{மாற்றத்திற்கான வேட்பாளர்}: நேர்மையான அரசியலை நோக்கி முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ் பாபு!
படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனும் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறார் நிர்வாகத்திறமைக்காக அறியப்படும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
சென்னையை பொருத்தவரை வேளச்சேரி இளம் கூட்டத்தை கொண்ட தொகுதி, ஐடி காரிடர் கொண்ட மாடர்ன் தொகுதி. வேகமாக வளர்ந்து வரும் தன்மை கொண்ட இந்த தொகுதியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற முறையில் சந்தோஷ் பாபு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். நிர்வாகத்திறமை மற்றும் நேர்மையான செயல்பாட்டிற்காக அறியப்படும், சந்தோஷ் பாபு, இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார்.
அரசியல் ஆர்வம்
முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் அரசியலுக்கு வந்திருந்தாலும், சந்தோஷ் பாபு மிகவும் வேறுபட்டு நிற்கிறார். ஏனெனில், இவர் பணியில் இருக்கும் போதே விருப்ப ஓய்வு பெற்று அரசியலில் இறங்கியுள்ளார். இவர் பணியில் இருந்து விலகியதற்கு ’பாரத் நெட்’ திட்ட டெண்டர் விவகாரத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணம் எனக் கூறப்பட்டாலும், அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பியே அரசியில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
இவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து இதை தெளிவாக உணரலாம். ’மருத்துவரில் இருந்து ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக மாறி, பின் ஆசிரியராக மாறி, அரசியல்வாதியாக மாறியுள்ள நல்ல நிர்வாக ஆர்வலர்’ என இவரது அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர்- ஐஏஎஸ் அதிகாரி
ஆம், சந்தோஷ்பாபு தன் பெயருக்கு முன்னும், பின்னும் பட்டம் கொண்டவர். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் அதற்கு முன் டாக்டராக பட்டம் பெற்றார். கேரளாவின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர் பின்னர் ஐ.ஏ.எஸ் ஆக தேர்வாகி, 1995 பேட்ச் அதிகாரியாக தமிழகத்தில் பொறுப்பேற்றார்.
பணியில் இருந்த காலத்தில் நிர்வாகத்திறமை மிக்க அதிகாரியாக போற்றப்பட்ட சந்தோஷ் பாபு, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக தகவல் தொழில்நுட்பச் செயலராக இருந்த போது பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.
நவீன தொழில்நுட்பம் பற்றிய புரிதல் மிக்கவர் என்பதால், மாநில வளர்ச்சிக்கு தேவையான பல முயற்சிகளை இவர் மேற்கொண்டார். தொழில்நுட்ப ஆர்வலர் என்பதால், தனக்கென சொந்த இணையதளமும் கொண்டிருக்கிறார்.
சாதனை பட்டியல்
சந்தோஷ்பாபுவின் சொந்த இணையதளத்தில் (http://www.santhoshbabu.org/) அரசுப்பணியில் இவர் நிறைவேற்றிய திட்டங்களும், மேற்கொண்ட பணிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அரசுக்குத் தேவையான இணையதளங்களை உருவாக்கியது, ஸ்மார்ட்போன் செயலியை உருவாக்கியது, தொழில்நுட்பச் சேவைகளை உருவாக்கியது என இந்த பட்டியல் நீள்கிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி அரசு நிர்வாகத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் எனும் தொலைநோக்குடன் இவர் செயல்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எந்த துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான திட்டங்களைக் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். அந்த வகையில் துடிப்பு மிக்க அதிகாரியாக முன்னுதாரணமாக செயல்பட்டிருக்கிறார்.
விருதுகள், அங்கீகாரம்
அரசு தரப்பிலான கொள்கை முடிவுகளை வரையறுப்பதில் முக்கியப் பங்காற்றியவர், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி சமர்பித்திருக்கிறார். இவரது சாதனைகள் பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்துள்ளன.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காக சிறந்த கலெக்டர் விருது, மின் – ஆளுகை ஆர்வலர் விருது, மாற்றத்திற்கான மனிதர் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். அண்மையில், யுவர்ஸ்டோரில் சார்பில் மாற்றத்தை உண்டாக்கும் மனிதர் விருதையும் வென்றுள்ளார்.
