ஒரு ஆண்டைக் கடந்து ‘நான் முதல்வன்’ திட்டம் - 1500 கல்லூரிகள்; 18 லட்சம் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி!
'நான் முதல்வன்’ திட்டம் அறிவிக்கப்பட்டு 1 ஆண்டைக் கடந்து வெற்றிகரமாக 1500+ கல்லூரிகளை சென்றடைந்து, கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் மிகவும் அதிகம். இந்திய சராசரியை விட மிக மிக அதிகம். ஆனாலும் கல்லூரி முடித்தவர்கள் வேலைக்கு உடனடியாக தயாராகிறார்களா என்றால், பல சமயங்களில் இல்லை என்னும் பதிலும் வருகிறது.
பல தொழில்நுட்ப மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களில் கல்லூரி முடிப்பவர்களை உடனடியாக பணியமர்த்த முடியவில்லை என்னும் குரல்கள் கேட்கின்றன. இந்த சிக்கலுக்கு மிகவும் அடிப்படையான காரணம் பாடத்திட்டம், அதோடு தொழில்துறையினரின் தேவை மாறிக்கொண்டே இருக்கிறது.
ஆனால், பாடத்திட்டம் அடிக்கடி மாறுவதில்லை. தொழில்நுட்பத்துறையில் மெஷின் லேர்னிங் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் என தேவை மாறிக்கொண்டே வருகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை அடிக்கடி மாற்றவும் முடியாது. அதனால், தொழில்துறைக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்வற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கியது தான் ’நான் முதல்வன்’ திட்டம்.
'நான் முதல்வன்’ திட்டம் அறிவிக்கப்பட்டு 1 ஆண்டைக்கடந்து, திறன் பயிற்சி போர்டலை தொடங்கி 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக 1500+ கல்லூரிகளை சென்றடைந்து, கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான பயிற்சிகளை பெற உதவியுள்ளது. அதில், 3.5 லட்சம் மாணவர்கள் கோர்ஸ்களை வெற்றிகரமாக முடித்தும் உள்ளனர்.
இந்த திட்டத்தின் நிர்வாக இயக்குநர் இன்னொசென்ட் திவ்யா ஐஏஎஸ் அவர்கள் யுவர்ஸ்டோரி தமிழ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்தும், அதன் தேவை, தற்போது நடந்துகொண்டிருக்கும் மாற்றம் மற்றும் எதிர்கால பயன் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
‘நான் முதல்வன்’ திட்டம்
தமிழகத்தில் படித்தவர்கள் பலர் உள்ளனர், ஆனால், அவர்கள் அனைவரும் வேலைக்கு ஏற்றவர்கள் இல்லை எனும் எண்ணம் சில தொழில்துறையினரிடம் உள்ளது. அதனை நீக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த திட்டம், என்றார் இன்னொசென்ட் திவ்யா.
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலமாக செயல்படும் தனியார் கல்லூரிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொறியியல் கல்லூரிகள் மட்டுமல்லாமல் கலைக்கல்லூரிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு வேலை பளு இருக்கும் சூழலில் இதனையும் கொண்டுவந்தால் அந்த திட்டத்தின் வெற்றி குறையக்கூடும் என கருத்தில் கொண்டு இவற்றை கட்டாய பாடத்திட்டமாக மாற்றி இருக்கிறோம்.
“இந்த பாடத்துக்கும் மதிப்பெண் உண்டு என்பதால் மாணவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். மேலும், தற்போது தொழில்துறையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்,” என்று இன்னொசென்ட் திவ்யா கூறினார்.
எப்படி உருவானது?
தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் திறன்களை வளர்த்து, பணிக்குத் தகுந்த நபர்களாக அவர்களை ஆக்குவதன் முனைப்புடன் தொடங்கப்பட்டதே நான் முதல்வன் திட்டம். இத்திட்டத்தை தொடங்குவதற்கு முன் பல்வேறு துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்னும் உரையாடலை நிகழ்த்தினோம்.
இதுதவிர, இந்தியாவில் சில மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் வெவ்வேறு வடிவில் செயல்பட்டுவருகிறது. அதனால் இது தொடர்பாக சில மாநிலங்களில் இந்தத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதையும் ஆராய்ந்த பின்னரே ’நான் முதல்வன்’ திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம். தவிர தமிழ்நாடு அளவுக்கு இவ்வளவு பெரிய அளவில் எந்த மாநிலமும் திறன் மேம்மாட்டுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை.
