உழவர்களின் உற்ற நண்பன் ‘உழவன் ஆப்’- புதிதாக ஏகப்பட்ட பயனுள்ள வசதிகள் அறிமுகம்!
பயிர்களின் வளர்ச்சியையும், அதற்கேற்ப இட வேண்டிய உரங்கள் உள்ளிட்ட தகவல்களையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது..
வானத்தைப் பார்த்து பருவநிலை அறிந்து பயிர் செய்த காலம் மலையேறி விட்டது. தற்போதெல்லாம் அடை மழை காலத்தில் அக்னி சுட்டெரிக்கிறது. கடும் கோடையில் மழை குளிர வைக்கிறது. இதனால் பருவ காலப் பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே விஞ்ஞானத்தின் துணை கொண்டு விவசாயம் செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அப்படியாக விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் ’உழவன் ஆப்’ எனப்படும் உழவன் செயலி. விவசாயிகள் வேளாண்மை நலத் திட்டங்களைப் பெறும் வகையில் இந்த உழவன் செயலி (uzhavan app) கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.
ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு தகவல்களை மட்டுமே அளிக்கக்கூடியதாக இருந்த இந்தச் செயலி, தற்போது அவர்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஐ-போன் இரண்டிலும் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதுவரை சுமார் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“காலநிலைக்கேற்ப எந்த மண் வகைக்கு எந்த விதையைப் பயன்படுத்தலாம்? அது எங்கே கிடைக்கும்? பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இந்த செயலியில் சோதனை முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
நமது மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படிப்பட்ட மண் உள்ளது, அதில் என்ன மாதிரி பயிர்களை பயிரிடலாம் என்ற நீண்ட எங்களது ஆய்வுக்கு பின்னரே இத்தகவல்களை நாங்கள் இதில் சேர்த்துள்ளோம்” என்கிறார் வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி.
சமீபத்தில் தான் இந்த செயலி மூலம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள மற்றொரு திட்டம் செயல்படுத்தப் பட்டது. அதாவது உழவன் செயலியுடன் ஜெபார்ம் என்ற செயலியும் இணைக்கப்பட்டது. அதன்மூலம் விவசாயக் கருவிகள் தேவைப்படுவோர், அவற்றை வாடகைக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த வசதி மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விவசாயிகள் நேரடியாகப் பயன்பெற முடியும் என்பதால் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. டிராக்டர்கள் வைத்திருப்போர் அவற்றை இந்த செயலி மூலம் ஏழை விவசாயிகளுக்கு வாடகைக்குத் தருகின்றனர்.
இதுவரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த செயலி மூலம் தங்கள் இயந்திரங்களை வாடகைக்குத் தர சம்மதித்துள்ளனர். சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான இயந்திரங்கள் இல்லாத விவசாயிகள் இதில் பதிவு செய்துள்ளனர்.
மிகக் குறுகிய காலத்திலேயே இந்த செயலி இணைப்பு மூலமாக 12,100 ஆர்டர்கள் வந்திருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் இரண்டு கோடியே 19 லட்சம் என்றும் கூறுகிறார் ககன் தீப் சிங் பேடி.
விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் இந்த உழவன் செயலியை உருவாக்கியது ஐடி துணை இயக்குநர் பி.வெங்கடாசலபதி மற்றும் வேளாண் துறை அதிகாரி பி.ஆர்.சரவணன் ஆகியோர் தான். கூகுள், ஆப்பில் இச்செயலிக்கு 4.4 ரேட்டிங் தரப்பட்டுள்ளது.இந்தச் செயலியில் வானிலை அறிக்கைகள், விவசாயப் பொருட்கள் விலை நிலவரம், மானியம், பயிர் காப்பீடு, கடன் மற்றும் நிவாரணாம் உள்ளிட்ட தகவல்களையும் பெற முடியும்.
இது தவிர அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை வாங்கிட விரும்பும் விவசாயிகள் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது அரசு. இந்த செயலியில் பதிவு செய்வோருக்கு மாவட்டம், வட்டம் வாரியாக முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வேளாண் இயந்திரங்கள் வாங்கிட மானியம் வழங்கப்படுமென கூறப்படுகிறது.
இந்தச் செயலியை விவசாயிகள் மட்டுமின்றி, அனைவரும் பதிவிறக்கம் செய்துக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள், விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் தங்களது பகுதிக்கு வருகைதரும் நாள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக் கொண்டு, அவற்றை படிப்பறிவில்லாத விவசாயிகளுக்கு தெரியப் படுத்தலாம்.
வேளாண்மைத் திட்டங்களைப் பெறுவதற்கு உழவன் செயலி கட்டாயம் என்ற நிலை ஏற்படுவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இந்தச் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது, எப்படி செயல்படுத்துவது, அதிலுள்ள விவரங்களை எவ்வாறு பெறுவது என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரிவதில்லை.
எனவே, இதுதொடர்பாக அரசு போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, இந்தச் செயலியின் நோக்கம் முழுமையாக விவசாயிகளைச் சென்றடையும் என்பதே சமூகநல ஆர்வலர்களின் கருத்து.
செயலி பதிவிறக்கம் செய்ய: உழவன் ஆப்