‘இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்க அனுமதிக்காவிட்டால் தொழிற்சாலை அமைக்கமாட்டேன்’ - எலான் மஸ்க்!
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்க எலான் மஸ்க் நிபந்தனைகள் விதித்துள்ளார்.
கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது மின்சார வாகனங்களை தயாரித்தால், அந்த நிறுவனத்துக்கான பலன் கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை தொடங்குவது குறித்த தனது நிலைபாட்டை விளக்கி இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டர் பயனர் மதுசூதன் என்பவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், ’டெஸ்லாவை பற்றி என்ன? டெஸ்லா எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரு ஆலையை அமைக்குமா?’ என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க்,
"முதலில் கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதி வழங்கப்படாத எந்த ஒரு இடத்திலும் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்காது," என தெரிவித்துள்ளார்.
அதேபோல், மற்றொரு ட்விட்டர் பயனரான பிரனய் பத்தோல் என்பவர், ’இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஒப்புதல் பயன்பாடு குறித்து ஏதேனும் அப்டேட் இருக்கிறதா’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு எலான் மஸ்க்,
"அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என பதிலளித்துள்ளார்.
முன்னதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து கூறுகையில், மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் மின்சார வாகனங்கள் தயாரித்தால், அந்த நிறுவனத்திற்கு பலன் கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
”மேலும், டெஸ்லா மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க தயாராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியாவுக்கு வாருங்கள், உற்பத்தியை தொடங்குங்கள்., இந்தியா ஒரு பெரிய சந்தை, அவர்கள் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதியும் செய்யலாம், ஆனால் சீனாவில் இருந்து கார்களை இறக்குமதி செய்யக் கூடாது,” என கட்கரி தெரிவித்தார்.
ஆனால், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரில்., இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள், அதிக இறக்குமதி வரிகள் குறித்து பெரிதளவு வருத்தம் தெரிவித்தார். அதில்,
“இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரிகள் அதிகமாக இருக்கிறது, இதன்மூலம் கார்கள் வாங்க முடியாத சூழலை ஏற்படுத்தும் என ட்வீட் செய்திருந்தார். மேலும், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் வெற்றிப் பெற்றால் மட்டுமே, ஒரு தொழிற்சாலை உருவாக வாய்ப்புள்ளது,” என மஸ்க் இந்த ஆண்டு தொடக்கத்தில் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
டெஸ்லா மின்சார கார்களுக்கு என உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் வரவேற்பு இருக்கிறது. கச்சா எண்ணை விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
அதேபோல், காற்றுமாசு உள்ளிட்ட பல்வேறு காரணிகளிலும் மின்சார வாகனம் விதி விலக்காக இருக்கும். இந்த நிலையில் சிறந்த வடிவமைப்பு மற்றும் நீடித்த பேட்டரி சார்ஜிங் ஆயுள் கொண்ட டெஸ்லா மின்சார கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதோடு டெஸ்லா உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைக்கும்பட்சத்தில், ஏற்றுமதி வரி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இருக்கும் என்பதே இந்தியாவின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
தமிழில்: துர்கா