கண்ணுக்கு எட்டியதூரம் பச்சைபசேல், சம்மரிலும் ஜிலுஜிலு காற்று; நாற்புறமும் வயலால் சூழப்பட்ட ஒரு உணவகம்!
மஞ்சள் வெயில்பரவிய வயல்வெளி, தென்னைகளின் தென்றல் காற்று, வாய்க்காலில் ஓடும் நீரினிசை, நெற்பயிர் வாச வசீகரத்தில் மயங்கி நிற்கும் தும்பிகள், மனதை மயக்கும் மண்வாசனை, அங்கிட்டும் இங்கிட்டுமாய் அலையும் குயில்களும், கொக்குகளும், பிளஸ் கொஞ்சம் ராஜா சார்... என அமைந்த பகுதியில் மண்குவளையில் ஒரு மசாலா டீ பருகினால்...?! அதுவே நிகழ்கால சொர்க்கம்! அச்சொர்க்கத்தின் வாசற்படியை அடைய, முதலில் வேலூரில் இருந்து 12 கிலோ மீட்டரும், காட்பாடியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ள அம்முண்டி கிராமத்தை அடையவேண்டும். ஏனெனில், அங்கு தான் இத்தனை எழில்மிகு அனுபவத்தை தரக்கூடிய ‘ரிதம் ஃப்ரீசி ஹவுஸ்’ (Rhythm Freezy house) எனும் அழகிய உணவகம் அமைந்துள்ளது.
ஆம், வயல்வரப்புகளுக்கு மத்தியில் ரெஸ்டாரண்ட்டை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு அமைதியான உணர்வை ஏற்பட வைக்கிறார் நிதிஷ் குமார். விவசாயக்குடும்பத்தை சேர்ந்த நிதிஷின் அம்மா சிறுவயதிலே இறந்துவிட, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத போது, கேட்டரிங் படிக்க முடிவுசெய்துள்ளார். காரணம், ஓட்டலில் வேலை செய்தால், மூன்றுவேளையும் நிறைவான உணவு உண்ணலாம் என்ற எண்ணம். அந்த படிப்போ, இன்று மற்றவர்களுக்கு தானம் செய்யும் வகையில் அவரை வளர்த்து அழகு பார்த்துள்ளது.
“என் சின்னவயசில அம்மா இறந்துட்டாங்க. அதனால, சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். பன்னிரெண்டாவது முடிச்ச அப்பறம் எனக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமாகிருச்சு. பேசிக்கா, நான் டூ வீலர் மெக்கானிக். அப்புறம், இந்த கேட்டரிங் படிச்சா நல்லா சாப்பாடுலாம் கிடைக்கும், ஓட்டலுக்கு போனா மூணு வேலையும் நல்லா சாப்பாடலாம்னு கேட்டரிங் படித்தேன். நான் நினைச்ச மாதிரியே ட்ரையினிங் அப்போலாம் நல்ல சாப்பாடு கிடைச்சது. ஒரு 15 கிலோ வெயிட் ஏறுச்சு. எனக்கு பிடிச்சதுலாம் நானே சமைச்சு சாப்பிடும்போது ஒரு சந்தோஷம் கிடைச்சது. அப்படியே வெளிநாடுகளுக்கு சென்று ஓட்டலில் பணிபுரிய ஆரம்பித்தேன்,” என்கிறார் நிதிஷ்.
மலேசியாவில் 2 ஆண்டுகள், தாய்லாந்தில் 2 ஆண்டுகள், சிங்கப்பூரில் 6 மாதம் என வெளிநாடுகளில் பணிபுரிந்தவர், நாடு திரும்பி வேலூரிலுள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் பணிபுரிந்துள்ளார். மீண்டும் வெளிநாட்டை நோக்கிச் செல்லாம் என்ற நிலையில், அப்பாவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட அத்திட்டத்தை கைவிட்டார். அடுத்த என்ன பண்ணலாம் என்ற சிந்தனையில் சொந்த ஊரில் சொந்த நிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ரெஸ்டாரண்ட்டை தொடங்கியுள்ளார்.
“எல்லாரும் மாதிரி தான் வெளிநாட்டுக்கு போன, கைநிறைய சம்பாதித்து பணக்காரராகிலாம்னு லூசு மாதிரி அங்க போயிருந்தேன். ஆனா, உண்மையிலே இந்தியாவிலே நம்மளால சம்பாதிக்க முடியும். அங்க மனிஷனோட உழைப்பை ஊறிஞ்சி எடுத்துவிடுகின்றனர். திரும்பி லண்டன், அமெரிக்கா போயிரலாம்னு நினைச்ச அப்போ தான், அப்பாவுக்கு உடம்புமுடியாம போச்சு. நிலமும் சரியாக கவனிக்காமல் கிடந்தது. எனக்கு விவசாயமும் பார்க்கனும். அதே சமயம், படித்த படிப்புக்கான வேலையும் செய்யனும்.
அப்படின்னா, அது நம்ம நிலத்திலே பண்ணா தான் உண்டு. ஏன்னா, சிட்டிக்குள்ள வைக்கிறேன்னு 10கி.மீ தள்ளி வச்சு. நிலத்தையும் பார்க்க முடியாம அலைஞ்சிட்டு இருக்க முடியாது. நிலமும் ரோட்டு பக்கத்துல இருக்குன்றனால எதையும் எதிர்பார்க்காம துணிந்து இறங்கினேன்” என்றார் அவர்.
