ஒரே குடும்பத்தில் மூன்று மருத்துவ மாணவர்கள் - நீட் தேர்வில் விவசாயியின் பிள்ளைகள் அடுத்தடுத்து தேர்ச்சி!
அரசுப் பள்ளி மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் எனும் நிலை மாறி, அரசுப் பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விவசாயியின் 3 பிள்ளைகள் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களால் நீட் தேர்வை தேர்ச்சி பெறுவது கடினம் எனும் நிலை மாறி, அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளாலும் மருத்துவராக முடியுமென நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டுகின்றனர் மாணவர்கள். அப்படியொரு சம்பவம் தான் இந்தாண்டும் நிகழ்ந்துள்ளது. அதுவும், அரசுப் பள்ளியில் படித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை. 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், விவசாயம் செய்து வருகிறார். அவரது மனைவி மாதம்மாள். தம்பதியினருக்கு சந்தியா என்ற மகளும், ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
மூவரும், 1 முதல் 8 ஆம் வகுப்பை தண்டுகாரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியிலும், 9 முதல் 12 வகுப்பை ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளனர். மூத்த மகள் பள்ளிப்படிப்பை நன்றாக படித்து வந்ததால், அவரை நிலத்தை விற்றாவது டாக்டராக்க வேண்டும் அவரது பெற்றோர் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையிலே, 2019ம் ஆண்டு சந்தியா 12ம் வகுப்பை முடித்துள்ளார்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் சென்னையில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் மகளை சேர்த்து படிக்க வைத்தார். ஆனால், அம்முறை அவர் நீட் தேர்வில் தகுதி பெறவில்லை. அவரது டாக்டர் கனவை கலைத்துக் கொண்டு, தர்மபுரி அரசு கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, நீட் தேர்வில் 7.5% சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டத்தை அன்றைய அதிமுக அரசு நிறைவேற்றியது. இதனால் மீண்டும் உத்வேகம் பெற்ற அவர், வீட்டில் இருந்தே நீட் தேர்விற்காக படித்தார்.
அந்த சமயம், கொரோனா லாக்டவுனால் கல்லுாரிகளுக்கு நீண்ட விடுப்பு வழங்கபடவே, அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டார். விடாமுயற்சியுடன் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சியும் பெற்றார். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அவரது மருத்துவக் கனவை நிறைவேற்றினார். தற்போது மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார் சந்தியா.
இதுகுறித்து ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.தங்கவேலு கூறுகையில்,
"மூவரும் தங்கமான பசங்க... சென்னையில் நீட் பயிற்சிக்காக ரூ1.5 லட்சத்தை அவரது அப்பா செலவிட்டார். ஆனால், சந்தியா 2019ம் ஆண்டு நீட் தேர்வில் 165 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த ஆண்டு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டபோது அவரது ஆசிரியர்கள் அவரை விண்ணப்பிக்க ஊக்குவித்தார்கள். 2020ம் ஆண்டில் வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்குத் தயாரானார். நாங்கள் அவளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்தோம். தேர்வில் தேர்ச்சியும் பெற்றார்," என்று அவர் கூறினார்.
தம்பிகளுக்கு பாதை அமைத்த அக்கா!
அரசு உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்.,சேர்ந்த சந்தியா, அவரது இரு தம்பிகளுக்கும், ஒரு நல்வழிகாட்டியாகினார். பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல் வீட்டிலிருந்து படித்தே மருத்துவ கனவை சாதித்த அக்காவை ரோல் மாடலாக்கி கொண்ட தம்பிகள், வரிசையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வினை துணிச்சலுடன் சந்தித்தனர். ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ் இருவரும் எம்.பி.பி.எஸ் சேர வேண்டும் என்று தீவிரமாக படிக்க ஆரம்பித்தனர். மூவரது முயற்சிக்கும் அவரது பள்ளி ஆசிரியர்கள் ஆதரவளித்து தோள் கொடுத்தனர்.
ஹரிபிரசாத்தின் பயிற்சி செலவுக்கு ஏலகிரி பள்ளி ஆசிரியர்களே ஒன்று சேர்ந்து நிதி திரட்டி, நீட் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். நீட் தேர்வின் ரிப்பீட்டர் ஆன அவர், 2023ம் ஆண்டில் 434 மதிப்பெண்களைப் பெற்றார். கடந்த 2023-24 கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஹரி பிரசாத் மருத்துவப் படிப்பில் இணைந்தார்.
அதேபோல், சூரிய பிரகாசுக்கும் அவரது பள்ளி ஆசிரியர்கள் நிதியுதவி அளித்துடன், பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு ஒரு அறக்கட்டளையின் உதவியையும் பெற்றனர். கடந்தாண்டு நீட் தேர்வில் 250 மதிப்பெண்கள் எடுத்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் 545 மதிப்பெண்கள் பெற்று, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து அக்காவுக்கு ஜூனியராகியுள்ளார்.
"ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பள்ளியில் இருந்து குறைந்தது இரண்டு மாணவர்களாவது மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். 2015ம் ஆண்டு முதல் இதுவரை 12 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாணவர்கள் பிடிஎஸ் சேர்ந்துள்ளனர்,'' என்று பெருமையுடன் நாளிதழ் ஒன்றிடம் அளித்த பேட்டியில் பகிர்ந்தார் தலைமையாசிரியர் தங்கவேலு.
அரசுப் பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தகுதி பெற்று எம்.பி.பி.எஸ் சேர்ந்து பள்ளிக்கு பெருமைத் தேடி தந்துள்ளனர். அதே போல், விவசாயியின் பிள்ளைகள் மூவரும் மருத்துவ கனவை நிறைவேற்றியிருப்து அக்கிராம மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'என்னால படிக்க முடியல; இப்போ என் மக சாதிச்சுட்டா' - நீட் தேர்வில் வென்ற மகளின் தாய் ஆனந்தக்கண்ணீர்!