வண்ண ஓவியங்கள், கற்பனைக் கதைகள்: குழந்தைகளை குதூகலப்படுத்தும் ‘தும்பி’ சிறார் இதழ்!
நம் குழந்தைகளுக்கு எண்ணற்ற நெகிழியால் ஆன பொம்மைகளை வாங்கி தருவதை காட்டிலும், குழந்தைகளின் வண்ணமயமான மாயாஜால உலகை அழகிய ஓவியங்கள் மற்றும் கதைகள் மூலமாக ஒரு துளி ஜீவன் கூட குறையாமல் தாங்கி வரும் தும்பி சிறுவர் இதழை வாங்கி தருவது சாலச் சிறந்தது.
ஒவ்வொரு மனிதனும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்த பருவம்...
அறியாமை என்பது இயல்பாய் இருந்த பருவம்...
முன்னேற்றம் என்பது படி ஏறும்போது மட்டுமே என்ற பருவம்...
அப்பா மட்டுமே ஹீரோவாக இருந்த பருவம்...
தந்தையின் தோளே உயர்வான இடமாய் இருந்த பருவம்...
காயம் என்பது கீழே விழுந்தால் மட்டுமே என்ற பருவம்...
பொம்மைகள் உடைந்தால் மட்டுமே வருத்தப்படும் பருவம் தான் கள்ளமில்லா குழந்தை பருவம்..!
இப்படி கற்பனைகளும், தூய்மைத்துவமும், அழகியல்களும் சூழ்ந்த குழந்தைகள், மண்ணில் விழுந்து புரண்டு விளையாடிய காலம் போய், இன்று வரவேற்பறைக்குள் கார்ட்டூன் சேனல்களுக்குள்ளும், ஸ்மார்ட்-போன்களுக்குள்ளும் தொலைந்து போகிறார்கள்.
அதீத நேரம் Digital Screen-ஐ உற்று நோக்குவதால் விசால கவனிப்பு திறன் குறைந்து, அதீத கோப உணர்ச்சிக்கு ஆட்பட்டு தன் இயல்பை தொலைகின்றனர்.
மேலும், கதைகளால் நிரம்பிய குழந்தைகளின் உலகம், தாத்தாக்களும் பாட்டிகளும் நிறைந்த நம் வீடுகளில் கதைகள் தழும்ப தழும்ப நிறைந்திருந்தன. அதேபோல், கதையுணரும் குழந்தைகளின் அகம் விரியும் என்பர்.
ஆனால், இன்று கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனங்கள் அதிகரித்துவிட்டது தாத்தா பாட்டிகள் இல்லாத கதைகள் அற்ற குடும்பங்களில் குழந்தைகள் வெறுமையாக நிற்கின்றன.
இவ்வாறு கள்ளமில்லா குழந்தை பருவம் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து வருவதை நம் ஒவ்வொருவரும் உணர்ந்து வருகின்றோம்.
இந்நிலையில், ’எங்கோ இருக்கும் ஏதோவொரு குழந்தையின் ஏக்கத்தினாலும், பெற்றோரின் வேண்டுதலாலும்’ உருவானது தான் ’தும்பி’ என்ற குழந்தைகள் இதழ்!
குழந்தைகளின் இயல்பான வண்ணமயமான மாயாஜால உலகை அழகிய ஓவியங்கள் மற்றும் கதைகள் மூலமாக ஒரு துளி ஜீவன் கூட குறையாமல் தாங்கி வருகிறது தும்பி சிறார் இதழ்.
ஒவ்வொரு பக்கத்திலும் அள்ளித் தெளிக்கப்பட்ட கற்பனைகள், வண்ணங்கள் என தும்பி இதழ் அனைவரையும் ஈர்க்கிறது.
ஆதி தொட்டே மனிதனுக்கு ஓவியங்கள் மீதான ஆர்வம் அளப்பரியது என்பது நாம் அறிந்ததே.
வண்ண வண்ண ஓவியங்கள், அழகிய கதைகள், குழந்தைகளின் கற்பனை திறன் மற்றும் கவனிப்பு திறனை அதிகரிப்பதோடு, இயற்கையோடும் தன்னைச்சுற்றியுள்ள சூழலோடும் ஒத்திசைந்து வாழும் எண்ணத்தை இப்புத்தகத்தின் வாயிலாக இளம்பருவத்திலேயே குழந்தைகள் அடைகிறார்கள்.
மொத்தத்தில் தும்பி குழந்தை புத்தகம், குழந்தைகளோட அற்புதமான கனவு உலகை அச்சிட்டு உயிரோட வைத்திருக்கிறது.
