{மாற்றத்திற்கான வேட்பாளர்}: ஆயிரம் விளக்கில் களம் காணும் மருத்துவர் எழிலன் நாகநாதன்!
சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் டாக்டர்.எழிலன், சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.
அரசியல்வாதி என்றாலே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி என்ற காலம் மாறி, கழுத்தில் ஸ்டெத் உள்ளவர்கள் முதல், கையில் கலப்பைப் பிடித்தவர்கள் வரை இந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் புதுமுகங்களாக போட்டியிட தயாராகிவிட்டனர். கட்சி சார்பைத் தாண்டி இவர்களுக்கு என்று சமூகத்தில், மக்கள் மத்தியில் ஒரு நல்ல அடையாளம், நற்பெயர் இருப்பது மறுப்பதற்கு இல்லை. அப்படிப்பட்டவர்களைப் பற்றி யுவர்ஸ்டோரி தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் உற்று கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அமைகிறது. எப்போதுமே நட்சத்திர அந்தஸ்து மிக்க தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் இந்த முறை தி.மு.க சார்பில் டாக்டர்.நா.எழிலன் நாகநாதன் போட்டியிடுகிறார். எதிரணியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகை குஷ்பூ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த எழிலன்?
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் படித்தவர்கள் அதிகம். தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் 9 பேர் மருத்துவர்கள். இவர்களில் ஒருவரான டாக்டர்.எழிலன், கொஞ்சம் ஸ்பெஷலானவர்.
ஏனெனில், டாக்டராக இருப்பவருக்கு அரசியல் ஆர்வம் எப்படி வந்தது? என இவரைப்பார்த்து ஆச்சர்யமாக கேட்க முடியாது. எழிலன், மருத்துவராக சிறந்த விளங்குவதோடு, சமூகச் செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.
இலங்கை பிரச்சனையில் துவங்கி தமிழகத்தை உலுக்கிய நீட் பிரச்சனை வரை களத்தில் இறங்கி போராடுபவராக எழிலன் இருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில், இந்த பிரச்சனைகள் குறித்தெல்லாம் இவர் தெளிவாக கருத்துக்களை எடுத்து முன்வைப்பதை பார்த்திருக்கலாம்.
எழிலன் வேறு யாருமல்ல, மறைந்த தலைவர் மு.கருணாநிதிக்கு நெருக்கமானவரும், தி.மு.க தேர்தல் அறிக்கைகள் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவராகவும் கருதப்படும் பேராசிரியர் நாகநாதனின் மகன். சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற எழிலன், சென்னை காவேரி மருத்துவமனையில் பொது மருத்துவராக இருக்கிறார்.
கல்லூரி போராட்டம்
நீட் பிரச்சனையில் சமூக நீதிகாக குரல் கொடுத்து வருபவராக அறியப்படும் எழிலன், கல்லூரி காலத்திலேயே போராட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார்.
“மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது மத்திய அரசு கொண்டுவந்த ஒரு திட்டத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. சென்னை மருத்துவக் கல்லூரியில் நான் போராட்டத்தை நடத்தி வந்தேன். நான்தான் போராட்டத்துக்குத் தலைமை தாங்குகிறேன் என்று அறிந்து, என் அப்பாவிடம் தகவல் சொல்லி என்னை வரச் சொன்னார் கலைஞர் கருணாநிதி. மாணவப் பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலகம் சென்று, முதல்வராக இருந்த அவரைச் சந்தித்தேன். அருகில் இருந்த அன்பழகனிடம் ‘இவன் யார் தெரிகிறதா? நாகநாதன் பையன் என்று அறிமுகம் செய்தார்,” என தனது அனுபவம் பற்றி விகடன் பேட்டியில் எழிலன் கூறியிருக்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காகவும் உரக்கக் குரல் கொடுத்து வருபவராக இருக்கும் எழிலன், கூடங்குளம், நெடுவாசல் என அனைத்து சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் தனது கருத்துகளை தயக்கம் இல்லாமல் பதிவு செய்து வருபவர். சேலம் எட்டு வழிச்சாலை போராட்டத்திலும் தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார்.
இளைஞர் இயக்கம்
திராவிட இயக்கம் மற்றும் அதன் சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்டுள்ள எழிலன், இளைஞர்களை மையமாகக் கொண்டு "இளைஞர் இயக்கம்" என்ற சமூக அமைப்பையும் நடத்தி வருகிறார். நீட் பிரச்சனையில் சமூக நீதி காக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருபவர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்தையும் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
”திராவிட அணுகுமுறை என்பது எப்போதும் அடித்தட்டு மக்கள் சார்ந்ததாக இருக்கிறது, புதிய கல்விக்கொள்கை மேலிருந்து கீழ் பார்க்கும் தன்மை கொண்டிருக்கிறது,” என கேரவன் இதழுக்கான பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழகத்தின் மதிய உணவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, புதிய கல்விக்கொள்கையில் ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை அல்லது பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கலைஞருடன் நெருக்கம்
எல்லாவற்றுக்கும் மேல், திமுக தொண்டர்கள், டாக்டர்.எழிலனை நேசிக்க இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. தந்தை நாகநாதன் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தது போல, எழிலனும், கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். கருணாநிதிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி இறப்பதற்கு முன் ஆறு மாதங்கள் அவருடனே தங்கி இருந்து மருத்துவம் பார்த்திருக்கிறார்.
‘‘எல்லாத் துறைகளிலும் ஐயா எப்படி சிறந்து விளங்கினாரோ, அதேபோல் சிறந்த பேஷன்ட்டாகவும் இருந்தார். அதுதான் எங்களுக்கு ஆச்சர்யமே,” என்று இந்த அனுபவம் பற்றி அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இலவசத் திட்டங்கள்
திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட இலவசத் திட்ட அறிவிப்புகளில் இவருக்கும் முக்கியப் பங்கிருப்பதாகக் கருதப்படுகிறது. எழிலன் சமூக நீதியை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் விதத்தை பார்த்தே திமுக தலைமை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பதாகக் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நன்கறிந்த மருத்துவர் என்பதோடு, தமிழக மக்களின் பிரச்சனைகளை நன்கறிந்தவர் மற்றும் அவற்றுக்காக குரல் கொடுத்து வருபவர் என்பதால், இவர் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நன்றாக செயல்படுவார் என்றும் எதிர்பார்ப்பு மக்களிடையேயும் இருக்கிறது.
கடும் போட்டி
ஆனால், ஆயிரம் விளக்கு தொகுதியில், நடிகை குஷ்பூ பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சென்னை திமுகவின் கோட்டை எனக் கருதப்படுவது எழிலனுக்கு சாதகமாக அமையலாம். ஆனால், குஷ்பூ நட்சத்திர வேட்பாளராக அமைந்துள்ளதால் பிராச்சாரக் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முழு பெயர்: டாக்டர்.எழிலன் நாகநாதன்
தொகுதி- ஆயிரம் விளக்கு
கட்சி- திமுக
தொழில்- மருத்துவர்
சிறப்பம்சம்- சமூக நீதியில் ஆர்வம் உள்ள செயற்பாட்டாளர்
சாதகம்- மக்களிடம் நன்மதிப்பு, சமூகப் பார்வை கொண்டவர்.
போட்டியாளர்கள்- நடிகை குஷ்பூ (பா.ஜ.க), அ.ஜே.ஷெரின் - நாம் தமிழர் கட்சி
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)