ஸ்டார்ட் அப்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ அதிரடி சலுகைகள் அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள 2 முதல் 5 லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் பலன் பெறுவதற்கான சலுகை திட்டங்களை ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 340 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ், 42வது பொது பேரவைக் கூட்டத்தின் போது, நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளில் சில, உள்ளூர் ஸ்டார்ட் அப் சூழலுக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ளன.
2020 ஜனவரி 1 முதல், ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவின் இளம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இலவச கிளவுட் சேவைகள் மற்றும் இணைப்புச் சேவைகள் வழங்கும். மைக்ரோசாப்ட் உடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் சாத்தியமாகும் அஸ்யூர் சேவையும் இதில் அடங்கும்.
"jio.comல் அனத்து ஸ்டார்ட் அப்களும் தங்களுக்கான பேக்கேஜிற்கு பதிவு செய்து கொள்ளலாம்,’’ என்று முகேஷ் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், “ஒரு ஸ்டார்ட் அப்பை செயல்படுத்துவதற்கான செலவில் 80 சதவீதம் உள்கட்டமைப்பிற்கு செல்கிறது. இந்த செலவை குறைத்து விடுகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
இது மட்டுமல்லாமல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஜியிஓ, மாதாந்திர டிஜிட்டல் சேவைகளும் அளிக்கிறது. இது ரூ.1,500 ல் இருந்து துவங்குகிறது. இந்நிறுவனங்கள் பொருளாதாரத்தின் அடித்தளம் என்று அம்பானி குறிப்பிட்டார்.
"அவர்கள் வர்த்தகத்தை செயல்படுத்த, தற்போது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, இணைப்பு, செயல்திறன் மற்றும் ஆட்டோமேஷன் சேவைகள் மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகிறது. இதே போன்ற சேவைகளுக்கு வெளிநாடுகளில் வாடிக்கையாளர்கள் 1,000 டாலர் மாதம் செலுத்துகின்றனர். சிறிய நிறுவனங்களுக்கு இந்த வசதிகளை இணைப்புடன், பத்தில் ஒரு பங்கு விலைக்கு அளிக்கும் துணிச்சலான முடிவை இன்று எடுத்துள்ளோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் 2 முதல் 5 லட்சம் ஸ்டார்ட் அப்கள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக மாதம் ரூ.3 முதல் 5 லட்சம் வரை செலவு செய்யும் நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஏற்ற திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம், விவசாயம், திறன் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வது மற்றும் நிதி ஆதரவு அளிப்பதை ரிலையன்ஸ் தொடரும்.
“ஜியோவும் இந்தியர்களுக்காக, இந்தியர்களால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப்பாகும். எங்கள் இதயத்தில் ஸ்டார்ட் அப்களுக்கான சிறப்பு திட்டம்,“ இருக்கிறது என முகேஷ் அம்பானி கூறினார்.
ஜியோ சேவைக்கு துணை புரியும் 14 ஸ்டார்ட் அப்களில் நிறுவனம், ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. மேலும், ஜியோ சேவை, மூன்று ஆண்டுகளுக்குள் 340 சந்தாதாரர்களை பெற்றிருப்பதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். நான்கு வளர்ச்சி இயந்திரங்களை முடுக்கி விட நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
”இந்த இயந்திரங்களில் இருந்து வருமானம் இந்த நிதியாண்டில் இருந்தே வரத்துவங்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோவின் முதலீடு சுழற்சி முடிவு பெற்றிருப்பதாகவும், அதி வேக 4 ஜி நெட்வொர்க்கில் ரூ.3.5 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2016 முதல் ஜியோவின் பயணம் அற்புதமானது என்று கூறியவர், ஜியோ வருகைக்கு முன் இந்தியா டேட்டாவில் இருண்டு இருந்ததாகவும் கூறினார்.
“ஜியோ, இந்தியாவை டேட்டாவில் பளிச்சிட வைத்துள்ளது. இன்று ஜியோ 340 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வளர்ச்சிக்கான வாய்ப்பு அபிரிமிதமாக உள்ளது. அரை பில்லியன் வாடிக்கையாளர்களை எங்களால் அடைய முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தியாவின் காரணமாக, ஜியோ நாட்டில் மிகப்பெரிய ஆப்பரேட்டாராக உருவாகி இருப்பதோடு, உலக அளவில் ஒற்றை மேடையில் இரண்டாவது பெரிய ஆப்பரேட்டராக உருவாகி உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
ஜியோவின் முதலீடு சுழற்சி முற்றுப்பெற்றுள்ளது. செயல்திறனை அதிகரிக்க சிறிய அளவு முதலீடே தேவை என்றும் அவர் கூறினார். “இண்டெர்நெட் ஆப் திங்ஸ், இல்லம் மற்றும் நிறுவன பிராட்பேண்ட், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிராட்பேண்ட் ஆகிய வளர்ச்சி இயந்திரங்களை வருவாய்க்காக முடுக்கிவிட உள்ளோம்.”
கடந்த மாதம் தான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், முதல் முறை இணைய பயனாளிகளுக்கு உதவுவதற்கான டிஜிட்டல் கல்வித் திட்டத்தை அறிவித்தது. ’டிஜிட்டல் உடான்’ எனும் இந்த திட்டத்திற்கான பயிற்சி வழிகாட்டிகள், ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்