தும்பி குழந்தைகள் இதழ் மாதப்புத்தகமாக தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் தற்போது தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளிவருகிறது.
இதுவரை, 60 மாத இதழ்களை வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு இதழும் தனிதன்மையோடும், பக்கங்கள் முழுக்க முழுக்க நல்ல ஓவியங்களுடன், அழகான மொழியில், சமரசமில்லாத தரத்தோடு மாதாமாதம் வெளிவந்து குழந்தைகளை குதூகலப்படுத்திவருகிறது.
இத்தகைய நல்முயற்சிகளின் நீட்சியாக, தற்போது பார்வையற்றோரும் படிக்கும் விதமாக Braille System முறையில் அச்சிடப்பட்டு வெளியிட்டு வருகின்றன.
கண்பார்வையற்ற குழந்தைகளுக்கான பிரெய்ல் அச்சு மாத இதழ் என்பது பிராந்திய மொழிகள் எதிலும் இதுவரை நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவ்வகையில் தும்பி பிரெய்ல் அச்சு நூல் அத்தகைய பெருஞ்செயற்கனவை முதன்முதலில் தமிழில் துவங்கிவைத்திருக்கிறது.
ரூ.1000 செலுத்தினால் போதும் தும்பி இதழின் வருட சந்தாவை பெறுவீர்கள், பிறகு மாதாமாதம் தும்பி சிறார் இதழை உங்களது வீட்டின் விலாசித்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
நம் குழந்தைகளுக்கு எண்ணற்ற நெகிழியால் ஆன பொம்மைகளை வாங்கித் தருவதை காட்டிலும் அழகிய வண்ண ஓவியக் கதைகள் அடங்கிய இந்த தும்பி சிறுவர் இதழை வாங்கி தருவது சாலச் சிறந்தது.
இம்மாதிரியான சிறார் சிற்றிதழ்கள் அரசுப்பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு நூலகங்களில் இடம்பெற்றால் தும்பி மாதிரியான சிற்றிதழ்கள் தமிழ்ச்சூழலில் நம்பிக்கையோடு இயங்க வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி, குழந்தைகளின் அகவுள்ளத்தை குளிரச் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைக்கு ஆற்றும் தொண்டாகக் கருதி, தும்பி குழுவினர்கள் ’தும்பி ரயில் பயணம்’, ’தும்பி நாடக விழா’, ’தும்பி குழந்தைகள் கொண்டாட்டம்’ என பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கின்றனர்.
ரயில் பயணமே செய்திராத குழந்தைகளுக்கு, ஒரு ரயில் பெட்டி முழுவதும் குழந்தைகளின் மாயஜால உலகமாக மாற்றி நல்ல ரயில் அனுபவத்தை கொடுக்க முயல்வதே, தும்பி உடன் ஓர் ரயில் பயணம்.
இந்த ரயில் பயணத்தில் ஒரு பெட்டி முழுவதும் குழந்தைகளின் ஹிரோவான கோமாளிகள், இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், பொம்மைகள் என பலர் தனக்கே உரிய பாணியில் பேசி, பாடி, நடித்து குழந்தைகளை மகிழ்விக்கின்றனர் .
அத்துடன் அரசு உதவிகள் அதிகம் போய் சேராத மிகவும் பின்தங்கிய மலை கிராமங்களில் உள்ள குழந்தைககளின் கற்பனைத் திறனும், உள்ளுணர்வும் நிறைந்து மலர அழகிய நூலகத்தை அமைத்துத் தருகின்றனர்.
இவர்களின் அளப்பரியா செயலை பாராட்டி, ஆனந்த விகடன் சிறந்த சிறார் இதழுக்கான விருது 2017- ல் தும்பிக்கு கொடுக்கப்பட்டது.
இவ்வாறு தன்னலமின்றி செயலாற்றும் தும்பி குழுவினர்களின் செயல்கள் இச்சமூகத்தின் நல்விதைகளாய் நாளை உருவெடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.
ஒரு கூட்டுப்புழு, சிறகு வளர்ந்து தன் கூட்டை உடைத்து வெளியேறும் ஒரு பறத்தலின் சுதந்திரத்தை... ஒவ்வொரு எளிய குழந்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற விருப்பத்தோடு மிகுந்த பொறுப்புடன் இயக்கிக் கொண்டிருக்கும் தும்பி இதழின் குழுவினர்களுக்கு யுவர்ஸ்டோரியின் வாழ்த்துக்கள்..!
Contact Details : 98438 70059