இருமுறை புற்று நோயை வென்ற பெண்ணின் திருமணக் கோல புகைப்படங்கள்...
தங்களின் உடலழகை எப்படி இருந்தாலும் ஒவ்வொருவரும் ரசித்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அழுத்தமான செய்தியை இவரின் படங்கள் வெளிக்காட்டியுள்ளது.
'Body Positivity' அதாவது நம் உடல் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது.
பெண்ணென்றால் நீண்ட கருமையான முடி, அழகிய கண்கள், அதற்கு மை என பல அழகுக் கோட்பாடுகள் பல தசாப்தங்களாக தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கின்றன. உண்மையான அழகு வெளித் தோற்றத்தில் அல்ல மனதில் இருக்கின்றது என தற்பொழுது பல விழிப்புணர்வு பிரச்சாரங்களும் சமூக தளத்தில் பரவி வருகிறது.
அப்படி ஓர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து பல பெண்களின் அச்சத்தை போக்கியுள்ளார் இரண்டுமுறை புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வைஷ்ணவி பூவேந்திரன்.
புற்று நோய்க்கான சிகிச்சையின் போது முடியை இழந்த வைஷ்ணவி தனது அழகிய மொட்டையுடன் கல்யாணப்பெண் போல் அலங்கரித்து போட்டோ ஷூட் செய்துள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலம் தேறி வந்தாலும் சிகிச்சைக்குப் பிறகு உடல் அளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்காக சோர்ந்துவிடாமல் அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்பதற்காக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன வலிமை கொடுக்கும் நோக்கில் “போல்ட் இந்தியன் பிரைட்” என்னும் தலைப்பில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மலேசியா வாழ் தமிழரான வைஷ்ணவி, மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகளுக்குப் பின் குணமடைந்தார். புற்று நோயை வென்றுவிட்டோம் என நிம்மதியாக இருந்த அவருக்கு அடுத்த 5 வருடத்திற்குள் புற்று நோய் மீண்டும் வந்து கல்லீரல் மற்றும் முதுகெலும்பை பாதித்துவிட்டது. அதன் சிகிச்சைக்காக கீமோதெரபி எடுத்துக்கொண்ட வைஷ்ணவி தன் கூந்தலை இழந்தார்.
“இந்த சிகிச்சை என் அழகை எடுத்துக்கொண்டதோடு என் மன வலிமையையும் குறைத்துவிட்டது. சிறு வயதில் இருந்தே என் திருமணத்தை பற்றிய கனவுகள் கண்டிருந்தேன் அவை எல்லாம் உடைந்தது. என்னைப்போல் பலர் நம்பிக்கையை இழந்து திருமணத்தை தவிர்த்து வருகின்றனர்...”
என்று எழுதி இப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இப்பதிவை செய்திருந்தார் வைஷ்ணவி.
தனக்கு மகுடம் போல் இருந்த கூந்தலை இழந்ததால் இனி தான் அழகில்லை என நொந்து போயுள்ளார் வைஷ்ணவி. ஆனால் இரண்டு முறை புற்று நோயை விரட்டிய இவருக்கு இந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வர சில கால அவகாசமே தேவைப்பட்டது.
“நம்மிடம் உள்ளதை நாம் ஏற்று நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். நம்மை நாம் முதலில் ஏற்றுக்கொண்டு, இருப்பதை பாராட்ட வேண்டும்,” எனவும் அப்பதிவில் தெரிவித்திருந்தார் வைஷ்ணவி.
இவரது இந்த பதிவு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி தங்கள் அழகை சந்தேகப்படும் அனைத்து பெண்களுக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.