வார நாட்களில் ஐடி வேலை; ஓய்வு நேரங்களில் சேவை!
வேலூரைச் சேர்ந்த தினேஷ் சரவணன் சென்னை ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக கை நிறைய சம்பாதித்தாலும், வார இறுதி நாட்களில் கழிவறைக் கட்டிக் கொடுப்பதில் இருந்து இலவச சாப்பாடு, மரக்கன்று நடுதல் என பல சமூகப் பணிகளை செய்கிறார்.
ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பது அல்லது செல்போன், கம்யூட்டரில் சமூக வலைதளங்களில் தன்னை மறந்து மூழ்கி விடுவது என தடம் மாறிவிட்ட இளைஞர்கள் மத்தியில், சமூகப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்கிறார் கம்ப்யூட்டர் இஞ்சினியர் தினேஷ் சரவணன்.
வேலூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் உள்ள ஓர் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக கை நிறைய ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார். இருப்பினும் வார இறுதி நாட்கள் மற்றும் தனது ஓய்வு நேரங்களில் தன்னைச் சுற்றி உள்ள சமுதாயத்தில் பின்தங்கி கஷ்டப்படுபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். இதற்காகவே தன் ஊதியத்தில் ஓர் பகுதியையும் ஓதுக்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் பேசியபோது, வேலூரில் கணிப்பொறி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற நான், சென்னை கிண்டியில் உள்ள ஓர் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன்.
“சராசரி இளைஞனாக வாழ்ந்து வந்த என் வாழ்வை என் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் சம்பவம் மாற்றிவிட்டது. ஆம். அதுதான் என் மூத்த சகோதரரின் மரணம். 2014ல் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த என் சகோதரர் சரவணன் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் தன்னால் இயன்றவரை முழு நேரமும் பிறருக்கு உதவுவதையே தன் முழுநேரப் பணியாக செய்து வந்தவர். அவரது மறைவு எனக்குள் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, அவர் விட்டுச் சென்ற பணியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்,” என்கிறார்.
அப்பா பால் வியாபாரி, அம்மா குடும்பத்தலைவி, உடன்பிறந்த 3 சகோதரர்கள் என மிகச் சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னைச் சுற்றி வாழும் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதை மையக் கருத்தாக கொண்டு ஓய்வு என்பதே பிறருக்கு உதவுவதற்குத்தான் என்பதுபோல தன்னால் இயன்ற அளவுக்கு சமூக சேவைப் பணிகளில் கடந்த 5 ஆண்டுகளாக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார் தினேஷ் சரவணன்.
தொடக்கத்தில் நான் மட்டும் தனியாகத்தான் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். பின்னர் வார இறுதி நாட்களில் எனது நண்பர்களுடன் இணைந்து வீடு, வீடாகச் சென்று மரக்கன்றுகளை வழங்குவது, ஏழ்மையில் வாடுபவர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்குவது, சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, துணிகள் வழங்குவது என்பன போன்ற பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தேன் என்கிறார்.
இவரின் சமூக சேவைகளை பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக அறிந்த பிற தன்னார்வலர்களும் இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இதற்கென தனி வாட்ஸ்அப் குரூப் ஓன்றைத் தொடங்கி, அதன்மூலம் வார இறுதி நாள்களில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து திட்டமிட்டு, அனைவரும் இணைந்து சமூக சேவை செய்து வருகின்றனர். அந்தந்த வாரப் பணியில் பங்கேற்க விரும்புவோர் தங்களுக்குள் விவாதித்து குறிப்பிட்ட இடத்தில் கூடி, தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்று தங்கள் திட்டமிட்டப் பணியை மேற்கொள்கின்றனர்.
தற்போது எங்களது வாட்ஸ்அப் குரூப்பில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். நாங்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இதில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கிறோம். யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை. விரும்புவோர் வந்து பணிகளில் பங்கேற்கலாம்.
சமீபத்தில் கூட வேலூர் அலமேலுரங்கபுரத்தில் சித்ரா என்ற கணவரை இழந்த இரு குழந்தைகளின் தாயார் வீட்டில் கழிப்பறை வசதியின்றி மிகுந்த அவதியுற்று வந்தார். அவருக்கு நாங்கள் ரூ.38 ஆயிரம் செலவில் கழிப்பறை மற்றும் குளியலறை அமைத்துக் கொடுத்தோம். மேலும், எங்களுக்கு வரும் பணம், நாங்கள் அதில் செலவு செய்யும் போன்ற அனைத்தையும் வெளிப்படையாக எங்களது பிளாக் மற்றும் முகநூலில் வெளியிட்டு விடுவோம்.
விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு மண்வெட்டி போன்ற விவசாய உபகரணங்களை வழங்கி ஊக்குவித்து வருகிறோம். இதேபோல சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு பண்டிகை மற்றும் விசேஷ நாள்களில் புத்தாடை மற்றும் விருந்து வழங்குவதையும் தொடர் வழக்கமாக வைத்துள்ளோம்.
இதேபோல ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மருந்துகள் என தங்களால் இயன்ற அளவுக்கு தன்னைச் சுற்றியுள்ள சக மனிதர்களுக்கு உதவி செய்வதையே பெரும் பணியாக எண்ணி செயல்பட்டு வருகிறார் தினேஷ்.
வேலூர் பகுதியில் இதுவரை 16 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, அவற்றுக்கென பாதுகாவலர்களையும் நியமித்து அந்த மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
“குறைந்தபட்சம் 1 லட்சம் மரக்கன்றுகளாவது நடுவதே தனது லட்சியம் எனக் கூறும் தினேஷ், பள்ளி, கல்லூரி மாணவர்களை மரக்கன்றுகளை வளர்க்க ஊக்குவித்து, அதற்கென பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மதிப்பெண்களை வழங்கவேண்டுமென்ற தனது திட்டத்தையும் தெரிவிக்கிறார். இது மாணவர்களிடையே மரக்கன்றுகளை வளர்க்கும் ஆர்வம் பெருக்கும் என்கிறார் அவர்.
விளம்பரத்துக்காக சேவை செய்யும் சமூகத்தில், தனது இடையறாத பணிகளுக்கு இடையேயும், ஓயாது சமூகப் பணியாற்றி வரும் தினேஷ் சரவணனின் பணி நிச்சயம் பாராட்டுதலுக்குரியதாகும்.
தினேஷ் தொடர்பு கொள்ள: 9791325230