சோற்றுக்கற்றாழையில் இத்தனை வணிக வாய்ப்புகளா? அய்யா இராம. சண்முகம் சொல்வதை கேளுங்க...
200க்கும் மேற்பட்ட உடல் நலப் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஓர் மூலிகை. பேரழகி கிளியோபாட்ரா தன் அழகை மேம்படுத்த பயன்படுத்திய மூலிகை, போர்க்களத்தில் தன் வீரர்களின் காயங்களை குணப்படுத்த மாவீரன் அலெக்ஸாண்டர் பயன்படுத்திய மூலிகை என பல்வேறு பெருமைகளை தன்னகத்தை கொண்டுள்ள மூலிகைதான் சோற்றுக்கற்றாழை.
200க்கும் மேற்பட்ட உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் ஓர் மூலிகை. பேரழகி கிளியோபாட்ரா தன் அழகை மேம்படுத்த பயன்படுத்திய மூலிகை, போர்க்களத்தில் தன் வீரர்களின் காயங்களைக் குணப்படுத்த மாவீரன் அலெக்ஸாண்டர் பயன்படுத்திய மூலிகை என பல்வேறு பெருமைகளை தன்னகத்தை கொண்டுள்ள மூலிகைதான் ’நலம் தரும் நற்குமரி’.
என்ன பேரே விநோதமா இருக்கேன்னு பார்க்குறீங்களா, நலம் தரும் நற்குமரி என்பது வேறொன்றுமில்லை, தமிழகத்தின் மூலைமுடுக்குகளில், சாலையோரங்களில், வாய்க்கால் வரப்பு ஓரங்களில் என ஆங்காங்கே காட்டுச் செடி போல வளர்ந்து சத்தமில்லாமல் சமுதாயத்துக்கு சேவை செய்து வரும் அந்த மூலிகை நம் நாட்டு சோற்றுக் கற்றாழைதான்.
தெய்வீக மூலிகையான நலம் தரும் நற்குமரி குறித்து சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் சோற்றுக் கற்றாழையால் கிடைக்கும் வணிக லாப வழிமுறைகள் குறித்து பல்வேறு பயிற்சிகள் அளித்து வரும் சோற்றுக்கற்றாழை அய்யா இராம.சண்முகம் இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
சோற்றுக் கற்றாழை சிறப்புகள்
வீடுகளின் வாசல்களில் சோற்றுக் கற்றாழையை கட்டித் தொங்க விடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், எதற்கு எனத் தெரியாது.
”பொதுவாக சோற்றுக் கற்றாழை வறட்சி நிலத் தாவரம். அது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சியே வாழும். அவ்வாறு உறிஞ்சும்போது காற்றில் உள்ள கெட்டவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் போன்றவற்றை இது உறிஞ்சி விடுவதால் தூய்மையான காற்று நம் வீடுகளுக்குள் வருகிறது. இதற்காகவே வீடுகளில் சோற்றுக் கற்றாழை கட்டப்படுகிறது,” என எளிமையாக தொடங்கினார் ராம. சண்முகம்.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிறு கிராமத்தில் பிறந்த ராம.சண்முகம் பியூசி படிப்புக்குப்பின் பனியன் கம்பெனிகளில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தொழில் விசயமாக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் போன்ற பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வந்ததால், பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தாகூர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக கொல்கத்தாவில் தங்கி, சாந்தி நிகேதனில் எண்டோலஜி படித்துள்ளார். அப்போது அன்னை தெரஸாவுடன் ஏற்பட்ட அறிமுகத்தையடுத்து அவருடன் தன்னார்வலராக தங்கியிருந்து மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்துள்ளார்.
அப்போது அன்னை தெரஸா என்னிடம் கூறிய வார்த்தைதான் என் வாழ்க்கையே மாற்றி விட்டது.
“நாம் செய்யும் வேலையே மக்கள் சேவையாக இருக்கவேண்டும். Single Man NGO ஆக இருங்கள் என்பார். இதையடுத்து, தமிழகம் திரும்பி, தமிழ் மருத்துவம், பாடல்கள், சித்த மருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்தேன்,” என்றார் ராம. சண்முகம்.
அப்போதுதான் அவர் வாழ்க்கையில் திருப்புமுனை சம்பவமாக மலேசிய மருத்துவர் மகேஷ்வரன் அப்பகுதியில் ஓர் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். முழுக்க முழுக்க வேதிப் பொருள்கள் கலப்பின்றி மூலிகை மருந்துகள், உணவுப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்களை நமது பாரம்பரிய மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரித்து வந்துள்ளார்.
அவரது நிறுவனத்தில் சண்முகம் ஓருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்ததன்மூலம் பல்வேறு இயற்கை மூலிகை மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைத் தெரிந்து கொண்டுள்ளார். அப்போதுதான் இவரின் ஆர்வத்தை பார்த்த மருத்துவர் மகேஷ்வரன் நீங்களும் ஏன் ஏதேனும் ஓர் மூலிகையைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யக்கூடாதென ஊக்குவித்துள்ளார். இதையடுத்து, தொடங்கியதுதான் நலம் தரும் நற்குமரியைப் பற்றிய ராம.சண்முகத்தின் ஆய்வு பயணம்.
இயற்கை அலோ வெரா பயன்படுத்த பயிற்சி
சாதாரணமாக வேலியோரங்களில் வளர்ந்து காணப்படும் இந்த சோற்றுக்கற்றாழை சுமார் 200க்கும் மேற்பட்ட உடல்நலப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் ஓற்றை மூலிகை என்பதை அறிந்து கொண்டேன். இதுகுறித்த விவரங்களைத் தேடித்தேடி படித்தேன். ஆய்வுகள் மேற்கொண்டேன். வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி சோற்றுக்கற்றாழையில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் சோப்பு, அழகு சாதனப் பொருள்கள். ஷாம்பூ போன்றவற்றில் சோற்றுக்கற்றாழையின் உயிர்த்தன்மை அழிந்து வேதிப் பொருள்களின் நச்சு ஆதிக்கமே மேலாங்கி இருந்தது.
எனவே, சோற்றுக்கற்றாழையை அப்படியே பயன்படுத்த ஆய்வுகள் செய்தேன். நிபுணர்கள், வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றேன். பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் சோற்றுக் கற்றாழையை இயற்கை முறையில் அப்படியே சோப்பு, ஷாம்பு மற்றும் அழகு சாதப் பொருள்களாகப் பயன்படுத்த முயற்சித்தேன்.
“நமது உச்சி முதல் பாதம் வரை சோற்றுக் கற்றாழையை அப்படியே பயன்படுத்தும் முறைகளைக் கண்டறிந்து அதனை இன்று ஆயிரக்கணக்கானோருக்கு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்,” என்கிறார்.
மேலும் இவர், ’தோற்றுப் போகாத மாற்றுப் பயிர் சோற்றுக் கற்றாழை’ என்று விவசாயிகளை ஊக்குவித்து சோற்றுக்கற்றாழை நடவு செய்து உற்பத்தி செய்து, அதன் மூலம் லாபம் பெறும் முறைகளை விளக்கி சிறிய, பெரிய அளவில் உற்பத்தி மற்றும் உள்நாட்டு வணிக வழிமுறைகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
மண்ணின் காரத்தன்மையை குறைக்க, பூச்சிக் கொல்லியாக, உற்பத்தி பொருளாக என விவசாயிகளுக்கும் பல்வேறு விதமாக பயிற்சிகளை பிரித்து அளித்து வருகிறார். சோற்றுக்கற்றாழை கன்றுகளை அளித்து, அவை நன்கு வளர்ச்சி பெற்றதும், அவற்றை வாங்கி நுகர்வோருக்கு நேரடியாக விற்பனையும் செய்து வருகிறார்.
பலவிதங்களில் பயன்படும் சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை வெறும் அழகு சாதனப் பொருள்களில் சேர்ப்பதற்கு மட்டும்தான் பயன்படும் என்ற நிலையை மாற்றி சூப், காபி, டீ, பாயாசம், கேக், அல்வா, ஊறுகாய், மைசூர்பாக், குழம்பு, ரசம் என எளிய வகையில் மக்கள் நேரடியாக அவர்களே தயாரிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்தும், சுவையும் உள்ள உணவு வகைகளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை கண்டறிந்து இந்தியா முழுவதும் பயணித்து ஏராளமானோருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறார்..
பல்வேறு தரப்பினருக்குப் பயன்படும் வகையில் பல்வேறு பயிற்சி முறைகளை வடிவமைத்துள்ளேன். விவசாயிகளுக்கு, வியாபாரிகளுக்கு, தொழில் முனைவோருக்கு என தனித்தனியாக பயிற்சி அளித்து வருகிறேன். இதன் மூலம்,
”கார், பைக், தரையைத் தூய்மைப்படுத்தும் திரவம், சோப்பு, ஷாம்பூ, உணவுப் பொருள்கள், என பல்வேறு பொருள்களை தயாரிக்க பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்துள்ளேன். யாருக்கு என்ன மாதிரி தேவை இருக்கிறதோ, அதுபோல என் பயிற்சி முறையை மாற்றி அவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும் வகையில் சோற்றுக்கற்றாழை மூலம் விவசாயத்துக்கு, வீட்டுக்கு, அலுவலகத்துக்கு, உடல் நலத்துக்கு என பிரித்து பல்வேறு முறைகளில் பயிற்சி அளிக்கிறேன்,” என்கிறார்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் சோற்றுக் கற்றாழை கலந்த கிரீம், ஷாம்பூ, சோப்பு என மக்கள் பல்வேறு நச்சுத் தன்மையுடைய வேதிப் பொருள்கள் சேர்ந்த கலவைகளை காசு கொடுத்து வாங்கி, தங்களுக்குத் தாங்களே கேடிழைத்துக் கொள்ளும் முறையை மாற்றி, 1 பைசா கூட செலவில்லாமல் வீட்டிலேயே சோற்றுக் கற்றாழையை வளர்த்து அதனையே முறைப்படி உச்சி முதல் பாதம் வரை பயன்படுத்தலாம்.
உணவுப் பொருள்களாக பயன்படுத்தலாம். ஏன், இதனையே ஓர் தொழிலாகக் கூட செய்யலாம் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் எவ்வித லாப நோக்கமும் இன்றி என் வாழ்நாள் முழுவதும் இந்தியா முழுவதும் பயணித்து லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களுக்கு சோற்றுக் கற்றாழையின் பல்வேறு பயன்கள் குறித்து பயிற்சியும், விழிப்புணர்வும் அளித்து வருகிறேன்.
இதனை மக்கள் புரிந்து கொண்டு நலம் தரும் நற்குமரியை வளர்த்து தங்கள் சொந்த தேவைக்கும், வியாபாரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சோற்றுக் கற்றாழையின் வியாபார பலன்கள், அதில் உள்ள தொழில் வாய்ப்புகள், கிடைக்கும் வருமானம் போன்றவை குறித்தும் அவர் தனது பயிற்சி வகுப்புகளில் தெளிவுபடுத்தி வருகிறார்.
இவரது ஆலோசனையின் பேரில் நிறைய பேர் தங்களது நிலங்களில் சோற்றுக் கற்றாழையை பயிரிட்டு வளர்த்து லாபம் ஈட்டி வருகின்றனர். இவரிடம் பயிற்சி பெற்ற பலர் இன்று சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி, தொழில் முனைவோராக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசமில்லா விவசாயம், நஞ்சில்லா உணவு, நோயில்லா சமுதாயம் என்பதை அடிப்படைத் தத்துவமாக கொண்டு, சோற்றுக் கற்றாழை, சமையல் மூலிகைகள், சிறுதானிய உணவுகள் போன்றவற்றை பயன்படுத்தி, இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் ஆகியவை இணைந்த ஆரோக்கிய வாழ்வுக்கு வழி கூறும் சோற்றுக் கற்றாழை அய்யா இராம. சண்முகம் அவர்களிடம் பயிற்சி பெற விரும்புவோர், விரும்பும் நிறுவனங்கள் பின்வரும் முகவரியில் அவரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சோற்றுக்கற்றாழை அய்யா இராம. சண்முகம்- 162 பி, கே.என்.பி. சாலை (அரசு மருத்துவமனை அருகில்), காரமடை – 641 104, கோயமுத்தூர் மாவட்டம்.
மேலும் விவரங்களுக்கு அவரை 93621 38926 என்ற எண்ணிலும், www.aloeverashanmugam.org, [email protected] என்ற சமூக வலைதளங்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
நலம் தரும் நற்குமரியை பயன்படுத்துபவரின் வாழ்க்கை, வளம் மிகுந்து சிறக்கும் என முத்தாய்ப்பாய் தெரிவிக்கிறார் சோற்றுக் கற்றாழை அய்யா இராம. சண்முகம்.