ரூ.2 ஆயிரம்; 1,900 கிலோ மீட்டர் பயணம்: டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அசத்தல்!
15 நிமிடத்தில் சார்ஜ் செய்யும் கருவி அறிமுகம்!
தற்போது இருக்கும் எலெக்ட்ரிக் காரில் முக்கியமானது டாடா நெக்ஸான். இந்த கார் பயணத்தின் தூரம் குறித்து பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். அன்ஜாய் சைனி என்பவர் டெல்லியில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் காஸா வரை தனது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் பயணம் செய்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இவர் பயணம் செய்துள்ள தூரம் 1,900 கிலோ மீட்டர். இதற்காக இவர் செலவிட்ட தொகை தான் ஹைலைட். 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே இந்தப் பயணத்தில் செலவு செய்த தொகை. கிட்டத்தட்ட ஒரு கிமீக்கு ஒரு ரூபாய் வரை மட்டுமே செலவு செய்துள்ளார்
இந்த அளவுக்கு செலவு குறைந்ததற்கு முக்கியக் காரணம், எலெட்ரிக் கார் என்பதால் தான். டாடா நெக்ஸான் எலெட்ரிக் கார் தான் தற்போது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்.
இந்த காருக்கு போட்டியாக எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா ஆகியவை சந்தையில் இருந்தாலும் நெக்ஸான் விலையில் எந்த காரும் இல்லை.
13.99 லட்சம் முதல் 16.85 லட்சம் ரூபாய் விலையில் டாடா நெக்ஸான் சந்தையில் கிடைக்கிறது.
இதேபோல், இதன் பேட்டரியும் தனித்தன்மை கொண்டது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியுமாம். இந்த அளவுக்கு நடைமுறையில் இல்லையென்றாலும், 240-250 கிலோ மீட்டர் வரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணம் செய்ய முடிகிறது என பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அனைத்து எலெக்ட்ரிக் காரையும் ஒரு முறை சார்ஜ் செய்ய 3 முதல் 9 மணிநேரம் அளவுக்கு நேரம் ஆகிறது என்பது பயனர்கள் மத்தியில் கவலைக்குரிய விஷயமாக இருந்துவந்தது.
இந்தநிலையில், இந்த குறையை போக்க சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஏபிபி (ABB) என்ற பொறியியல் நிறுவனம் விரைவாக சார்ஜ் செய்யும் கருவியை உருவாக்கியிருக்கின்றது. டெர்ரா 360 மாடுலர் (Terra 360 modular) என்ற சார்ஜரை பிரத்யேகமாக வடிமைத்து இருக்கிறது.
இதன்மூலம் எந்தவிதமான எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் வெறும் 15 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கருவியின் வாயிலாக வெறும் 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் குறைந்தது 100 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய அளவுக்கு சார்ஜ் செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனை முயற்சியில் உள்ள இந்த சார்ஜர் விரைவாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.