கொரோனா தடுப்பூசி Covaxin பின்னுள்ள விவசாயியின் மகன் Dr.கிருஷ்ண எல்லா!
பாரத் பயோடெக்கின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா, அவசரகால பயன்பாட்டிற்காக Covaxin-க்கு ஒப்புதல் அளித்த டி.சி.ஜி.ஐ-க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதையடுத்து நாடு முழுவதும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பெயர் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. பாரத் பயோடெக்கின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா, அவசரகால பயன்பாட்டிற்காக Covaxin-க்கு ஒப்புதல் அளித்த டி.சி.ஜி.ஐ-க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
“இது இந்தியாவின் தயாரிப்பு மேம்பாட்டுக்கான ஒரு பெரிய பாய்ச்சல்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோவாக்சின் மற்றும் பாரத் பயோடெக்கின் பயணத்தை பற்றி விரிவாகக் கூறிய டாக்டர் எல்லா,
"உலகளவில் 18க்கும் மேற்பட்ட மருத்துவப் பரிசோதனைகளை நாங்கள் செய்துள்ளோம். வளரும் நாடுகளில் மிக அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் எங்களுடையதுதான்,” என்கிறார்.
கொரோனா வைரஸ் பாதுகாப்புத் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
“நாங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தளத்தில் வெரோ செல்- கலாச்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் அனைத்து தடுப்பூசிகளும் இதே தளத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. இது மிகவும் பாதுகாப்பானது," என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான தடுப்பூசியை உருவாக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள கிருஷ்ணா எல்லா-வின் வாழ்க்கை குறித்து பார்ப்போம்...
யார் இந்த கிருஷ்ணா எல்லா?
தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் டாக்டர் கிருஷ்ணா எல்லா. திருத்தணியில் பிறந்த எல்லாவின் தந்தை ஒரு விவசாயி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், விவசாயப் படிப்பை தேர்வு செய்து படித்தார். படிப்பை முடித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபட விரும்பிய அவர், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக ‘பேயர்’ (Bayer) என்கிற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ’பேயர்’ என்பது மருந்து மற்றும் வேதிமப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தில் விவசாயப் பிரிவில் பணியில் சேர்ந்தார் கிருஷ்ண எல்லா.
அந்த சமயத்தில் ரோட்டரியின் Freedom From Hunger என்கிற திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்தது. இதன்மூலம் அமெரிக்கா சென்ற இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி முடித்த கையோடு 1995-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். குறைந்த விலையில் ஹெப்படைடிஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் திட்டத்துடன் இந்தியா திரும்பினார்.அதன்படி, ஹைதராபாத்தில் ஒரு சிறிய ஆய்வகத்தைத் தொடங்கினார். அதுவே காலப்போக்கில் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தொடங்க விதையாக அமைந்தது.
அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவிடம், 1996ம் ஆண்டு மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத பயோடெக் எஜூகேஷனல் பூங்கா அமைக்கும் திட்டத்தை முன்வைத்தார் கிருஷ்ணா எல்லா. இதையடுத்து அவருக்கு பூங்கா அமைக்க அனுமதியும், இடத்தையும் அரசு வழங்கியது.
ஜிகா வைரஸூக்கு எதிராக உலக அளவில் முதன் முதலில் மருந்து கண்டுபிடித்த பெருமைக்குரியது பாரத் பயோடெக் நிறுவனம். தனது கடின உழைப்பால், டாக்டர் கிருஷ்ணா எல்லா, பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
“சாமானிய மக்களைச் சென்றடையும் விதத்தில் தடுப்பூசி மருந்து தயாரித்தால் தரம் குறைவாக இருக்கும் என்கிற குற்றச்சாட்டு எழும். ஆனால் தொழில்நுட்பம் சாமானிய மனிதர்களையும் சென்றடையவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எந்த ஒரு மனிதருக்கும் சுகாதாரம் தொடர்புடைய தீர்வு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படக்கூடாது. இதற்காகத் தான் எங்கள் நிறுவனம் குறைந்த விலையில் நோய் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கிறது,” என்கிறார் கிருஷ்ணா எல்லா.
140க்கும் மேற்பட்ட காப்புரிமைகளுடன், 166க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டுள்ளது பாரத் பயோடெக் நிறுவனம். இது 116 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக ரோடாவெக் தடுப்பூசியை உருவாக்கி சாதனை படைத்தது. இது உலகையே அச்சுறுத்தி வந்த ரோடா வைரஸூக்கு எதிராக செயல்படக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.