2020ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன தெரியுமா?
இந்த ஆண்டு கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய தகவல்கள் பட்டியலில் கொரோனா வைரஸ் இரண்டாவது இடத்தையும், ஐபிஎல் கிரிக்கெட் முதலிடத்தையும் பிடித்துள்ளன.
இந்த ஆண்டு, இணையத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய விஷயங்களின் பட்டியலில், ஐபிஎல் முதலிடத்திலும் கொரோனா வைரஸ் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேர்தல், பிகார் தேர்தல் முடிவுகளும் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன.
முன்னணி தேடியந்திரமான கூகுள் ஆண்டுதோறும் அதிகம் தேடப்படும் தகவல்களை பட்டியலிட்டு வருகிறது. இதே போல, 2020ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தகவல்களின் பட்டியலையும் கூகுள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், கொரோனா வைரஸ் முக்கிய இடம் பிடித்தாலும், இந்தியர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐபிஎல் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியர்களால் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தகவல்கள் பட்டியலில், அமெரிக்க தேர்தல், பிகார் தேர்தல், தில்லி தேர்தல் ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன. மேலும், அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், பிரதமரின் விவசாயிகள் திட்டம் (பிஎம் கிஸான் ஸ்கீம்), சர்ச்சைக்குறிய தொலைக்காட்சி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி ஆகிய தகவல்களும் முதல் பத்து இடங்களில் வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
ஜோ பைடன், அர்னாப் கோஸ்வாமி தவிர, பாலிவுட் நடிகை கனிகா கபூர், மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களாக உள்ளனர். பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவாத், ரியா சக்ர்வர்த்தி ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
வடகொரிய அதிபர் கிம் ஹாங் உன், அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் ஆகியோரும் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களாக உள்ளனர்.
சூரைப்போற்று
இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட திரைப்படமாக தில் பேச்சாரா இருக்கிறது. நடிகர் சூரியாவின் சூரைப்போற்று திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தி படங்கள் டான்ஹாஜி, சகுந்தலா தேவி மற்றும் கஞ்சன் சக்சேனா அடுத்த இடங்களை பிடித்தன.
Laxmii, Baaghi 3, Gulabo Sitabo ஆகிய படங்கள் முன்னிலை வகிக்கும் நிலையில், எக்ஸ்ட்ராக்ஷன் மட்டும் ஒரே ஹாலிவுட் படமாக முன்னிலையில் உள்ளது.
பொது முடக்கக் காலத்தில் Money Heist, ஸ்கேம் 1992- தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி, பிக்பாஸ் 14 ஆகிய தொடர்கள் அதிகம் தேடப்பட்டதாக கூகுள் தெரிவிக்கிறது.
செய்தி நிகழ்வுகளில் ஐபிஎல், கொரோனா மற்றும் அமெரிக்க தேர்தல்கள் முன்னிலை வகிக்கின்றன. பொதுமுடக்கம், வெட்டிக்கிளி தாக்குதல், ஆஸ்திரேலியா காட்டுத்தீ ஆகியவையும் அதிகம் தேடப்பட்டன.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது எப்படி?, பன்னீர் செய்வது எப்படி? இரத்தம் என்றால் என்ன? பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? ஆகிய கேள்விகள் முன்னிலை வகித்ததாக கூகுள் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பொது முடக்கக் காலத்தில், அருகாமையில் ('Near me') சார்ந்த விஷயங்களும் அதிகம் தேடப்பட்டன. இந்த வகையில், 'Food shelters near me', 'COVID test near me.' ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
கட்டுரை தொகுப்பு: சைபர் சிம்மன்