ஒரே வாரத்தில் இந்தியாவில் Tiktok-ன் ஸ்டார் ரேட்டிங் குறைந்தது ஏன்?
இந்தியாவில் டிக்டாக் செயலி வேகமாக வளர்ச்சியடைந்தாலும் அதிலுள்ள மோசமான உள்ளடக்கங்கள் காரணமாக எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.
டிக்டாக் இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல் அதற்கு இணையாக பிரச்சனைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய யூட்யூபர் கரிமினாட்டி அண்மையில் டிக்டாக் மற்றும் யூட்யூப் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இந்த யூட்யூபருக்கு 18 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
‘யூட்யூப் vs டிக்டாக்: தி எண்ட்’ என்கிற தலைப்பில் வெளியான இவரது வீடியோவில் டிக்டாக் உருவாக்குபவர்கள் யூட்யூபில் இருந்து உள்ளடக்கங்களைத் திருடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் சமூக வலைதளங்களில் டிக்டாக் மற்றும் யூட்யூப் ஆதரவாளர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து யூட்யூப் வேறு வழியின்றி அந்த வீடியோவை நீக்கவேண்டியதாயிற்று. இதனால் டிக்டாக் செயலியின் ரேட்டிங் மதிப்பு குறைந்துள்ளது.
ஒரே வாரத்தில் 4.6-ஆக இருந்த ஸ்டார் ரேட்டிங் 2-ஆகக் குறைந்தது. பல்வேறு இந்தியப் பயனர்கள் இந்தச் செயலி தடை செய்யப்படவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்றனர்.
#TikTokBan #TikTokExposed போன்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. TikTok Lite மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ப்ளேஸ்டோரில் இதன் ஸ்டார் ரேட்டிங் 1.1-ஆக குறைந்துள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் தளத்தில் உள்ளடக்கங்களை மட்டுறுத்தும் கொள்கைகள் மோசமாக இருப்பதாகவும் இதனால் தீங்கு விளைவிக்கக்கூடிய தவறான உள்ளடக்கங்கள் பகிரப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
டிக்டாக்-ல் ஒரு பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவது போன்றும் அந்தப் பெண்ணின் முகம் சிதைந்திருப்பது போன்றும் அண்மையில் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியானது. ஆசிட் வீச்சை ஆதரிப்பது போல் இந்த வீடியோ அமைந்துள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாகவும் சமூக வலைதள பயனர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதில் சில வீடியோக்கள் மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் இதுபோன்ற உள்ளடக்கங்களை வெளியிட்டதால் டிக்டாக் செயலியை தடைசெய்யவேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா.
“டிக்டாக் செயலி தடைசெய்யப்படவேண்டும் என்பதை இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். இதில் மோசமான வீடியோக்கள் வெளியிடப்படுவதுடன் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து இளம் தலைமுறையினர் பயனற்ற முறையில் நேரத்தைக் கடத்தத் தூண்டுகிறது,” என்று ட்வீட் செய்துள்ளார்.
டிக்டாக் செய்தித்தொடர்பாளர் யுவர்ஸ்டோரி இடம் கூறும்போது,
“டிக்டாக்கில் பயனர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். எங்கள் தளத்திற்கான விதிமுறைகள் மிகத்தெளிவாக உள்ளது. எங்கள் கொள்கைகளின்படி மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய அல்லது ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அல்லது பெண்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. எங்கள் வழிகாட்டுதல்களுக்கு புறம்பான உள்ளடக்கங்களை நீக்குவதுடன் அந்தக் கணக்கையும் நீக்கிவிடுகிறோம். சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து பணியாற்றுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
டிக்டாக் ஏற்கெனவே சந்தித்த பிரச்சனைகள்
டிக்டாக் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்தச் செயலியில் ஆபத்தான வீடியோக்கள் உருவாக்கப்படுவதுடன் வைரலாகவேண்டும் என்கிற நோக்கத்தை முன்னிறுத்தியே வீடியோக்கள் உருவாக்கப்படுவதாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
டிக்டாக் செயலியைத் தடை செய்யவேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் முதல் முறையாக இணையம் பயன்படுத்தும் ஏராளமானோர் வீடியோ உருவாக்கும் இந்தச் செயலியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
டிக்டாக் 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளேஸ்டோரில் 315 மில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டதாக சென்சார் டவர் தெரிவிக்கிறது. உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் 200 மில்லியன் பயனர்களுடன் மிகப்பெரிய அளவில் டிக்டாக் செயல்படுகிறது.
இவ்வாறு பிரபலமாகும்போது பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டியதும் அவசியமாகிறது. டிக்டாக் இந்தியாவின் விற்பனை மற்றும் பார்ட்னர்ஷிப் பிரிவின் இயக்குநர் சச்சின் சர்மா கூறும்போது,
“பயனர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டு இணக்கமாகவே செயல்படுகிறோம். பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். சமூக வழிகாட்டுதல்களுக்கு புறம்பாக உள்ள உள்ளடங்களை எப்போதும் டிக்டாக் ஊக்குவிப்பதில்லை. எனவே பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் பிரத்யேக நபர்கள் அடங்கிய குழுவின் உதவியுடனும் உள்ளடக்கங்களை மட்டுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,” என்று தெரிவித்திருந்தார்.
“இந்தியாவில் உள்ளடக்கங்களை மட்டுறுத்தும் குழுவில் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அடங்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
டிக்டாக் வழிகாட்டுதல்களுக்கு புறம்பான பயனரின் கணக்கு நீக்கப்படுகிறது. இதனால் வீடியோ உருவாக்குபவர்கள் தங்கள் கணக்கில் லாக் இன் செய்யவோ பதிவிடவோ முடியாது.
“சட்ட அமலாக்கத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை அளிக்கிறோம்,” என்று டிக்டாக் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா