திருப்பூர் தோழிகள் தொடங்கிய குழந்தைகள் துணி ப்ராண்ட்: ரூ.150 கோடி இலக்கை நோக்கிய வெற்றிக்கதை!
சூர்யபிரபா, சக்திப்ரியதர்ஷினி, காயத்ரி ஆகிய மூவரும் 2015-ம் ஆண்டு தொடங்கிய திருப்பூரைச் சேர்ந்த BeeLittle நிறுவனம் குழந்தைகளுக்கு இயற்கையான துணிகளால் ஆன ஆடைகள் மற்றும் இதர துணி வகைகளையும் வழங்குகிறது.
குழந்தைகள் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கை போன்றவை செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்டிருந்தால், குழந்தைகளின் உடல் சூடு அதிகரிப்பதுடன் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருந்தால் அதன் நச்சுத்தன்மை சருமத்தை பாதிக்கிறது.
சூர்யபிரபா, சக்திப்ரியதர்ஷினி, காயத்ரி ஆகிய மூவரும் கல்லூரி தோழிகள். இவர்கள் குழந்தைகளுக்கான தரமான, இயற்கையான ஆடைகளையும் ஆக்சசரிகளையும் வழங்கத் தீர்மானித்தனர். BeeLittle என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கினார்கள்.
திருப்பூரில் அமைந்துள்ள இந்நிறுவனம் இயற்கையான துணி வகைகளைக் கொண்டு குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் துணி வகைகளைத் தயாரிக்கிறது.
”குழந்தைகளுக்கு நூறு சதவீதம் இயற்கையான தயாரிப்புகளை வழங்கவேண்டும் என்பதே எங்கள் ஸ்டார்ட் அப்'பின் நோக்கம். நாங்கள் இயற்கையான துணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். இயற்கையான துணி என்றால் பருத்தி மட்டுமல்ல, ஆர்கானிக் காட்டன் பயன்படுத்துகிறோம். பாலியஸ்டர், சிந்தடிக் போன்றவை பயன்படுத்தப்படுவதில்லை,” என்கிறார் சூர்யபிரபா.
அவர் மேலும் விவரிக்கும்போது,
“ஒவ்வொரு குழந்தைக்கும் முதன் முதலாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் இயற்கையானதாக இருக்கவேண்டும். இதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். இது குழந்தைக்கு மட்டுமல்ல இயற்கை அன்னைக்கும் நன்மை பயக்கும்,” என்கிறார்.
இந்த ஸ்டார்ட் அப் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாரம்பரிய பொருளான கபோக் சில்க் காட்டன் பயன்படுத்தியே பெரும்பாலான படுக்கைப் பொருட்களைத் தயாரிக்கிறது.
“சிறந்த வகை கபோக் சில்க் காட்டனைத் தேர்வு செய்து வாங்க பிரத்யேகமாக ஒரு குழு செயல்படுகிறது. அடர்ந்த நிறங்கள் சாயமிடப்படுவதையும் ரசாயனங்கள் சார்ந்த பிராசசிங் செயல்முறையைத் தவிர்க்கவும் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே தயாரிப்புகளை வழங்கி வருகிறோம்,” என்கிறார் சூர்யா.
அதேபோல், இயற்கையான பேக்கேஜிங் பொருட்கள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார்.
“மின்வணிக மாதிரியில் செயல்படுவதால் அதிகம் பேக்கேஜ் செய்யவேண்டியிருக்கும். இருப்பினும் எங்கள் பேக்கேஜில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துவிடுகிறோம். செலவு அதிகம் என்றாலும் கார்ன் ஸ்டார்ச் அல்லது பேப்பர் பயன்படுத்துகிறோம்,” என்கிறார்.
BeeLittle மின்வணிக தளங்கள் மூலம் விற்பனை செய்கிறது. அதுமட்டுமின்றி கோயமுத்தூரிலும் திருப்பூரிலும் தலா ஒன்று என இரண்டு ஆஃப்லைன் ஸ்டோர்களும் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் பேர் வலைதளத்தைப் பார்வையிடுவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. சுமார் 300 வகைகளில் 60 தயாரிப்புகளையும் 1,600 எஸ்கேயூ-க்களையும் கொண்டுள்ளது.
“ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலம் 30 சதவீத வருவாயும் மின்வணிக சந்தை மூலம் 70 சதவீத வருவாயும் கிடைக்கிறது,” என்கிறார் சூர்யா.
ஆரம்ப நாட்கள்
ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான தொட்டில் மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், இத்தனை ஆண்டுகளில் பத்திற்கும் மேற்பட்ட பிரிவுகளுடன் விரிவடைந்துள்ளது. இணை நிறுவனர்களான தோழிகள் மூவரும் 2015-ம் ஆண்டு Vaira Baby Boutique என்கிற பெயரில் சிறியளவில் வீட்டிலிருந்தே இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
“அந்த சமயத்தில் எங்கள் மூவருக்கும் சின்னக் குழந்தைகள் இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு தரமான தயாரிப்புகளைத் தேடினோம். சந்தையில் கிடைத்த தரமற்ற பொருட்களை வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்தியாவில் உயர்தர காட்டன்/மஸ்லின் உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட இந்திய சந்தைக்கு இவை கிடைப்பதில்லை. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன,” என்கிறார் சூர்யா.
”நச்சு கலக்கப்படாத, மென்மையான துணிகளை குழந்தைகளுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று நமது பாட்டி சொல்வதுண்டு. ஆனால், அப்படிப்பட்ட தயாரிப்பு சந்தை கிடைப்பதில்லை. அதனால் அம்மாக்களுக்கு உதவக்கூடிய வகையில் பாரம்பரியத்தை புதிய வடிவில் கொடுக்க விரும்பினோம்,” என்கிறார்.
நண்பர்களும் உறவினர்களும் ஆரம்பத்தில் இவர்களது தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். படிப்படியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
“ஆரம்பத்தில் விளம்பரத்திற்கு எந்த செலவும் செய்யவில்லை. இருந்தபோதும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான துணி வகைகள் வேண்டும் என எங்களைத் தேடி வந்தார்கள். முதல் குழந்தைக்கு வாங்கிய பெற்றோர் இரண்டாவது குழந்தைக்கு எங்களிடமே வந்து வாங்கினார்கள். பாட்டி, தாத்தாக்கள் வந்து தங்கள் பேரக்குழந்தைகளுக்கு வாங்கிச் சென்றனர். இதுபோன்ற செயல்களேஎ எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது,” என்கிறார் சூர்யா.
அம்மாக்களுடன் கலந்து பேசி அவர்களது குழந்தைகளுக்கான தேவைகளைப் புரிந்துகொண்டு தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. தற்போது 70 பேர் கொண்ட குழுவாக இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு வருகிறது.
ஆர்கானிக் காட்டன்
GOTS சான்றிதழ் பெற்ற துணிகளை BeeLittle பயன்படுத்தி ஆர்கானிக் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.
”நாங்கள் ஆரம்பத்திலிருந்தே ஒரே தயாரிப்பாளரிடமிருந்து துணிகளை வாங்கி வருகிறோம். 2018-ம் ஆண்டு வேறு ஒரு தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு முறை ஆர்டர் கொடுத்தோம். ஆனால் தரத்தில் எங்களுக்கு திருப்தியில்லை. எனவே ஒரே தயாரிப்பாளரிடமிருந்து தொடர்ந்து வாங்கி வருகிறோம்,” என்கிறார்.
BeeLittle மஸ்லின் தயாரிப்புகள் மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிருதுவானதாக இருப்பதுடன் நீடித்திருக்கும்.
”துணிகளை வாங்கும்போது இடைத்தரகர்களைத் தவிர்த்துவிட்டு நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறோம். கைவினைஞர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால் தரமான தயாரிப்புகளை எளிதாக வழங்கமுடிகிறது,” என்கிறார்.
இலக்காகக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள்
23-35 வயதுடைய பெண்களை இலக்காகக் கொண்டு BeeLittle செயல்படுகிறது. இவர்கள் தங்கள் குழந்தைகளுக்காகவோ வேறொருவருக்குப் பரிசாகக் கொடுப்பதற்காகவோ வாங்குகின்றனர்.
“ஒருமுறை வாங்கிவிட்டால் போதும். அடுத்தடுத்து மீண்டும் வாங்குகின்றனர். 10-15 முறை வாங்கியவர்களும் உண்டு. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் பெற்றோர்கள் இருக்கும் இடங்களுக்கோ நேரடியாக வெளிநாடுகளுக்கோ ஆர்டர் செய்கின்றனர்,” என்கிறார் சூர்யா.
ஸ்லீவ்லெஸ் ஆடைகள் பெங்களூரு, வட இந்தியா போன்ற குளிரான பிரதேசங்களுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. எனவே இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தயாரிப்புகளை வழங்கவும் BeeLittle திட்டமிட்டு வருகிறது.
வருங்காலத் திட்டங்கள்
அடுத்த மூன்றாண்டுகளில் 150 கோடி ரூபாய் வருவாய் எட்டப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளதாக சூர்யா தெரிவிக்கிறார்.
H&M Kids, FirstCry, Hopscotch, Mothercare India போன்றவை BeeLittle போட்டியாளர்கள்.
1.5 லட்ச ரூபாய் ஆரம்பகட்ட முதலீட்டுடன் இந்த ஸ்டார்ட் அப்பைத் தொடங்கியுள்ளனர். BeeLittle ஒவ்வொரு மாதமும் 30 சதவீத வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
“வரும் நாட்களில் ஏற்கெனவே உள்ள பிரிவுகளில் புதிய தயாரிப்புகளையும் புதிய பிரிவுகளையும் இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஆண்டு மும்மடங்கு வளர்ச்சியடைவோம் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் விரிவடைந்து நம்பகத்தன்மையுடைய பிராண்டாகத் திகழவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார் சூர்யா.
ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வன் | தமிழில்: ஸ்ரீவித்யா