இளநீரில் ஸ்டிக்கர், 10,000 கோலம், ஓட்டு அழைப்பிதழ் - 100% வாக்களிப்பை வலியுறுத்தும் வித்தியாச விழிப்புணர்வு பிரச்சாரங்கள்!
100% வாக்களிப்பை வலியுறுத்தி, கட்சிகளுக்கு இணையாக, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் வித்தியாசமான முறையில் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம்.
மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என ஒவ்வொரு கட்சியும் தீயாய் வேலை பார்த்து வருகின்றன. இதனால் நாடே தேர்தல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்தத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக, இந்த மக்களவை தேர்தலில் வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்டம் தோறும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பேரணிகள், சுவர் விளம்பரங்கள், வீடியோக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்ற முறைகளில் மட்டுமின்றி, வாக்காளர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான முறையிலும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் சிலவற்றைப் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...
ஓட்டு போட அழைப்பிதழ்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில், திருமண அழைப்பிதழ் வடிவில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மணமகன்-பேலட் யூனிட். மணமகள்-கன்ட்ரோல் யூனிட். புரோகிதர்-விவி பேட் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய திருமண அழைப்பிதழ் வடிவிலான இந்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வாக்காளர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
பலூன் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஓசூர் பஸ் நிலையம் அருகே ஒரு கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூனை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எம். சரயு பறக்கவிட்டார்.
சீர் கொடுத்து அழைப்பு
நெல்லை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் தலைமையில் அலுவலர்கள் சீர்வரிசையுடன் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சகிதம் அழைப்பிதழ் மற்றும் மேளதாளத்துடன், வயதில் மூத்த வாக்காளர்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று, 12-டி படிவத்தை கொடுத்து வாக்களித்திட அழைக்கும் நிகழ்ச்சியை நடத்தி அசத்தியுள்ளனர்.
இளநீர், தர்பூசணி, நுங்கு மீது ஸ்டிக்கர்
கோடையில் மக்கள் அதிகம் தேடுவது இளநீர், தர்பூசணி மற்றும் நுங்கு போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களைத்தான். எனவே, அந்த பொருட்கள் மீது தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி வித்தியாசமான முறையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் ஓசூர் நடைபாதை வியாபாரிகள்.
இதேபோல், தேர்தல் ஆணையம் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள், தேனீர் கப்புகள் போன்றவற்றின் மீதும் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகின்றனர் அலுவலர்கள்.
பேருந்தில் கலெக்டர்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான பேருந்து நிலையத்தில், மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்துள்ளார். கூடியிருந்த பொதுமக்களிடம் மட்டுமின்றி, நின்றிருந்த பேருந்துகளில் ஏறியும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார்.
இதேபோல், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், மாற்றத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர்களின் வீடுகளுக்கு மேள தாளத்துடன் நேரில் சென்றும் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா.
10 ஆயிரம் கோலங்கள்
விருதுநகர் மாவட்டத்தில், கோலங்கள் மூலம் விழிப்புணர்வு எனும் கருப்பொருளில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 750 இடங்களில் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொண்டு, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் கோலங்களைப் போட்டனர். “100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம்’, ’என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ எனும் முழக்கங்களை வலியுறுத்தி இந்தக் கோலமிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகங்கள்
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் களை கட்டி வருகின்றன. அதில் ஒரு பகுதியாக அம்மாநில அரசு நிறுவனமான பாண்லே நிறுவனத்திலிருந்து வெளிவரும் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் “தவறாமல் வாக்களிக்கவும்”, “உங்களது வாக்கு உங்கள் குரல்”, “உங்களது வாக்கு விற்பனைக்கல்ல”, “வாக்களித்திட பணம் பொருள் பெறுவது குற்றம்’’ போன்ற பல வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
துணிப்பை
கள்ளக்குறிச்சியின் பல்வேறு பகுதிகளில், 100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய துணிப் பைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் வழங்கி, மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.