களப்பணி
அரசு அதிகாரியாக எப்போதும் துடிப்புடன் செயல்பட்டு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டி வந்துள்ள சந்தோஷ் பாபு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். பணியில் இருந்து விலகியவர் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
‘தமிழக அரசின் அழுத்தம் காரணமாகவே பதவியிலிருந்து விலகினேன். இப்போது நேர்மையான அரசியலை தர விரும்புகிறேன். இப்போதைய அரசியலில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது,’ என்று தனது முடிவு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது சந்தோஷ் பாபு கூறியிருக்கிறார்.
’நேர்மையான தலைமையால் தான், நல்ல செயல்பாட்டை தர முடியும். நல்ல தலைமையின் கீழ், புதுமையாக்கத்தை யோசித்து பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் செயல்களில் ஈடுபட முடியும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
‘நேர்மையுடன் அர்ப்பணிப்பு குணத்துடன் பணியாற்றி, அரசின் அழுத்தம் காரணமாக பதவியை துறந்தவர் சந்தோஷ் பாபு. 6 மாதங்கள் யோசனைக்குப் பிறகு அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.
அவரை போன்ற நேர்மையாளர்களின் வருகை கட்சிக்கு பலமாகும், என்று கட்சியில் இணைந்த போது கமல்ஹாசன் இவரைப்பற்றி கூறியிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தரவுகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை சந்தோஷ் பாபு கவனித்துக் கொள்வார் என்பதோடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் முக்கியப் பங்காற்றுவார் என கமல் கூறியிருந்தார்.
தேர்தல் களம்
நேர்மையான அரசியலைத் தர வேண்டும் எனும் நோக்கத்துடன் இயங்கும் சந்தோஷ் பாபு, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செய்தியை உடனே தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தார்.
” நண்பர்களே நீங்கள் அறிந்த படி, மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறேன். எனது அறிமுக தகவல்களை அத்தொகுதி மக்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள்,” எனும் வேண்டுகோளுடன் தன்னைப்பற்றிய தகவல்களையும் இணைத்திருந்தார்.
அந்த அறிமுக பக்கம் அவரைப்பற்றிய அடிப்படை தகவல்களைக் கொண்டிருக்கிறது.
போட்டி
திறமையான, நேர்மையான அதிகாரி, நவீன தொழில்நுட்பத்தை அறிந்தவர் என்ற முறையில் சந்தோஷ் பாபு வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்கிறார். மாற்றத்திற்கான அரசியலை பேசுவது அவரது பலமாக அமைகிறது. தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள வேளச்சேரி தொகுதியில் இவர் போட்டியிடுவது பொருத்தமாகவே அமைகிறது.
கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் நடிகர் வாகை சந்திரசேகர் வெற்றி பெற்றார். இந்த முறை, இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.அசோக் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில், மோ.கீர்த்தனா போட்டியிடுகிறார்.
பெயர்: டாக்டர்.சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்
வயது: 53
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ், ஐ.ஏ.எஸ், லண்டன் பொருளாதார பள்ளி ஆய்வறிஞர், பொது நிர்வாகம் முதுகலை.
குடும்பம்: மனைவி டாக்டர்.பீனா. மகன் – நிடின் சந்தோஷ், பொறியியல் பட்டதாரி.
சிறப்பம்சம்: மக்களிடையே அறிமுகமானவர், தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் வளர்ச்சியை நோக்கிய சிந்தனையாளர்.
சாதனை: அரசுத்துறைகளில் தொழில்நுட்ப அறிமுக, புதிய திட்டங்களை வகுத்தல்.
அரசியல் ஆர்வம்: அண்மையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.
போட்டியிடும் தொகுதி- வேளச்சேரி
எதிரணி வேட்பாளர்கள்: எம்.கே.அசோக் ( அதிமுக), மோ.கீர்த்தனா ( நாம் தமிழர் கட்சி), காங்கிரஸ் வேட்பாளர்.
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)