளை எல்லாம் உதறிவிட்டு, முழு நேரத் தொழிலாக அம்மாவின் டெய்லரிங் வேலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வேலையில் நானும் எனது மனைவியும் ஈடுபட்டுள்ளோம். அப்படி உருவானது தான் இந்த ஸ்டிச் கார்ட் ஆப். இது மட்டுமின்றி www.stitchcart.co.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆர்டர்களை எடுத்து வருகிறோம்,” என்றார் சுந்தர்.

எங்களது ஆப் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளும் போது, நாங்கள் நேரடியாகவே வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று தைக்க வேண்டிய துணிகளை வாங்கிக் கொள்கிறோம். பிறகு தைத்த துணிகளையும் அதே மாதிரி எங்களது ஊழியர்கள் மூலம் அல்லது டன்சோ மூலம் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கிறோம்.

இப்போது அடுத்த கட்டமாக தைத்த துணிகளை டெலிவரி செய்வதற்கு என தனியாக ஒரு வேன் வாங்கியுள்ளோம். அதில் எப்போதும் ஒரு டெய்லர் இருப்பார். வாடிக்கையாளர் ஏதேனும் துணியில் ஆல்டரேசன் செய்யச் சொன்னால், உடனடியாக அங்கேயே வைத்து அவர்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் செய்து கொடுக்கவே இந்த ஏற்பாடு, என்கிறார் உமாவின் மகன் சுந்தர்.

விரிவாக்கம் செய்ய ஆசை

தற்போதைக்கு இவர்களது ஆப் மூலம் தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏழு கிலோ மீட்டர் வரை வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றனர். எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல், நேரடியாக டெய்லரிங் கடையில் கொடுக்கும் அதே கட்டணத்திற்கு இவர்கள் வீட்டு வாசலிலேயே டெய்லரிங் சேவை வழங்குவதால், வாடிக்கையாளர்களிடம் இவர்களது ஆப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகக் கூறுகின்றனர்.

uma
“விரைவில் எங்களது ஆப்-ஐ சென்னை முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. அதன்பிறகு, தமிழகம், இந்தியா என விரிவு படுத்த வேண்டும். அதற்காகத் தீவிரமாக உழைத்து வருகிறோம். தற்போதைக்கு எங்களது ஆப்-ல் தையல் சேவை மட்டும் செய்து வருகிறோம். விரைவில் கார்மெண்ட்ஸ், மற்ற டெய்லர்கள், பட்டன், ஊசி, தையல் மிஷின் விற்பவர்கள் என பல தொழில் நிறுவனங்களையும் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்பும் ஏற்படுத்தித் தர முடியும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களையும் கொண்டு சேர்க்க முடியும். அதுவே எங்களது இலக்கு,” என்கிறார்.

ஐடி துறையில் உள்ள முன் அனுபவம் மூலமாக எங்களது ஆப் சம்பந்தப்பட்ட வேலைகளை நானே நேரடியாகக் கவனித்துக் கொள்கிறேன். எங்களை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவ வேண்டும். நாங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் அம்மாவின் இந்த தையல் தொழில்தான் எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்தது. எனவே, இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல என்னென்ன தேவையோ அதை செய்து வருகிறோம், என்கிறார் சுந்தர்.

மூன்று தலைமுறை வாடிக்கையாளர்கள்

உமாவின் கணவர் காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் மகள் மற்றும் மகன் என இருவரும் ஐடி துறையில் பணிக்குச் சென்று விட்டதால், தான் 40 வருடமாக வளர்த்த தொழில் தன்னோடு முடிந்து விடுமோ என்ற பயத்தில் இருந்துள்ளார் உமா.

ஆனால், இப்போது தான் ஆரம்பித்த தொழிலை தன் மகன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் உமா.

uma
“அந்தக் காலத்தில் ஆரம்பித்து இப்போது வரை மூன்று தலைமுறைகளாக என்னிடம் துணி தைப்பவர்கள் ஏராளம். அம்மா, மகள், பேத்தி என ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறை வாடிக்கையாளர்கள் எனக்கு உள்ளனர். வெளிநாடுகளில் செட்டில் ஆன என் வாடிக்கையாளர்கள்கூட, இங்குள்ள தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் என்னிடம் ஜாக்கெட் தைத்து வாங்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே என்னோடு இந்தத் தொழில் முடிந்து விடுமோ என்ற எனது கவலையை இப்போது என் மகன் தீர்த்து விட்டார். தொழில்நுட்ப உதவியோடு இந்தத் தொழிலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு அவர்கள் செய்யும் முயற்சிகள் எனக்கு மனநிறைவைத் தருகிறது,” என மகிழ்ச்சியோடு கூறுகிறார் உமா.

67 வயதான போதும், முதுமையையும், அது தந்த நோய்களையும் புறந்தள்ளி வைத்து விட்டு, இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் உமா, மாற்றி யோசித்து தனது தையல் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பது அவரது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.