ஒரு முறை சார்ஜ் செய்து 50கிமி செல்லலாம்: எலக்ட்ரிக் பேட்டரியில் இயங்கும் பைக் உருவாக்கிய இளைஞர்!
பெட்ரோல் விலையேற்றம் பர்சின் பணவீக்கத்தை குறைப்பதனால் பொருளாதார கவலையின்றி பைக்கை ஓட்டிச் செல்ல எலக்ட்ரிக் பேட்டரியில் இயங்கும் என்ஜினை வடிவமைத்து தனித்துவமான தீர்வை கண்டறிந்துள்ளார் எலக்ட்ரானிக் கடை உரிமையாளரான குரபதி வித்யா சாகர்.
விண்ணை முட்டும் பெட்ரோல் விலையேற்றம் வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் பட்ஜெட்டில் பாரத்தை கூட்டியுள்ளது. பல கிலோ மீட்டர்கள் பயணித்து பணிக்குச் செல்பவர்கள் செய்வதியாது திகைத்துப் போய் இருக்கின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஜன்கோனில் வசித்து வரும் குரபதி வித்யாசாகரும் இதற்கு விதிவிலக்கல்ல. சொந்தமாக எலக்ட்ரானிக் கடை நடத்தி வரும் இவர், தன்னுடைய வீட்டில் இருந்து கடைக்கு தினசரி 8 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டும் என்பதனால் பைக்கில் சென்று வருகிறார்.
குரபதி நாள் ஒன்றிற்கு ரூ.200 பெட்ரோலுக்கு மட்டுமே செலவு செய்கிறார். கொரோனா பெருந்தொற்றால் அவரின் வருமானம் பாதிக்கவே குடும்பம் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது.
குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்கே பணம் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், பெட்ரோலுக்கு தனியாக பணம் செலவிட முடியாத சூழலில் சிக்கிக் கொண்டார். பயணத் தேவைக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு அவருக்குள் இருந்த கண்டுபிடிப்பாளர் கைகொடுத்து உதவி இருக்கிறார்.
தன்னுடைய பைக்கை மறுவடிவமைக்க வேண்டும் என்ற கட்டாயம் வைராக்கியமாக, வித்யா சாகர் தன்னுடைய 15 ஆண்டுகால பழமையான பஜாஜ் மோட்டார் பைக்கில் வழக்கமான பேட்டரியை எப்படி பொருத்தலாம் என்று திட்டமிடத் தொடங்கி, என்ஜினை பேட்டரியுடன் செயல்படுமாறு மாற்றுவதற்கான பணிகளைத் தொடங்கினார்.
இந்த முயற்சியில் இறங்கியதுமே அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் பைக் அடக்க பேட்டரியை மேம்படுத்தி தன்னுடைய பைக்கை மறு சார்ஜ் செய்து கொள்ளும் வசதிகளுடன் கூடிய இரு - சக்கர வாகனமாக மாற்றியுள்ளார்.
”டிவி மெக்கானிக்கான வித்யாசாகர், ஆன்லைனில் ரூ.7,500க்கு மோட்டார் ஒன்றை வாங்கி இருக்கிறார், பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக புதிய என்ஜினை பைக்கில் பொருத்தி அதனை நான்கு 30 Ah-திறன் கொண்ட பேட்டரிகளுடன் இணைத்து இ பைக்கை கண்டுபிடித்ததாக,” நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறி இருக்கிறார் வித்யாசாகர்.
நண்பரின் உதவியுடன் பெட்ரோல் டேங்க் இருந்த இடத்தில் எரிசக்தியை இயந்திர சக்தியாக மாற்றும் கன்வெர்ட்டரை பொருத்தி இருக்கிறார். இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் என்னவெனில், இதில் அதிகபட்சம் மணிக்கு 50 கிலோமீட்டர் செல்லலாம் மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் முழுமையாக 70 கிலோமீட்டர் பயணிக்கலாம்.
பேட்டரிக்கு சார்ஜ் போட ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10 மட்டுமே செலவாகிறது. இது மட்டுமல்ல, இந்த பேட்டரியை சோலார் சக்தி மூலமும் சார்ஜ் செய்யலாம். மற்றொரு ஆச்சரியமான அம்சம் என்னவெனில் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் போதுமானது, ஆனால் பைக் இயங்கத் தொடங்கியதும் தானாகவே சோலார் சக்தியில் சார்ஜ் செய்யத் தொடங்கிவிடும்.
மொத்தமாக ரூ.20,000 செலவு செய்து மறுவடிவமைக்கப்பட்டுள்ள பைக்கால் மாதந்தோறும் ரூ.3,000 மிச்சமாகிறது என்றும் தற்போது கிலோ மீட்டருக்கு ரூ.0.2 செலவிலேயே தன்னால் பைக்கில் பயணிக்க முடிவதாகச் சொல்கிறார் வித்யாசாகர்.
பெட்ரோலுக்கு மாற்றாக இந்த இ-பைக்கை கண்டுபிடித்தன் முக்கிய நோக்கம் பற்றி கூறிய இவர்,
“பெருந்தொற்றிற்கு பிறகு பலரும் டோர் டூ டோர் சேவையையே விரும்புவதால் பைக்கை அதிகம் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. பெட்ரோல் விலை கட்டுப்படியாகாத நிலையில் மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் பைக்கை நானே வடிவமைத்தேன்,” என்கிறார் வித்யாசாகர்.
தகவல் உதவி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தொகுப்பு: கஜலட்சுமி