தாகத்துடன் இருப்போருக்கு குடிநீர் வழங்கி தாகத்தைத் தணிக்கும் ஆட்டோ ஓட்டுநர்!
ஹைதராபாத்தின் ஃபலக்னுமா பகுதியில் வசிக்கும் ஷேக் சலீம் மூன்றாண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் முயற்சியைத் துவங்கினார்.
கோடைக்காலம் துவங்கி வெப்பம் அதிகரித்து வருகிறது. வெளியில் செல்லும் பலர் இந்த வெயிலில் குடிநீர் கிடைக்காமல் தாகத்தில் தவிக்கின்றனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 45 வயது ஷேக் சலீம் இவ்வாறு தாகத்துடன் தவிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்குகிறார். இவர் தனது ஆட்டோவில் தண்ணீர் எடுத்துச் சென்று அவர்களது தாகத்தைத் தணிக்கிறார். ஹைதராபாத் மட்டுமல்லாது செகண்டிராபாத் பகுதியில் இருப்போருக்கும் உதவுகிறார்.
ஷேக் தினமும் 20 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் இரண்டு வாங்கி அதை தனது வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள வடிகட்டியில் கொட்டிவிடுகிறார்.
”ஹைதராபாத் மக்களுக்கு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்து தண்ணீர் விநியோகித்து வருகிறேன். அனைவருக்கும் உணவும் தண்ணீரும் கொடுக்கவேண்டும் என்று குரான் போதிக்கிறது. நீங்கள் எதை வழங்கினாலும் அதே அளவு உங்களிடம் திரும்ப வரும்,” என்று ஷேக் பகிர்ந்துகொண்டதாக ’டெக்கான் க்ரோனிக்கல்’ தெரிவிக்கிறது.
ஷேக் ஒவ்வொரு காலையும் 9 மணிக்கு தனது வீட்டை விட்டு கிளம்பி பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நகரை வலம் வருகிறார். செல்லும் வழியில் தாகத்தில் தவிப்போருக்கு தண்ணீர் விநியோகிக்கிறார். மாலை ஆறு மணி வரை இவ்வாறு பயணித்தவாறே போக்குவரத்து காவலர், வழிப்போக்கர்கள், பயணிகள் என அனைவரின் தாகத்தையும் தணிப்பதாக ’தி ஹான்ஸ் இண்டியா’.
ஹைதராபாத்தின் ஃபலக்னுமா குடியிருப்புவாசியான ஷேக் ஃபாத்திமா நகரில் தனது மனைவியுடனும் நான்கு குழந்தைகளுடனும் வசிக்கிறார். 1993-ம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டுகிறார்.
இந்த முயற்சியைத் துவங்கியதற்கான காரணத்தைக் கேட்கையில்,
"கோடைக்காலத்தில் நான் ஆட்டோ ஓட்டிச் செல்லும்போது எனக்கு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனால் தண்ணீர் போர்வெல்லில் மட்டுமே கிடைக்கும். குடிக்கமுடியாத அளவிற்கு தண்ணீர் சூடாக இருக்கும். தண்ணீர் எடுக்கச் செல்வதற்காக பயணிகளை விட்டுச் செல்லமுடியாது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
”அப்போதிருந்து என்னுடைய ஆட்டோவில் தண்ணீர் வைக்கத் துவங்கினேன். என்னைப் போன்றே மற்றவர்களும் கஷ்டப்படாமல் இருக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டேன்,” என குறிப்பிட்டதாக Siasat தெரிவிக்கிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA