‘லவ் ஹீல்ஸ் கேன்சர்’ - முதலீட்டு வங்கியாளர் பணியை விட்டு புற்றுநோயாளிகளுக்கு உதவும் கிஷன் ஷா!
கிஷன் ஷா ‘லவ் ஹீல்ஸ் கேன்சர்’ என்கிற என்ஜிஓ மூலம் புற்றுநோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் புற்றுநோய் தொடர்பான ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெற உதவுகிறார்.
கிஷன் ஷா முதலீட்டு வங்கியாளர். முன்னணி நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை செய்து வந்தார். ஆனால் ஒருகட்டத்தில் புற்றுநோயாளிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. உடனே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். கல்லூரியில் உடன் படித்த டிம்பிள் பர்மார் உடன் இணைந்து 'லவ் ஹீல்ஸ் கேன்சர்’ என்கிற லாப நோக்கமற்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
”என்னுடைய நண்பருக்கு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டார். மூட்டு வலி இருக்கும். தூங்க முடியாமல் அவதிப்பட்டார். ஹை டோஸ் மருந்துகள், கீமோதெரபி என இவரது நாட்கள் நகர்ந்தன. இத்தனை வலிகளையும் பொறுத்துக்கொண்டும் இறுதியில் உயிரிழந்துவிட்டார்,” என்கிறார் 'லவ் ஹீல்ஸ் கேன்சர்’ நிறுவனர் கிஷன் ஷா.
ஆரம்ப நாட்கள்
கிஷன் ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்தவர். இவரது அப்பாவிற்கு இந்தோனேசியாவில் வேலை. கிஷன் ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோதே இந்தோனேசியா சென்றுவிட்டார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பள்ளிப்படிப்பையும் உயர்நிலைக் கல்வியையும் முடித்தார்.
2002-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். நிதித் துறையில் இவருக்கு ஆர்வம் இருந்ததால் அதில் பல்வேறு ப்ரொஃபஷனல் கோர்ஸ் முடித்தார்.
”சிறு வயது முதலே எண்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. நிதி திட்டமிடல், செலவுகளை நிர்வகிப்பது, போர்ட்ஃபோலியோ பகுப்பாய்வு போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. இதனால் வணிகவியல் பிரிவில் முதுகலைப் பட்டமும் நிதி மேலாண்மை பாடங்களும் படித்தேன்,” என்றார்.
நண்பரின் மரணம்
அதன் பிறகு ஐஐஎம் கொல்கத்தாவில் எம்பிஏ படித்தார். அந்த சமயத்தில்தான் அவரது நண்பர் நித்தேஷ் பிரஜாபத் புற்றுநோய் பாதிப்பால் அவதியுறுவதைப் பார்த்தார். நிதேஷூம் அவரது மனைவி டிம்பிளும் அலோபதி மட்டுல்லாது பல்வேறு மாற்று சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ந்து வந்தனர். நம்பிக்கையுடன் எவ்வளவோ போராடியும் நோயை வெல்ல முடியவில்லை. நித்தேஷ் உயிரிழந்தார். இவரது இறப்பு கிஷனை வெகுவாக பாதித்தது.
புற்றுநோய் குறித்த புரிதலும் விழிப்புணர்வும்
கிஷன் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தார். புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காகவே நோய் குறித்து அதிக தகவல்களைத் திரட்டியுள்ளார். புற்றுநோய் குறித்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்தியாவில் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏதோ ஒரு வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 லட்சம் தனிநபர்களுக்கு நோய் கண்டறியப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“இவ்வாறு பாதிக்கப்படுவோர் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவ விரும்பினேன். என் வாழ்க்கையை இதற்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்தேன். என் வேலை விட்டு விலகினேன்,” என்றார்.
புற்றுநோயாளிகளைப் பராமரிப்பது குறித்து புரிந்துகொள்ள பல்வேறு பயிற்சிகள் எடுத்துக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகள் நோயை எதிர்த்துப் போராட ஊக்குவித்தார். நோய் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 2019-ம் ஆண்டு ZenOnco.io என்கிற இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் தொடங்கப்படுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
லவ் ஹீல்ஸ் கேன்சர்
புற்றுநோயாளிகள், புற்றுநோயாளிகளைப் பராமரிப்பவர்கள், அவர்களது குடும்பத்தினர் போன்றோருக்கு ஆதரவளித்து ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன் ‘லவ் ஹீல்ஸ் கேன்சர்’ என்கிற லாப நோக்கமற்ற நிறுவனத்தை கல்லூரி தோழியுடன் சேர்ந்து நிறுவியுள்ளார் கிஷன்.
“புற்றுநோய் பாதிக்கப்பட்ட பலர் சரியான சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு ஆதரவளித்து சரியான தகவல்களை வழங்கி சேவையளிக்கவே இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம்,” என்கிறார் கிஷன்.
JP Morgan நிறுவனத்திலும் அதைத் தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த GIC நிறுவனத்திலும் முதலீட்டு வங்கி பகுதியில் செயல்பட விரும்பியதால் ஆரம்பத்தில் லவ் ஹீல்ஸ் கேன்சர் செயல்பாடுகளில் பகுதி நேரமாகவே இணைய திட்டமிட்டிருந்தார். ஆனால் புற்றுநோயாளிகளுக்கு உதவவேண்டும் என்கிற ஆர்வம் அதிகமிருந்ததால் முழு நேரமாக இதில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் நண்பர்களும் உறவினர்களும் இவரது முடிவிற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். எனினும் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
தாக்கம்
புற்றுநோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் புற்றுநோய் தொடர்பான ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெற கிஷன் உதவுகிறார். கிஷன் மக்களை ஒன்றிணைத்து புற்றுநோயாளிகளுக்கான சப்போர்ட் குரூப் உருவாக்குகிறார்.
”நான் தற்போது செய்து வரும் சேவையை என் வாழ்க்கை முழுவதும் தொடருவேன். நிதி சார்ந்த செயல்பாடுகளைக் காட்டிலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு சேர்ப்பதே எனக்கு திருப்தியளிக்கிறது,” என்கிறார் கிஷன்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா