தமிழ்நாடு பட்ஜெட் 2022: பள்ளி முதல் கோயில் வரை; பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட் முழு தொகுப்பு இதோ!
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022 - 2023ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022 - 2023 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்ற திமுக அரசு கடந்த மாதம் ஆகஸ்ட் 13ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் தாக்கல் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் மேஜையின் முன்பு கணினிகள் பொருத்தப்பட்டன.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த முறையும் இடைக்கால பட்ஜெட்டைப் போலவே ’காகிதமில்லா பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணி அளவில், ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கியதும், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சியினரின் செயலைக் கண்டித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் முதலமைச்சர்களாக இருந்ததை சுட்டிக்காட்டினார்.
அதிமுகவினரின் அமளிக்கு இடையிலும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து வாசித்தார். ‘பிணியின்மை செல்வம் ஏமம் விளைவின்பம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து’ என்ற திருக்குறளுடன் உரையைத் தொடங்கினார். மக்களுக்கு நோயற்ற வாழ்வு. விளைச்சல் மிகுதி, பொருளாதார வாம். இன்ப நிலை. உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்பதே அதன் பொருளாகும்.
வருவாய் பற்றாக்குறை குறைய வாய்ப்பு:
2014 ஆம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், முதன் முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். நடப்பு ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளதாக அறிவித்தார்.
ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு கோடி ஒதுக்கீடு:
- இலவச பாடப்புத்தகம், அகழாய்வு பணிகள், அருட்காட்சியகங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ் வளர்ச்சித்துறைக்கு 82.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீர்வள ஆக்கிரமிப்புகளை மீட்பது, வெள்ள பாதிப்புகள், ஓய்வூதியத் திட்டங்கள் போன்றவற்றிற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7 ஆயிரத்து 474.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- காவல்துறைக்குத் தேவையான கட்டமைப்புகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த 10,285.22 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைத்திடநீதி நிர்வாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பயிர், நகைக்கடன் தள்ளுபடி, சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, வட்டியில்லா பயிர்கடன் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவதற்காக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மொத்தம் 13,176.34 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீர் நிலைகளை சீரமைத்தல், புதிதாக தடுப்பணைகள், கதவணைகள் அமைத்தல், அணைகளை புனரமைத்தல் போன்ற பணிகளுக்காக நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப்பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு, ’வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில்தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக கால்நடை பராமரிப்புத் துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பூங்காக்கள் அமைத்தல், விலங்குகள் நலம், வனப்பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இல்லம் தேடி கல்வி திட்டம், ஸ்மார்ட் கிளாஸ், புதிய வகுப்பறைகள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பள்ளி கல்வித்துறைக்கு ஒட்டுமொத்தமாக 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 7.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களுக்காக உயர்கல்வித்துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
- ’ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்’, வடசென்னையில் விளையாட்டு வளாகம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு 293.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 17,901.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 4,281.76 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- மத்திய அரசின் வீட்டு வசதித்திட்டம், கிராம சாலை திட்டம் உள்ளிட்டவை உட்பட பல திட்டங்களை செயல்படுத்த 106) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு 26,647.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
- வீட்டுவ சதிமற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறைக்கு 8,737.71 கோடி ரூபாய்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு இனி மாதம் ரூ.1000:
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் திட்டமாக மாற்றியமைக்கப்படுவதாக தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை இடைநிற்றல் இன்றி வரை படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தார்.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1,949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5,922.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அறிவிப்புகள்:
பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்திட 25 கோடி ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பல நாடுகளின் போட்டிகளுக்கு மத்தியில், தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறிய அவர்,
”தமிழ்நாட்டின் விளையாட்டு துறையில் திருப்புமுனையாக அமையவுள்ள, சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற அரசு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கும்,” எனக் குறிப்பிட்டார்.
பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:
இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக விளக்கும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலமாக 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
வரும் நிதியாண்டில் STEAM திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட முன்மாதிரி பள்ளிகள் 15 மாவட்டங்களில் தொடங்கப்படும் என்றும், இதற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் அறிவித்தார்.
அனைத்து அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திடத்தின் மூலமாக 18 ஆயிரம் புதிய வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ், அதிநவீன கணினி ஆய்வகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்:
தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தம் தொடங்கப்பட உள்ளது, இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப்புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொற்கையில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து ஆழ்கடலாய்வுகளை மேற்கொள்ள 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களைஅவற்றின் தனித்துவம்மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும்பொருட்டுஇக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு நடப்பு ஆண்டில் சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் முதல் முதியவர்கள் வரை கவர்ந்திழுக்கும் திட்டங்கள்:
- 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருளர்களுக்கு மொத்தமாக 1443 வீடுகள் கட்டித்தரப்படும்.
- 19 மாவட்டங்களில் புதிய தலைமை மருத்துவமனைகளை உருவாக்க, 1,019 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- காவல்துறை சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களால் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் விதமாக “சமூக ஊடக சிறப்பு மையம்” புதிய திட்டம் அறிமுகம்.
- பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு
- “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்ற புதிய திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- சாத்தனூர், சோலையார், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைமேம்படுத்தவும் உலகவங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1,064 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு
- சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும். ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக நடப்பு ஆண்டிற்கு மட்டும் 5.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணங்களை செலுத்த 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். மாநகர பேருந்துகளில்
- மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள ரூ.1520 மானியம் அளிக்கப்படும்.
- காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.
- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
- 500 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளும் 2213 டீசலில் இயங்கும் பேருந்துகளும் வாங்கப்படும்.
- மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.1062 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்ட ரூ.2030 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பிரதமரின் வீடு வசதித்திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு
தலைநகர் சென்னைக்கான அறிவிப்புக்கள் என்னென்ன?
- சென்னையில் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு
- சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- சென்னை அருகே லண்டனைச் சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
- மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
- மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து, 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்க திட்டம்.
- உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (IMH),தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்தப்படும்.
- கிண்டி குழந்தைகள் பூங்கா 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை பூங்காவாக மறுவடிமைப்பு செய்யப்படும்.