இந்த நிதியாண்டில் 50ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்!
முந்தைய நிதி ஆண்டில் டாடா மோட்டார்ஸ் 19,000 க்கு மேலான மின்வாகனங்களை விற்பனை செய்து, 2019 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 353 சதவீத வளர்ச்சி பெற்றிருந்தது.
இந்த நிதியாண்டில் 50,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக, இந்த வாரம் நடைபெற்ற பங்குதாரர்கள் கூட்டத்தில், டாடா மோட்டார்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார். 2023-24 ம் நிதியாண்டில் இதை இரு மடங்காக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பால் சர்வதேச அளவில் உண்டான செமிகண்டக்டர் தட்டுப்பாடை அடுத்த சில ஆண்டுகளில் சரியாகும் என சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.

நவீனமயமான நிலையில், கார் தயாரிப்பில் இந்த சிப்கள் முக்கிய பங்கி வகிக்கின்றன. சிப் நெருக்கடியால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
"இடர்கள் மற்றும் நிர்வாக நிச்சயமற்றத்தன்மையை எதிர்கொள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் சூழல் பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இதன் விளைவாக, ஆண்டுவாக்கில் எங்கள் செயல்பாடு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கிறோம். 2023ம் நிதியாண்டின் முதல் அரையாண்டை விட இரண்டாம் பாதி மேம்பட்டதாக இருக்கும்,” என சந்திரசேகரன் கூறியுள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முந்தைய நிதியாண்டில் (2020-21) 19,105 மின் வாகங்களை விற்பனை செய்துள்ளது. 2019-20 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 353 சதவீத வளர்ச்சியாகும்.
காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் அம்சங்கள் காரணமாக மின்வாகனங்களுக்கான தேவை மற்றும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் மின்வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவில் மின்வாகனங்கள் பரவலாக கவனத்தை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில்: தாரூதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்