உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் உங்கள் குடும்பத்தின் 'காப்பான்' - டெர்ம் இன்ஷூரன்ஸ்
அந்தக் குடும்பத்தைப் பற்றி அறிந்த உற்றார் - உறவினர்கள் 'உச்'சுக்கொட்டியபடி முதலில் யோசித்த ஒரே விஷயம்: இனிமே இந்தக் குடும்பத்தோட கதி அதோகதிதான்...
அது ஓர் அட்டகாசமான திரைப்படம். ஹீரோவின் போராட்டம்தான் திரைக்கதை. மனநிலை சரியில்லாத மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரண்டு பிள்ளைகள். இவர்களின் பிரட்வின்னரான அந்த நாயகன் கிடைத்த பணிகளைச் செய்து சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பவன்.
ஒருநாள் அந்தப் பேரதிர்ச்சி செய்தி அவனுக்குக் கிடைக்கிறது. நொறுங்கிப் போனான். செய்வதறியாது திணறினான்.
அப்படி என்ன செய்தி?
மரணம் குறித்த செய்தி. யாருடைய மரணம் குறித்தது?
வேறு யார்... அந்த நாயகனுடையதுதான்.
ஆம், "அவனுக்குத் தீராத கடுமையான நோய். மூன்றே மாதங்களில் மரணம் உறுதி" என்று மருத்துவர்களால் நாள் குறிக்கப்படுகிறது.
அவனுக்குத் தன் உயிர் போகப்போவதைப் பற்றி துளியும் கவலையில்லை. மாறாக, தன் குடும்பத்தை இனி யார் காப்பாற்றுவார்? தன் குடும்பத்துக்கு இனி தேவைப்படும் பொருளாதாரத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது?
இப்படியான கேள்விகளால் மனம் நோகும் அந்த நாயகன் சுதாரிக்கிறான். தன்னைத் தானே உத்வேகப்படுத்துகிறான். தன் பிள்ளைகள் கொஞ்சம் பெரியவர்களாகும் வரை அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தை விரைந்து சம்பாதிக்க முடிவு செய்கிறான். அதற்காக பல வழிகளை நாடுகிறான். ஓடுகிறான்...
இறுதியில், எதிர்பார்த்ததுபோலவே போதுமான தொகை தயாரான பின்பு, அந்தத் தொகை மூலம் தன் குடும்பம் காக்கப்படும் என உறுதி செய்துகொள்ளும்போது அவனது உயிர் பிரிகிறது.
அந்த நாயகனின் மரணப் படுக்கையில் பெரும் நிம்மதி விரவிக் கிடந்தது. படம் முடிந்தது.
இப்போது எதற்காக இந்தப் படக்கதை என்று கேட்கிறீர்களா?
இந்தக் கேள்வியை கேட்கக் கூடிய உங்களது சம்பாத்தியத்தை நம்பியே உங்கள் குடும்பமோ, உறவுகளோ இருக்கலாம். உங்களது தின, வார, மாத, வருட சம்பாத்தியம்தான் அவர்களுக்கான வாழ்வாதாரமாகவும் இருக்கலாம்.
'ஒருவேளை நாளையே நீங்கள் இல்லாமல் போய்விட்டால், அவர்களது கதி?'
இந்தக் கேள்வி, ஆன்மிகம் ஆர்வமுள்ளவர்களுக்கு அபசகுனமாகத் தெரியலாம், உளவியல் அறிந்தவர்களுக்கு பெசிமிசத்தின் உச்சமாகத் தெரியலாம். ஆனால், யதார்த்தமாக யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்வி நம் நிம்மதிக்கு வித்திடும் அலெர்ட் ஆக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
கோவையைச் சேர்ந்த நகுல், பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். அவரது மாதச் சம்பளம் 70,000 ப்ளஸ். தனிநபர் கடன் இ.எம்.ஐ, வீட்டுக் கடன் இ.எம்.ஐ, நகைக்கடன் வட்டி போன்றவற்றைத் தாண்டி, தன் பிள்ளைக்கு படிப்பு, வீட்டுக்குச் செலவு, தன் பெற்றோருக்கும், தன் மனைவியின் பெற்றோருக்குமான செலவு என அனைத்தையும் கச்சிதமாக நிர்வகித்து வந்தார். மனைவி ராகவி குடும்ப நிர்வாகி. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
ஒருநாள் பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்த நகுல் விபத்தில் சிக்கினார். அவர் வீடு திரும்பவில்லை. தங்கள் நேசத்துக்குரியவரை இழந்துவிட்ட சோகத்தில் அந்தக் குடும்பம் கண்ணீரில் தத்தளித்தது.
