Msme தினம்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக அரசு உறுதி!
சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க தீவிர கவனம் செலுத்தப்படும் என தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் துறைக்கான தொலைநோக்கு திட்டத்தின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவன சூழல் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (Edii) தமிழ்நாட்டு கூடுதல் இயக்குனர் திருமதி.ஷஜீவனா, சர்வ தேச சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் அன்று நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
MSME தினம் ஜூன் 27ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டி தமிழக அரசு, தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அறிவித்த திட்டங்களை பகிர்ந்து கொண்டார் ஷஜிவனா. இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழும் நிலையில், தொழில் ஆர்வம் உள்ள தனிநபர்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்த சூழலை மேலும் மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழ் நாட்டு தொலைநோக்கு திட்டம் 2023 நோக்கங்களும் இணைந்து மாநில தொழில் முனைவுச் சூழலை மேலும் வலுவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் ஸ்டார்ட் அப் சூழலை ஊக்குவிக்க, தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-23 கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் தனி கவனம் செலுத்தப்படும் என, சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தமிழகம் நாட்டின் அறிவு தலைநகரமாகவும், புத்தாக்க மையமாகவும் உருவாகும். இதன் மூலம், தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட் அப் சூழல் மூலம், 1 லட்சம் திறன் வாய்ந்த நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மாநில அரசு நம்புகிறது. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்க, ரூ.250 கோடி மதிப்பில் நிதி உருவாக்கப்படும் என்றும், இந்த நிதியை சிட்பி வங்கி நிர்வகிக்கும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் கீழ் முதல் கட்டமாக ரூ.25 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுமையான திட்டங்கள்; சிறப்பு அடைக்காக்கும் திட்டங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும் என்றும் கூடுதல் இயக்குனர் நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டார்ட் அப்களுக்கான துவக்க நிலை நிதி அளிக்க, ரூ.50 கோடி மதிப்பில் ஸ்டார்ட் அப் சீட் கிராண்ட் ஃபண்ட் (seed grant fund) உருவாக்கப்படும். நிதி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இது செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும் இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவு ஆர்வத்தை அதிகரிக்க கல்லூரிகளுடன் இணைந்து தொழில்முனைவுத் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும். நிறுவனங்களின் பங்கேற்பு ஊக்குவிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வழிகாட்டிகளுக்கு போதிய ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது Edii-Tn.
புதிய ஸ்டார்ட் அப்களை வளர்த்தெடுக்க, ஸ்டார்ட் ஸ்டெப்ஸ் (start steps) திட்டம் செயல்படுத்தப்படும். சர்வதேச முதலீட்டாளர்கள் தமிழக ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய கூட்டு முயற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மட்டும் அல்லாமல், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம், ஈரோடு ஆகிய நகரங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்றார் ஷஜீவனா. தமிழகத்தில் 5,000 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் உருவாக்கப்படுவதில் Edii கவனம் செலுத்த உள்ளது. சமூக தாக்கம் உள்ள 10 சர்வதேச தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் அம்சத்தையும் தமிழக அரசு செயல்படுத்தும் என்றும் விழாவில் தெரிவித்தனர்.
சென்னையில் நடைப்பெற்ற Msme தினக் கொண்டாட்டத்தில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (Edii) தமிழ்நாட்டு இயக்குனர் திரு.நாகராஜன், தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் திரு.ராஜேந்திர குமார், Msme துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா மற்றும் தமிழக அரசு ஐடி துறைச் செயலாளர் திரு.சந்தோஷ் பாபு உள்ளிட்ட பலர் தமிழக அரசின் தொழில் கொள்கைகள், திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.