உதாரணத்துக்கு சில மாநிலங்களில் இதுபோன்ற திறன் மேம்பாட்டுக்கு மாணவர்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், இங்கு மாணவர்கள் எந்த செலவும் செய்யத்தேவையில்லை என்பதில் அரசு உறுதியாக இருந்தது. இதற்காக, முதல்கட்டமாக 50 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.
’நான் முதல்வன்’ திட்டத்தின் சிறப்பே, பல்வேறு துறைகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அத்துறையில் இருக்கும் தற்போதைய தேவைகளை, திறன்களை வளர்த்துக் கொள்ள அந்த துறையைச்சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் குழு உருவாக்கிய பாடத்திட்டத்தில் பயிற்சி பெறுவதாகும். அதோடும், கல்லூரி பேராசிரியர்கள் மட்டுமல்லாமல் அந்தந்த துறை வல்லுனர்களே இந்த பாடங்களை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் கற்றுக்கொடுப்பது மாணவர்களுக்கு ஊக்கத்தை தருவதாக திவ்யா பகிர்ந்தார்.
இதற்காக, பாடத்திட்டம் உருவாக்குவதற்கு சர்வதேச அளவில் முக்கியமாக உள்ள 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இணைத்தோம். இந்த நிறுவனங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொடுத்தன. சில நிறுவனங்கள் அவர்களில் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்தும் தமிழ்நாடு அரசுக்காக இலவசமாக பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது. இந்த வகுப்புகள் இரு மாடல்களிலும் நடக்கின்றன. ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்பு ஆகிய இரண்டு முறைகளிலும் நடக்கின்றன,” என்றார்.
இந்த துறை வாரியான கோர்ஸ்களில் மாணவர்களுக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்படும். அவர்கள் அதில் தங்களுக்குத் தேவையானதை எடுத்து படித்துக்கொள்ளலாம்.
நேரடி வகுப்புகளுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழங்குகின்றன. இதுவரை, 7000க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் பயன் அடையும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 1500 கல்லூரிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடையும். மைக்ரோசாப்ட், AWS, Tcs, என்.எஸ்.இ, HCL, Cisco, கேம்பிரிட்ஜ், ஃபிள்ப்கார்ட், CTS, Infosys, IBM உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் இத்திட்டத்தில் கைகோர்த்திருக்கின்றன.
வருங்காலத் திட்டம் என்ன?
இப்போதைக்கு தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் உருவாக்கினாலும் சாப்ட்ஸ்கில் திறனையும் மேம்படுத்துவதற்கு அடுத்தகட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும், என இன்னொசென்ட் திவ்யா தெரிவித்தார்.
மாணவர்கள் நேரடியாக நான் முதல்வன் தளத்திலும் பதிவு செய்துகொண்டு பயன் அடையலாம். நேரடி வகுப்புகளை தவிர ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்ப அறிவினை தவிர கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலம் ஆங்கில மொழி பயிற்சியையும் இத்திட்டத்தில் பெற முடியும்.
மேலும், இந்தத் தளத்தில் மாணவர்களின் செயல்பாட்டினை பொறுத்து அவர்களுக்கு வேலையும் கிடைக்கும். வேலை கொடுப்பதற்காக நூற்றுக்கணக்காக நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன, என்றார்.
மாணவர்களுக்கான டேஷ்போர்டு மூலம் குறிப்பிட்ட மாணவர்கள் எந்த பாடத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்பது தெரியும். இதே தேவையில் இருக்கும் நிறுவனங்கள் மாணவர்களை தேர்தெடுத்துக்கொள்ள முடியும். இருக்கும் இடத்தில் இருந்து படித்தாலே எந்த சிக்கலும் இல்லாமல் வேலை கிடைக்கும். டெக்னாலஜி இருப்பதால் நகரம், கிராமம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கிடைக்கும், என்றார் திவ்யா.
இந்த பாடத்திட்டம் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கப்படும். அதே சமயத்தில், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ’நான் முதல்வன்’ திட்டம் விரிவுப்படுத்தப்படும் என இன்னொசெண்ட் திவ்யா ஐஏஎஸ் கூறினார்.
கல்வியும் வேலையும்தான் ஒருவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது.