40 நாள் லாக்டவுனில் 5.50 லட்சம் வருவாய்: கோவை இளைஞரின் டிஜிட்டல் முயற்சி!
எளிய தமிழில் சோஷியல் மீடியா மார்க்கெடிங் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் தொழில்முனைவர் சரவணன் தியாகராஜனின் முயற்சியின் பலன் இது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் முடித்துவிட்டு பல முன்னணி ஐடி நிறுவனங்களில் பணி கிடைத்தும், அதை ஏற்காமல், குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற கனவுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் கால் பதித்த கோவையைச் சேர்ந்த சரவணன் தியாகராஜன், இக்கட்டான இந்த சூழலிலும் தன் விடாமுயற்சியால் தன் தொழிலையும் வெற்றிகரமாக தொடர்ந்து, நல்ல வருவாயும் ஈட்டியுள்ளார்.
இதலாம் இவருக்கு எப்படி சாத்தியமானது?
பொள்ளச்சியைச் சேர்ந்தவர் சரவணன் தியாகராஜன். இவரின் தாய் தந்தை இருவரும் ஹோட்டலில் மாதம் 8,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள். பொள்ளாச்சியில் மாத வாடகைக்கு வசித்து வருகின்றனர். இவரது வருமானத்தை வைத்தே குடும்பச் செலவு மற்றும் தங்கையின் கல்விச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை. சரவணன் தான் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவரும் கூட.
பள்ளிப்படிப்பை முடித்த சரவணன், 2013ல் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி தனது பட்டப்படிப்பை துவங்கினார். எஞ்சினியரிங் படித்தாலும் ஆரம்ப காலம் முதலே தொழில்முனைவர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தார்.
“டிஜிட்டல் மார்க்கெட்டிங் தான் அடுத்த ட்ரெண்ட் என்பதை உணர்ந்தேன். எனது கல்லூரியில் பார்ட்-டைம் பணி செய்து கொண்டே அந்த வருமானத்தில் ஆன்லைன் மூலம் உலகின் முன்னணி டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமான Digital Marketer-ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டேன்,” என்றார்.
இதுவே இவரின் வாழ்வின் முதல் திருப்புமுனையாக அமைந்துள்ளது. நான் கற்றுக் கொண்ட டிஜிட்டல் மார்கெட்டிங்கை பயன்படுத்தி என் கல்லூரிக்கு அட்மிஷன் நேரத்தில் ஆட்ஸ் ரன் செய்து வெறும் 50,000 ருபாய் செலவில் 12 மாணவர்களை (48 லட்சம் மதிப்புள்ள பிசினஸ்) கொண்டு வந்ததாக கூறுகிறார் சரவணன்.
“என் கல்லூரி துணைத்தலைவர் எனக்கு ரூ.25,000 சம்பளத்துடன், டிஜிட்டல் மார்க்கெடிங் நிர்வாகியாக வேலை அளித்தார். அதே நேரத்தில் ஏற்கனவே எனக்கு 50,000 மாதச் சம்பளத்தில் 5 ஐடி நிறுவனங்களில் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலைக்கு அழைப்பு வந்தது. ஆனால் என் மனம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் தொடங்குவதில் இருந்தது.”
வாழ்வின் இரண்டாம் திருப்புமுனை
என்னதான் கல்லூரியில் நல்ல சம்பளத்துடன் மனதிற்கு பிடித்த வேலை இருந்தாலும் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டுமென்றால் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரவணனுக்குத் தோன்றியது. பின் சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்களுக்கு கன்சல்டண்டாக பணிபுரிந்தார்.
எப்படியோ குடும்பக் கஷ்டத்திலும் தனது கல்லூரியில் கிடைத்த மாதச்சம்பள பணியை
விட்டுவிட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை தீவிரமாக கற்றுக்கொள்ள சென்னையில் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் 12,000 ருபாய் சம்பளத்திற்கு சேர்ந்தார் சரவணன்.
“என் தாய், தந்தையிடம் என் இலட்சியத்தை அடைய ஒரு வருடம் அவகாசம் கேட்டேன். அடுத்த 1 வருடத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் டிஜிட்டல் மார்க்கெடிங் மேனேஜராக வேலை கிடைத்தது. கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இந்த மூன்றும் இருந்தால் உங்கள் வாழ்வின் லட்சியத்தை மிக எளிதாக அடையலாம்,” என்கிறார்.
கனவு நிறுவனம் தொடங்கிய தருணம்
சரவணனுக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் முதல் தலைமுறை தொழில்முனைவராக வழி நடத்தியதே அவரின் வெற்றியின் முதல் கல்.
2018ல் தன்னுடைய ஆசிரியர் மற்றும் வழிகாட்டி ஆன Dr.முரளிசங்கர் உடன் இணைந்து 'Yardstick Digital Solutions' என்னும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை தொடங்கினார் சரவணன். சுயநிதியில் நிறுவனம் தொடங்கி 2 மாதத்திலேயே நல்ல வாடிக்கையாளர்களை பெறத்
தொடங்கினார்கள்.
“சிறிதாகத் தொடங்கி, தற்போது என் நிறுவனத்தில் 5 ஊழியர்களுடன் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் நியூஸிலாந்து போன்ற பல நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து தரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தோம்,” என்றார்.
40 நாட்கள் லாக்டவுன் - 1000 மாணவர்கள் - 5.5 லட்சம் வருவாய்
இப்படி எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்க, கனவு நிறுவனத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல நினைத்த சரவணனுக்கு கொரோனா மற்றும் அதில் ஏற்பட்ட ஊரடங்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியது.
“ஊரடங்கு அறிவித்த உடன் சில நாட்களில் முடிந்துவிடும் என்று எண்ணினேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல லாக்டவுன் நீடித்து கொண்டே இருந்தது. அதே சமயம் பணம் தட்டுப்பாட்டால் என்னுடைய சில வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரினர்,” என்கிறார் சரவணன்.
என்ன செய்யலாம் என யோசித்த அவர், ஆன்லைனில் டிஜிட்டல் மார்கெடிங் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம் என தீர்மானித்தார். சிறு நிறுவன நிறுவனர்கள், மாணவர்கள் என பலருக்கும் டிஜிட்டல் மார்கெட்டிங்-ன் தேவை அதிகமாக உள்ளதால் அதையே ஆன்லைனில் வகுப்புகளாக எடுத்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என முடிவு செய்தார்.
“லாக்டவுன் காரணமாக என் நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளம் நிறுத்திவைக்கக்கூடாது என்று உறுதியோடு இருந்தேன். அப்படியே இந்த நேரத்தில் பல தொழில்முனைவோர் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணினேன். இதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் Social Media Marketing Mastery Course என்று தமிழில் லான்ச் செய்தோம்.”
இதே கோர்சை இணைய உலகின் முன்னணி நிறுவனங்களில் பயின்றால் குறைந்து 20,000 ரூபாய் ஆகும். அதே தரத்தில் பல சிறு, குறு தொழில் முனைவோர்கள் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் Rs.555 முதல் 1,500, 10,000 வரை பயிற்சிகளை அறிமுகப்படுத்தினோம்.
“இதுவரை 40 நாட்களில் 1000+ மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர். அதே சமயம் ஆன்லைன் வகுப்புகள் மூலம் இதுவரை 5.50 லட்ச ரூபாய் ஈட்டியுள்ளேன். இந்த கோர்ஸ் மூலம் என் நிறுவனத்திற்கும் இதுவரை ரூ.2 லட்சம் மதிப்புள்ள ப்ராஜக்ட்ஸ் கிடைத்துள்ளது,” என்றார் மகிழ்ச்சியோடு.
2030 ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வழிகளைக் கற்றுக்கொடுப்பதே தனது அடுத்த இலக்காகும் எனத் தெரிவிக்கிறார் சரவணன்.
ஊரடங்கு மெல்ல தளர்வடைந்து மீண்டும் தொழில்கள் தொடங்கியுள்ளதால் வீழ்ந்த நிறுவனங்கள் மீண்டும் எழுந்து கொண்டிருக்கும் இவ்வேளயில், சரவணன் போன்ற இளைஞர்களின் தன்னம்பிக்கையும், எவ்வித சவால்கள் வந்தாலும் தன் கனவுப் பாதையில் தொடர்ந்து பயணிக்க, தொழில் களத்தில் துணிவுடன் நிற்கும் விடாமுயற்சி பலருக்கும் உத்வேகத்தை நிச்சயம் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.