அந்தக் குடும்பத்தைப் பற்றி அறிந்த உற்றார் - உறவினர்கள் 'உச்'சுக்கொட்டியபடி முதலில் யோசித்த ஒரே விஷயம்: இனிமே இந்தக் குடும்பத்தோட கதி அதோகதிதான்.
ஆனால், நகுல் தன் மனைவி, பெற்றோர் மட்டுமின்றி, தன் மனைவியின் பெற்றோரையும் கவனித்து வந்த நேசக்காரன். இவர்கள் அனைவரின் வாழ்வுமே தன்னை மட்டுமே நம்பியிருந்ததை என்றோ உணர்ந்தவன். தனக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்துவிட்டால், தன் குடும்பம் பொருளாதார நெருக்கடியால் தவிக்கக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன் கூடிய பாசிட்டிவ் சிந்தனையுடன் யோசித்தவன்.
இதோ, இப்போது நகுல் இல்லை. ஆனால், நகுலின் பொருளாதார சப்போர்ட்டில் முன்புபோலவே அவனது குடும்பம் பாதுகாப்புடன் வாழ்க்கையை நடத்துகிறது.
இது எப்படி நகுலுக்கு சாத்தியமானது?
ஆம், டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance)
நகுல் தனக்குத் திருமணமான கையோடு, தனது 25 வயதில் ரூ.1 கோடி மதிப்பிலான 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுத்திருந்தார். அவர் மாதம் தோறும் செலுத்தி வந்தத் தொகை ரூ.1000-ஐ விடக் குறைவு. அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்துக்குக் கிடைத்த ரூ.1 கோடி, பிள்ளைகள் பெரியவர்களாகி வேலைக்குப் போகும் வரை உதவிகரமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இப்போது புரிகிறதா டெர்ம் இன்ஷூரன்ஸின் மகத்தான பலன் என்னவென்று?!
பலரிடமும் டெர்ம் இன்ஷூரன்ஸ் குறித்து இருக்கும் தவறான புரிதல்களில் ஒன்று, இது ஒரு குடும்பத்தின் பிரட்வின்னராக இருக்கும் ஆண்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது. இது மிக மிகத் தவறான பார்வை. இன்றைய காலக்கட்டத்தில், ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பைத் தாங்கி நிற்கும் பெண்கள் ஏராளம். கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறபோது, மனைவியும் பிரட்வின்னர்தானே!
அட, இவ்வளவு ஏன்? குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் பெண்களுக்கும் டெர்ம் இன்ஷூரன்ஸ் அவசியம் என்பதை நம் மனதில் இருத்த வேண்டும்?
வீட்டை நிர்வகிப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது, பிள்ளைகளை வளர்ப்பது என இல்லத்தரசிகளின் பணிகளையும், அந்தப் பணிகளுக்கெல்லாம் உரிய மாதச் சம்பளத்தையும் கொஞ்சம் கணக்குப் போட்டுப் பார்த்தால்தான் வேலைக்குப் போய் பணம் ஈட்டும் கணவரைவிட, இல்லத்தை நிர்வகிக்கும் மனைவியின் வொர்த் மிகவும் அதிகம் என்பது புலப்படும்.
