வார இறுதியில் ஓய்வு நேரத்தை சமூக நலனுக்காக செலவிட உதவும் குறிப்புகள்!
உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் என்ஜிஓ-க்கள் மூலமாக உங்களை ஈடுபடுத்திக் கொண்டு சமூக நலனில் பங்களிக்கலாம்.
“மற்றவர்களுக்கு சேவை செய்வதே நாம் நம்மை கண்டறிவதற்கான சிறந்த வழி” என்கிறார் மகாத்மா காந்தி. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நாம் அனைவரும் நம்முடைய சுய முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். சமூக நலனில் பலர் அக்கறை காட்டுவதில்லை.
நாம் வார இறுதி நாட்களில் சமூக நலனில் பங்களிக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம். அத்தகைய நடவடிக்கைகளின் பட்டியலை வழங்குகிறது சோஷியல்ஸ்டோரி.
என்ஜிஓ-வில் தன்னார்வலப் பணிகளில் ஈடுபடலாம்
இந்தியாவில் சமூக நலனுக்காக செயல்படும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் உள்ளன. இந்த என்ஜிஓ-க்களில் பெரும்பாலும் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். இவர்கள் சமூக நலப்பணிகளில் பங்களிக்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள என்ஜிஓ-க்களின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும். உங்களது பெயர், தொலைபேசி எண், தொழில், ஆர்வமுள்ள தன்னார்வலப் பணிகள் உள்ளிட்ட விவரங்களை வழங்கவேண்டும்.
மேக் ஏ டிஃப்ரென்ஸ் (MAD), கம்பேஷன் அன்லிமிடெட் ப்ளஸ் ஆக்ஷன் (CUPA), மேஜிக் பஸ், தி அக்ளி இண்டியன், கூன்ஞ், ஹெல்பேஜ் இந்தியா உள்ளிட்டவை தன்னார்வலர்களை எப்போதும் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் சில என்ஜிஓ-க்கள்.
காடு வளர்ப்புத் திட்டத்தில் இணையலாம்
நகரமயமாக்கல் காரணமாக பசுமைப் போர்வை குறைந்து வருகிறது. இன்று நகர்புறங்களில் மரங்களைக் காட்டிலும் கட்டிடங்களையே அதிகம் பார்க்கமுடிகிறது.
இருப்பினும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பெருநகரங்களைச் சுற்றிலும் காடு வளர்ப்பு, மரம் நடுதல் போன்ற முயற்சிகளைத் தொடங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள், பணிக்கு செல்வோர், இல்லத்தரசிகள் போன்றோர் தன்னார்வலப் பணிகளில் இணையும் வகையில் இத்தகைய திட்டங்களில் பெரும்பாலானவை வார இறுதியில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் இந்த என்ஜிஓ-க்கள் குறித்த தகவல்களைப் பெறலாம். மரக்கன்று நடும் முறை, உபகரணங்களை கையாளும் முறை என முழுமையான தகவல்களைப் பெறலாம்.
ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்லலாம்
ஆதரவற்றோர்களுடன் நேரம் செலவிடுவது மன நிறைவைத் தரும். அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடியும் வேடிக்கையாக விளையாடியும் பொழுதைக் கழிக்கலாம். பல குழந்தைகள் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இன்றி வளர்ந்தவர்கள் என்பதால் இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
எனவே வார நாட்களில் வழக்கமான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பினும் வார இறுதியில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைத் தேடிச் சென்று நேரம் செலவிடுங்கள்.
விலங்குகள் காப்பகத்தில் உதவலாம்
எந்த ஒரு நகரில் உள்ள சாலைகளை நீங்கள் கடந்து சென்றாலும் நாய்களும் பூனைகளும் பசியுடன் சுற்றித் திரிவதை நீங்கள் காணலாம். இந்த விலங்குகள் உணவு கிடைக்காமல் அவதிப்படுவதுடன் சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபடுவதாலும் மனிதர்கள் தாக்குவதாலும் இவற்றிற்கு காயங்கள் ஏற்படுகின்றன.
சிலர் இவற்றைக் கண்டும் காணாமல் கடந்து சென்றுவிட்டாலும் பல்வேறு விலங்குகள் காப்பகங்கள் மற்றும் என்ஜிஓ-க்கள் பறவைகள் மற்றும் விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து வருகின்றன. விலங்குகள் காப்பகங்களின் பல்வேறு நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு விலங்குகளின் மீது அன்பு செலுத்தலாம்.
சமூக நலனிற்காக நிதி உயர்த்தலாம்
லாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் தங்களது நிதி உயர்த்தும் முயற்சி பலரைச் சென்றடைய டிஜிட்டல் மீடியாக்களை பயன்படுத்திக்கொள்கின்றன. கூட்டுநிதி தளங்கள் இத்தகைய செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. சரியான நிதி உயர்த்தும் டூலை தேர்வு செய்வது, உள்ளடக்கங்களை உருவாக்குவது, லேண்டிங் பக்கத்தை வடிவமைப்பது, ஹேஷ்டேக் உருவாக்குவது, சரியான நபர்களைச் சென்றடைவது என பல்வேறு வழிகளில் என்ஜிஓ-க்கள் நிதி உயர்த்த உதவலாம்.
நீங்கள் வார இறுதி நாட்களில் உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் ஒதுக்கினால் உங்களால் சமூக நலனில் சிறப்பாக பங்களிக்கமுடியும்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா