50 ஆயிரத்தில் துவக்கி, 500 மில்லியன் டாலர் மதிப்பு நிறுவனத்தை உருவாக்கிய டிம் சென்!
கை நிறைய சம்பளம் தரும் வேலையில் இருந்து திடிரென நீக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதோடு, அதிலிருந்து மீண்டு வருவதும் சவாலானதாக இருக்கும். ஆசிய அமெரிக்கரான டிம் சென்னும் பத்தாண்டுகளுக்கு முன்னர் இப்படி வேலை இழந்தவர் தான். ஆனால் இன்று, அவர் 500 மில்லியன் டாலர் மதிப்பு மிக்க ’Nerd Wallet’ நிறுவனத்தை வழிநடத்துகிறார்.
சோதனையில் இருந்து மீண்டு சாதனை படைத்த டிம் சென்னின் ஊக்கம் அளிக்கும் கதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் வாருங்கள்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையில் பட்டம் பெற்ற டிம் சென், நிதித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். பெரி கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களில் அவர் நிதி விஷயங்களை நிர்வகிக்கும் மேலாளராக இருந்தார்.
ஆனால் 2008ம் ஆண்டு நிதித்துறையில் பிரச்சனை வெடித்து பொருளாதார தேக்கநிலை உண்டான போது அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் அவர் வேலையை இழந்தது இன்னும் சோகமானது.
சென், எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கையில் சாதனைகளை துரத்திச்செல்லும் குணம் படைத்தவர் என்பதால் வேலையை இழந்து நின்றதால் கூடுதலாகவே கவலை அடைந்தார்.
வேலையை இழந்து நிலைக் குலைந்து போய் நின்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் சகோதரி, குறைந்த வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம் கொண்ட ஒரு கிரெடிட் கார்டை பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தார்.
சென், நிதித்துறையில் அனுபவம் மிக்கவர் என்பதால், அவரால் சரியான கிரிடெட் கார்டை பரிந்துரைக்க முடியும் என சகோதரி நினைத்திருக்க வேண்டும். இதற்கு பதில் அளிக்க முற்பட்ட சென், ஒரு கூகுள் தேடலில் இதை கண்டுபிடித்திவிடலாம் என நினைத்திருந்தார்.
ஆனால் கூகுளில் கிரெடிட் கார்டு விவரங்களை தேடிப்பார்த்த போது தான் அவருக்கு ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. கண்ணில் பட்ட எல்லாத் தகவல்களும் விற்பனை நோக்கிலானதாகவும், விளம்பர நோக்கிலானதாகவும் இருந்தன. இவற்றை கொண்டு சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது சாத்தியமில்லை என அவருக்கு புரிந்தது.
சகோதரியை ஏமாற்ற விரும்பாத சென், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அளிக்கும் சேவைகளில் இருந்து தகவல்களை சேகரித்து, அவற்றை ஒப்பிட்டு பார்க்கக் கூடிய வகையில் அழகாக எக்ஸெல் கோப்பு ஒன்றில் பட்டியலிட்டு அனுப்பி வைத்தார்.
சென் அனுப்பிய எக்ஸெல் கோப்பு அவரது சகோதரிக்கு உதவியாக இருந்ததோடு, குடும்ப வட்டாரத்தில் மேலும் பலருக்கு பகிரப்பட்டது. அப்போது தான், சென்னுக்கு இதையே ஒரு இணையச் சேவையாக வழங்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் சேவைகள் தொடர்பான தகவல்களை திரட்டி, அவற்றின் விளம்பரத் தன்மை இல்லாமல் ஒப்பிட்டு பார்க்கக் கூடிய நிதிச்சேவைக்கு தேவை இருப்பதாக அவர் நம்பினார். இந்த நம்பிக்கையோடு, வெளிப்படையான வகையில் நிதிச்சேவைகளை தேர்வு செய்ய வழிகாட்டுவதற்கான இணைய சேவையை அளிக்க விரும்பினார்.
இப்படித் தான் அவரது ’நெர்ட் வாலெட்’ (Nerd Wallet) இணையதளம் பிறந்தது. இந்த தளம், கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற சேவைகள் தொடர்பான தகவல்களை ஒப்பிட்டு பார்க்க வழி செய்தது. மேலும் வழிகாட்டும் கட்டுரைகளையும் வழங்கியது.
சென் கைவசம் இருந்த 800 டாலர் (50,000 ருபாய்) தொகையைக் கொண்டு இந்த இணைதளத்தை தனது வீட்டில் இருந்தே துவக்கினார். தொழில்முறை பத்திரிகையாளர்களைக் கொண்டு கட்டுரைகள் எழுத வைத்தார்.
அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்திற்கு ஒரளவு வரவேற்பு இருந்தாலும் அவர் மணிக்கணக்கில் உழைக்க வேண்டியிருந்தது. மேலும் வருவாய் குறைவாக இருந்ததால் செலவுகளை இன்னும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த போது, இணையதளத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது வேலை தேடிச்செல்வதா? எனத்தெரியாமல் குழம்பினார். ஆனால், பொருளாதார தேக்க நிலைக் காரணமாக வேலை கிடைக்காததால், இணையதளத்தை தொடர்ந்து நடத்தினார்.
நெர்ட் வாலெட் இணையதளத்திற்கு ஓரளவு திருப்தியான போக்குவரத்து இருந்ததால், கொஞ்சம் தாக்குப்பிடித்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. படிப்படியாக அவரது இணையதளத்திற்கான பார்வையாளர்கள் மற்றும் வருவாய் இரண்டுமே அதிகரித்தது.
2010ம் ஆண்டில் வருவாய் மூன்று மடங்காக உயர்ந்தது. சென் இனி நிதித்துறையில் வேலைக்கு போவதில்லை என தீர்மானித்தார். அடுத்த சில ஆண்டுகளில் அவரது நிறுவனத்திற்கு 105 மில்லியன் டாலர் நிதி கிடைத்தது.
தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆட்குறைப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டாலும், நிறுவனத்தின் வளர்ச்சிப்பாதையில் சென் உறுதியாக இருக்கிறார்.
நெர்ட் வாலெட் நிறுவனம், இன்று 500 மில்லியன் டாலர் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படையான தன்மையுடன் நிதிச்சேவைகளை தேர்வு செய்ய பரிந்துரைக்கும் அதன் சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனான கூட்டு மூலம் வருவாயும் வருகிறது.
நெர்ட் வாலெட்டை துவக்கிய போது, வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தியதாகவும், ஆனால் இன்று நிறுவன வெற்றி சமூக அக்கரையை ஏற்படுத்தியிருப்பதாகவும், நுகர்வோருக்கு தேவையான தகவல்களை அளிப்பதற்கே முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் சென் பேட்டி ஒன்றில் உற்சாகமாக கூறியிருக்கிறார்.