ஆக, இந்த டெர்ம் இன்ஷூரன்ஸ் என்பது பெண்களுக்கும் உரியதுதான் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
காப்பீட்டுத் திட்டங்கள் என்பவை நீண்டகால நிதித் திட்டங்களுடன் தொடர்புடையவை என்பதை மறக்காதீர்கள். இதில், 'டேர்ம் இன்ஷூரன்ஸ்', ஒருவரின் இறப்புக்குப் பிறகு, அவரது குடும்பத்தை பொருளாதார ரீதியில் காக்கும் அற்புதமானத் திட்டம். இப்படி ஓர் எளியத் திட்டத்தில் மிகப் பெரிய பலன் வேறெதிலும் இருக்க வாய்ப்பு இல்லை.
குடும்பத்துக்காக வருமானம் ஈட்டுவோர், அந்தச் சம்பாத்தியத்தில் கடன் செலுத்த வேண்டியோர், வீட்டுக்கான கடமைகளைச் செய்ய வேண்டியோர் அனைவருக்குமே மிகக் குறைந்த தவணையில் மிக அதிகப் பாதுகாப்புத் தரவல்லது இந்த டெர்ம் இன்ஷூரன்ஸ்.
நீங்கள் உங்களின் எதிர்காலத்துக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காகவும் செயல்படுத்தி வரும் நிதித் திட்டங்களில் டேர்ம் இன்ஷூரன்ஸும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை, இந்தக் காப்பீட்டுக் காலம் முடிவதற்குள் உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், இந்தக் காப்பீட்டுத் திட்டம் நிச்சயம் உங்களின் குடும்பத்தைக் காலம் முழுவதும் நிதி நெருக்கடிகளில் இருந்து காக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இதர காப்பீட்டுத் திட்டங்களைப் போல் இல்லாமல் டேர்ம் இன்ஷூரன்ஸைக் குறைந்த பிரீமியத்தில் வாங்க முடியும் என்பது தனிச் சிறப்பு. ஆனால், மற்ற காப்பீட்டுத் திட்டங்கள் போல் டேர்ம் இன்ஷூரன்ஸில் காப்பீட்டுக் காலம் முடிந்த பிறகு எந்தவிதமான காப்பீட்டுப் பலனையும் பெற இயலாது. இது, நமக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் மட்டுமே நம் குடும்பத்தைக் காக்க உதவும். ஆனால், இதற்காக நாம் செலுத்தும் ப்ரீமியம் தொகை என்பது மிக மிகக் குறைவானது என்பதை மனதில் கொண்டு, தயங்காமல் இந்தத் திட்டத்தில் இணையுங்கள்.
நம் நாட்டில் 20-க்கும் மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், எந்த நிறுவனம் எத்தனை ஆண்டுகளாக சிறப்புடன் இயங்குகிறது என்பனவற்றைக் கருத்தில் கொண்டு உங்களுக்கான நிறுவனத்தைத் தேர்ந்தெடுங்கள். டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரையில், இணையதளம் மூலமாக வாங்கினால் ஏஜென்ட் கமிஷனைத் தவிர்க்கலாம்.
நம்முடைய நிதித் தேவைகள், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை மனதில்கொண்டு, ப்ரீமியம் தொகையை முடிவு செய்யுங்கள்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் தொடர்பான பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் மறைக்கக் கூடாது. இவற்றை அடிப்படையாகக் கொண்டும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் நிர்ணயிப்பார்கள். இந்தத் தகவல்களை சரியாகத் தராமல் மறைத்தால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் சமயத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்.
ஒருவர் எவ்வளவு சீக்கிரமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்குகிறாரோ, அவ்வளவு நல்லது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பிரீமியம் தொகையானது, பாலிசி எடுப்பவரின் வயது - உடல்நிலையைப் பொறுத்து மாறுபாடுகள் கொண்டிருக்கும். நீங்கள் விரைவாக எடுக்கப்படும் பட்சத்தில், உங்களது ப்ரீமியம் தொகை வெகுவாகக் குறையலாம்.
ஆக, உங்கள் குடும்பத்துக்கான காப்பான் ஆக விளங்கக் கூடிய டெர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை நாடுவதற்கு மறந்துவிடாதீர்கள்.
தொகுப்பு- ப்ரியன்