நத்தையில் புதைந்திருந்த அரிய முத்து: ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன தாய்லாந்து பெண்!
கோடீஸ்வரரான தாய்லாந்து பெண்!
தாய்லாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நத்தை வாங்கி அதன்மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நத்தை வாங்குனா பணக்காரராகலாமா? என்று வாயை பிளக்க வைக்கிறது இந்த செய்தி.
தாய்லாந்தில் உள்ள சாடன் (SATUN) மாகாணத்தைச் சேர்ந்தவர் கொட்சகோர்ன் தந்திவாவட்குல் என்ற பெண். இவர் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உள்ளூர் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சமைப்பதற்காக உள்ளூர் சந்தையிலிருந்து நத்தை வாங்கி வந்துள்ளார். அந்த நத்தையை அவர் 163 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். வழக்கம்போல, நத்தை வாங்கிவிட்டு வீடு திரும்பியவர், அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென அந்த நத்தையில் ஏதோ ஒரு கல் மஞ்சள் நிறத்தில் மினுமனுப்பாக காட்சியளிப்பது தென்பட்டது. உடனே அவர் அதனை எடுத்து, ’இது என்ன கல்’ என்று குழப்பத்தில் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ளவர்களிடம் இப்படியொரு கல் நத்தையில் இருந்ததாகவும், சுத்தப்படுத்தும்போது கிடைத்தாகவும் கூறியுள்ளார். இதை உற்றுபார்த்த வீட்டில் உள்ள பெரியவர்கள்,
‘அரிய மஞ்சள் நிற முத்து என்றும், அதன் விலை பல மடங்கு என்றும்’ கூறியுள்ளார். மேலும் அவர் அருகிலிருந்த கடைக்குச் சென்றும் அதை உறுதிபடுத்தியுள்ளார். அந்த முத்து இப்போது அவரை கோடீஸ்வரராக்கி உள்ளது.
“நான் அந்த கல்லை அம்மாவிடம் காட்டியதும். அம்மா எனக்கு அது முத்து எனச் சொன்னார். இந்த தகவல் வெளியில் கசிந்தால் எனக்கு நத்தையை விற்பனை செய்த வியாபாரி தகராறு செய்வார் என அஞ்சி இந்த விஷயத்தில் ரகசியம் காத்தேன். அதே சமயத்தில் இந்த மஞ்சள் நிற முத்துக்கு உள்ள மவுசு குறித்து மீனவர் ஒருவர் கோடீஸ்வரரான செய்தி மூலம் அறிந்து கொண்டேன்,” என கொட்சகோர்ன் தந்திவாவட்குல் தெரிவித்துள்ளார்.
அந்த கல்லின் மொத்த அளவு, சுமார் 1.5 சென்டி மீட்டர் விட்டம் தான். இந்த முத்து மணியைக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ”இந்த முத்து மணியை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தனது தாயின் மருத்துவச் செலவுகளை கவனிக்க உள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
தொகுப்பு: மலையரசு