தென்னை மரங்கள் சூழ வயலுக்குள் ரெஸ்டாரண்ட் என்று திட்டத்தை தொடங்கினாலும், கட்டிடம் கட்ட வந்த மேஸ்திரி தொடங்கி 100ல் 99பேர், காசை விரயமாக்குகிறான், இங்கலாம் வந்து யாரு சாப்பிட போறாங்க என்று நெகட்டிவ் கருத்துகளையே முன்வைத்துள்ளனர். ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத நிதிஷ், அவருடைய கனவில் வடிவமைத்து வைத்திருந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு வடிவம் கொடுத்துள்ளார். வாட்டர் பவுண்டைன், மஞ்சுகூரையின் கீழ் இருக்கைகள், மண்குவளைகளில் தேநீர், மரமட்டைகளில் தட்டு என பார்த்து பார்த்து பக்குவமாய் வடிவமைத்துள்ளார்.
“சொன்னா நம்ப மாட்டீங்க. இந்த ரெஸ்டாரண்ட்டை ஓபன் செய்வதற்கு முன்பாகவே மக்களிடம் ரீச் கிடைச்சுருச்சு. கட்டிடம் எழுப்புகையிலே அந்த வழியா போறவங்க வந்து உட்கார்ந்து செல்பி எடுத்திட்டு போவாங்க. ரெஸ்டாரண்ட்டை துவங்கிய முதல் நாள், 100பேர் கிட்ட வந்திருந்தாங்க. அதில பாதி பேருக்கு இது ரெஸ்டாரண்ட்னு கூட தெரியாது. வந்த விருந்தாளிகளுக்கு டீ, காபி, ஜூஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தோம். அப்போ இருந்தே ஓரளவுக்கு பிசினஸ் இருந்து கொண்டே இருக்கிறது. எங்க ரெஸ்டாரண்டில் மாசலா டீ பேமஸ். அதுவும் அந்த மண்குவளையில் சாப்பிடும்போது எக்ஸ்ட்ரா டேஸ்ட்,” எனும் அவர் ஓட்டலின் பிரபலத்துக்கு முழுக்க காரணம் அவர்களது கஸ்டமர்களே என்கிறார்.
“கஸ்டமர்களுக்கு திருப்தியான உணவும், உபசரிப்பும் கிடைத்து சந்தோஷமாகினாலே போதும். அவர்களே நமது விளம்பரங்கள். ஒருத்தர் 10 பேருக்கு நம் கடையைப் பற்றி அறிமுகம் செய்து வைப்பார். தவிர, பக்கத்திலே ஒரு காலேஜ் உண்டு. அந்த ஸ்டூடன்ஸ் பர்த்டே பார்டிலாம் கொண்டாடுவாங்க.
என்னிடம் ஒரு 200 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஒரு டீ குடித்தாலே போதும். 6லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கினேன். மாஸ்டரும் நான் தான் என்பதால், ரூ15,000 மிச்சமாகிறது. எப்படி பார்த்தாலும் மாதம் 30,000 வருமானம் வரும். ஊருக்கு வெளியே இருக்கிற ரெஸ்டாரெண்ட் என்பதால், மெனு கார்டு நிரம்ப உணவுவகைகளை சமைத்து வைக்க முடியாது. 10ஸ்னாக்ஸ், காபி, டீ, ஜூஸ், ஐஸ்கீரிம், ப்ரைடு ரைஸ்னு புத்துணர்வு பெற்றுக்கொள்வதற்கான அயிட்டங்கள் உண்டு,” என்கிறார் அவர்.
ஆனால், கஸ்டமர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாகவும், பாடல்கள் மீது கொண்ட காதலால், கரோக்கி இசை கருவிகளைக் கொண்டு சமைத்துகொண்டு பாடியும் கஸ்டமர்களை உற்சாகப்படுத்தும் அவரிடம் எதிர்காலத் திட்டங்களை பற்றி கேட்டோம்.
“நாலு பேருக்கு அமைதியான சூழலில் சமைத்து கொடுத்துட்டு ரிலாக்சா இருக்கலாம்னு தான் இப்படியொரு ரெஸ்டாரண்ட்டை ஆரம்பித்தேன். இது எப்படியோ பேமசாகி என்னையவே பரப்பரப்பாகிட்டாங்க. எனக்கு பைக் டிராவல் ரொம்ப பிடிக்கும். நேபாளம், பூடான், திபெத், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவிலுள்ள 272 பள்ளி கல்லூரிகளுக்கும் பைக்கிலே 38 நாட்கள் தொடர்ந்து 13,112கி.மீ கடந்து சென்று புகைபிடித்தல் தீங்கானது என்ற பிரச்சாரம் செய்துள்ளேன். எப்படியாச்சும் 70 நாடுகளுக்கு சென்றுதிரும்பனும். அது தான் என் ஆசை,” என்கிறார்.
வாழ்வு போகிற போக்கில் அதனுடன் இசைந்து சென்று பிறரையும் மகிழ்வித்து, தானும் மகிழ்வுற்று வாழ்கிறார் நிதிஷ்.