'இந்தியாவின் மறுசுழற்சி மனிதர்’ - செங்கல் ஆகும் முகக்கவசம், பிபிஇ கிட் கழிவுகள்!
மருத்துவமனைகள், பள்ளிகள், சலூன், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர பொது இடங்களில் ‘இகோ பின்’ அமைத்து பயோமெடிக்கல் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
பினிஷ் தேசாய் குஜராத்தைச் சேர்ந்தவர். இவர் BDream நிறுவனத்தின் நிறுவனர். இவரது நிறுவனம் தொழிற்சாலைக் கழிவுகளை கட்டுமானப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் கவனம் செலுத்துகிறது. இவர், 'மறுசுழற்சி மனிதர்’ என்றே அழைக்கப்படுகிறார் பினிஷ்.
பினிஷ்; இதற்கு முன்பு பேப்பர் மில்களில் உற்பத்தியாகும் கழிவுகளைக் கொண்டு P-Blocks செங்கற்களை உருவாக்கினார். தற்போது கோவிட்-19 தொடர்பான மருத்துவக் கழிவுகளைக் கொண்டு அதேபோன்று P-Block 2.0 செங்கற்களை வடிவமைத்துள்ளார்.
இந்தியாவில் நாள் ஒன்றிற்கு 101 மெட்ரிக் டன் அளவிற்கு கோவிட்-19 தொடர்புடைய பயோமெடிக்கல் கழிவுகள் உற்பத்தியாவதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் (CPCB) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வழக்கமாக நாள் ஒன்றிற்கு உற்பத்தியாகும் 609 மெட்ரிக் டன் பயோமெடிக்கல் கழிவுகள் அல்லாமல் இது கூடுதல் கழிவுகளாகும்.
“தற்போதைய சூழலில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை பயன்படுத்தப்பட்ட பிறகு நிலத்தில் கொட்டப்படுகின்றன. எனவே நான் ஏற்கெனவே உருவாக்கும் செங்கற்களில் இவற்றைப் பயன்படுத்த எண்ணினேன். ஏற்கெனவே நான் உருவாக்கிய P-Block செயல்முறையில் முகக்கவசம், கையுறைகள், பிபிஇ உடைகள் போன்றவற்றை சேர்த்து சோதனை செய்தேன்,” என்றார் பினிஷ்.
இந்த சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தனது தயாரிப்பை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி அனுமதி பெற உள்ளூர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
“கொரோனா பெருந்தொற்று காரணமாக சர்வதேச அளவில் செயல்படும் ஆய்வகங்களுக்கு அனுப்ப முடியவில்லை. ஆனால் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் இருந்து அனுமதி பெற்றுள்ளோம். இந்தத் தயாரிப்பின் முன்வடிவம் பரிசோதிக்கப்பட்டதில் இதன் தரமும் நீடிப்புத்தன்மையும் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
ஒவ்வொரு செங்கலும் 12X8X4 அங்குலம் கொண்டுள்ளது. ஒவ்வொரு சதுர அடிக்கும் 7 கிலோ பயோகழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. P-Block 1.0 உடன் ஒப்பிடும்போது எடை குறைவாக இருப்பதுடன் வலுவாகவும் இருப்பதாக பினிஷ் தெரிவிக்கிறார். அத்துடன் நீர் புகா தன்மை கொண்டதாகவும் தீயெதிர்ப்பு திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செங்கல் ஒன்றின் விலை 2.8 ரூபாய்.
செப்டம்பர் மாதம் முதல் மருத்துவமனைகள், பள்ளிகள், சலூன், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர பொது இடங்களில் ‘இகோ பின்’ அமைத்து நெய்யப்படாத பிபிஇ கழிவுகளை சேகரித்து முழு வீச்சில் தயாரிப்புப் பணிகளைத் தொடங்க பினிஷ் திட்டமிட்டுள்ளார்.
இந்தத் தொட்டிகள் நிரம்பியிருப்பதைக் குறிக்கும் வகையில் அடையாளப்படுத்தப்படும். அவ்வாறு நிரம்பியதும் 72 மணி நேரம் வரை அந்தத் தொட்டி அப்படியே விடப்பட்டு, முழுமையாக கிருமிநீக்கம் செய்யப்பட்டு, துண்டாக்கப்பட்டு பேப்பர் கழிவுகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படும்.
தகவல் மற்று பட உதவி: தி பெட்டர் இந்தியா